Tuesday, October 2, 2018

அந்திவானும் ஆட்டிடையனும் ....!!!



மேகமெலாம் தெரபோட 
***மேற்கால கதிரவனும் 
வேகவச்சி வறுத்தெடுத்து 
***வெயில்கொறச்ச கையோடு 
போகத்தான் பொறப்பட்டான் 
***பொன்மஞ்சள் நிறத்தோடு 
சோகமாகப் போனானோ 
***சோர்வுலத்தான் போனானோ ?? 

சீனிபோல வெள்ளையாக 
***சிரசுமேலக் காஞ்சவனும் 
வானிலொளி வட்டமாக 
***வாசலுக்கு வருபவனும் 
ஆனமட்டும் அடிச்சிவிட்டு 
***அந்தியில குளுந்தவனும் 
மேனியெல்லாம் செவந்திருக்க 
***மெல்லமெல்ல மறஞ்சுபுட்டான் !! 

தெருமுக்குக் கடையினிலே 
***தேநீரக் குடிச்சுபுட்டுக் 
கருக்கலிலே ஆடுகளக் 
***கணக்காகப் பத்திவந்த 
வருத்தமிலா இடையன்தான் 
***வாத்தியாரு பாட்டுபாடி 
நெருக்கமாகப் புல்லிருக்கும் 
***நெலத்துனிலே மேயவிட்டான் !! 

ஆடுகள மேய்க்குறேன்னு 
***ஆலமர நெழலுலிலே 
பாடுபட்டக் களப்புனிலே 
***படுத்தொறங்கிப் போய்விட்டான் ! 
வீடுபோகும் நேரத்துல 
***மேமேன்னு ஆடுகத்தக் 
கோடுபோட்ட சட்டமாட்டி 
***கொம்போடு கெளம்பிட்டான் !! 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment