Wednesday, March 14, 2018

ஆற்றுப்படையில் அழகுறும் அறுபடை வீடுகள் ...!!!


அறுபடை வீடுடை ஆறு முகத்தான் அடிபணிந்து
சிறுகவி மாலையாய்த் தீந்தமிழ்ச் சொற்களைச் சேர்த்தடுக்கி
நறுமணப் பாக்கள் நனியழ காகவே நானளிக்கக் 
குறுநகை சிந்திக் குமரனும் உச்சிக் குளிர்ந்தனனே !!
முருகனின் வீட்டினுள் முத்தாய்த் திகழும் முதற்படையாம்
திருப்பரங் குன்றிலே தேவயா னையின் திருமணமாம்
விருப்புடன் குன்றினை வேண்டி வலம்வர வெவ்வினையால்
வருந்துயர் நீங்கி வளங்களும் கூடிடும் வாழ்வினிலே !!
கந்த னருளும் கடலலை கொஞ்சும் கரையினிலே
சிந்தை யினித்திடும் சீர்மிகு கோலம் திகட்டிடுமோ ?
தொந்த ரவளித்த சூர பதுமனைத் தோற்கடித்துச்
செந்தூர் திருத்தலம் சேயோன் உறைந்த சிறப்புடைத்தே !!
பாவினில் வைத்துப் பழனி முருகனைப் பைந்தமிழில்
நாவினாற் பாட நலம்பெறச் செய்வான் நலிவகற்றி!
காவடி ஏந்தியே கால்நடை யாய்வந்து கண்குளிர்ந்து
சேவடி பற்றிடில் செல்வம் பெருகும் செழிப்புடனே !!
தோரண மாடிடும் தூய பதியாம் சுவாமிமலை
பூரண நிம்மதி பூத்திடச் செய்யும் பொலிவுடனே !
சீரகத் தோடு சிவனார் மகனின் சிறப்பறிய
ஏரகத் தானின் இனிய தரிசனம் ஏற்புடைத்தே !!
தணிகை முருகன் தடைகள் விலக்கித் தயவளிப்பான்
பணியு மடியவர் பக்கத் துணையாய்ப் பலமளிப்பான்
அணியும் சிலம்பும் அழகாய் ஒலிக்க அவன்வருவான்
துணிவும் தருவான் சுகமும் தருவான் துயர்துடைத்தே !!
எழில்மிகு சோலை எழுந்தருள் வேலன் இனிதிருக்க
அழகிய கோலம் அகத்தில் நிறையும் அருட்சுவையாய்!
பழமுதிர் சோலை பரவச மீயும் பணிபவர்க்கே
வழங்கிடும் வாழ்வில் மகிழ்ச்சியை என்றும் வரமெனவே !!
( கட்டளைக் கலித்துறை )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment