Wednesday, March 14, 2018

ஆயர்பாடி மாளிகையில் .....!!!!


கார்முகில் வண்ணன் கவின்மிகு மதனன்
***கண்ணனின் கனிமொழி கரும்பு !
சீர்மிகு செல்வச் சிறுமிய ரோடு 
***சேர்ந்தவன் செய்திடும் குறும்போ
ஈர்த்திடு முள்ளம்; எவரையும் சுண்டி
***யிழுத்திடு மவனது வனப்பு !
மார்புடன் அணைத்து மகிழ்ந்திடத் தோன்றும்
***மாயனை நெஞ்சமே விரும்பு !!
குறுநகை சிந்திக் குழலினை ஊதிக்
***குமரியர் இதயமும் கவர்வான் !
நறுமலர் சூடி நடந்திடு மழகு
***நங்கையர் கூந்தலை யிழுப்பான் !
சிறுவிர லாலே தயிர்க்குட முடைத்துத்
***திருடிய வெண்ணையை யுண்பான் !
பொறுப்புடன் வாயைப் பொத்தியே தாய்முன்
***புன்னகை யோடதை மறுப்பான் !!
கொஞ்சிடும் அன்னை குளிர்ந்திடும் வண்ணம்
***கோகுல பாலனும் சிரிப்பான் !
அஞ்சன விழியாள் அகமகிழ் வுறவே
***அபிநயத் தோடவன் நடிப்பான் !
நெஞ்சினி லினிக்கும் கதைகளைக் கேட்டு
***நிறைவுடன் நிம்மதி கொள்வான் !
பஞ்சணை யின்றித் தாய்மடி தேடிப்
***பாந்தமாய்ப் பாலகன் படுப்பான் !
ஆரிர ராரோ தாயவள் பாட
***ஆயனும் மெய்மறந் திடுவான் !
காரிருள் சூழும் வேளையில் கண்ணன்
***களைப்புடன் கண்ணுறங் கிடுவான் !
சீரிளம் சிங்கம் விழியிமை மடித்துச்
***செல்லமாய்த் துயின்றிடும் போழ்தில்
சூரிய ஒளியாய் மின்னிடு மெழிலில்
***சொர்க்கமும் தோற்றிடுந் தானே !!
( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )





No comments:

Post a Comment