Tuesday, October 2, 2018

பஞ்சு எனத் தொடங்கி நெஞ்சு என முடியும் வெண்பாக்கள்....!!!!



பஞ்சனைய மேகங்கள் பாங்குடன் நீந்திவந்து 
வஞ்சமின்றித் தொட்டுரசும் வானவில்லை! - மஞ்சுளமாய்க் 
கார்முகில் கூடிவர கானமயி லாடிடும் 
நேர்த்தியில் பூத்திடும் நெஞ்சு. 

பஞ்சுமெத்த காத்திருக்கு! பக்கம்வா பொன்மயிலே! 
பிஞ்சுவிரல் பட்டதிலே பித்தானே(ன்) - அஞ்சுகமே 
சொக்கவச்ச சுந்தரியே! தூங்காம வொன்நெனப்பில் 
நிக்காம துள்ளுதடி நெஞ்சு. 

பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் பக்கத்தில் நானிருக்க 
அஞ்சாம லுன்கண் அலைவதேன்? - வஞ்சகனே! 
குத்திக் கிழித்துக் குடலை உறுவிடுவேன் 
நித்தம் கொதிக்குதடா நெஞ்சு. 

பஞ்சணை யும்வேண்டேன் பால்பழமும் யான்வேண்டேன் 
தஞ்சமடைந் தேனுன்னைத் தண்டமிழே! - கொஞ்சியுனை 
அன்போடு போற்றிடுவேன் அன்றாடம் வாழ்த்திடுவேன் 
நின்னால் நிறைந்ததென் நெஞ்சு. 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment