Monday, October 8, 2018

வினை தீர்க்க விரைந்தோடிவா ( வளையற் சிந்து )


ஆறுமுகத் தமிழ்க்கடவுள்
***அழகிற்கீடு இல்லை - சிவன் 
***அம்பிகையின் பிள்ளை - நல்
***அருளுக்கேது எல்லை - அவன்
***ஔவைக் குபதேசித்தவன்
***அகற்றிடுவான் தொல்லை !

ஏறுமயில் வாகனனின்
***எழிலுருவைக் கண்டு ! - என்
***இருவிழியால் உண்டு - மன
***ஏக்கத்துடன் நின்று - வரும்
***இன்னல்களைத் தீர்த்திடவே
***இறைஞ்சிடுவேன் இன்று !!
வட்டமிட்டுச் சுற்றிவந்து
***வாட்டுந்துயர் போக்கு - மன
***வருத்தங்களை நீக்கு - இரு
***வாள்விழியால் நோக்கு - புவி
***வாழ்வினிலே மகிழ்ச்சியுற
***வழங்கிடுநல் வாக்கு !!
பட்டதுயர் போதுமப்பா
***பயமகற்ற வாவா - தென்
***பழனிமலை பாலா - அறு
***படைவீடுடை சீலா - உனை
***பக்தியோடு வணங்கிடுவேன்
***பரிவளிப்பாய் வேலா !!
குற்றமில்லா நெஞ்சுடனே
***குன்றுதோறும் தேடி - சிவ
***குமரன்புகழ் பாடி - தினம்
***கும்மிகொட்டி ஆடி - தொழ
***குளிர்ந்துநீயும் வந்திடாயோ
***குறிஞ்சிமலர் சூடி !!
வெற்றிவேலை ஏந்திக்கொண்டு
***விரைந்தோடிநீ வாராய் - எனை
***விழிதிறந்து பாராய் - பவ
***வினையாவையும் தீராய் - மிக
***வெந்தமனம் ஆறிடவே
***விடையெனக்குக் கூறாய் !!
சிந்துகவிப் பாட்டெழுதிச்
***சேயோனுனைப் போற்றி - பண்
***சிங்காரமாய்ப் பூட்டி - இரு
***செவியினிக்க மீட்டிப் - பாடச்
***சிரித்தபடி முன்னேநிற்பாய்
***திருமுகத்தைக் காட்டி !!
கந்தனருள் கிட்டிவிட்டால்
***காலநேரம் மாறும் - என்
***கவலையாவும் தீரும் - மனக்
***காயங்களும் ஆறும் - குகன்
***கனிவுடனே கண்திறந்தால்
***களிப்புவந்து சேரும் !!

No comments:

Post a Comment