Tuesday, March 13, 2018

எல்லோரும் கொண்டாடுவோம் ...!!!


மண்ணிலுயர் தமிழர்தம் மரபுகளைப் பேணி
***மங்காமல் காத்திடுதல் நம்கடமை யன்றோ ?
பண்பாட்டின் உறைவிடமாய்த் திகழ்கின்ற நாட்டின் 
***பண்டிகைகள் பறைசாற்றும் பழந்தமிழர் மாண்பை !
எண்ணற்ற மதங்களிங்கே வேரூன்றி னாலும்
***எல்லோரும் அன்புடனே கொண்டாடும் பொங்கல்
உண்மையிலே இயற்கையுடன் உயிரினங்க ளுக்கும்
***உளமாற நன்றிசொலும் மகத்தான நாளே !!
புத்தாண்டின் தலைமகளாம் தைமகளை வாழ்த்திப்
***பொலிவுடனே வரவேற்போம் இருகைகள் கூப்பி!
எத்திக்கும் தைத்திருநாள் பெருமைதனைப் பேசும்
***ஈடில்லாத் தமிழ்மரபின் புனிதத்தைப் போற்றும் !
தித்திக்கும் பொங்கல்நாள் தீதெல்லாம் போக்கிச்
***சீர்பெற்றுச் சிறப்புடனும் செழிப்புடனும் வாழ
வித்தான பரிதிக்குப் படையலிட்டு வேண்ட
***விளைச்சலுடன் பல்வளமும் பெருகிடுமே நன்றே !!
கார்மேகம் கூடிவந்து கண்திறக்க வேண்டும்
***காடுகரை கழனியெங்கும் வளங்கொழிக்க வேண்டும் !
ஏர்பிடிக்கும் நல்லுழவர் வாழ்வுயர வேண்டும்
***ஏற்றமிகு சமுதாயம் மலர்ந்திடவே வேண்டும் !
கூர்பார்க்கும் கந்துவட்டிக் கொடுமைநீங்க வேண்டும்
***கூப்பிட்ட குரல்கேட்டால் அரசுவர வேண்டும் !
ஊர்கூடிக் குலவையிட்டுப் பொங்கலிட வேண்டும்
***உருண்டோடும் காலமெல்லாம் உழவோங்க வேண்டும் !
விவசாயி நிலைதன்னை நலியவிட லாமா
***விளைச்சலுமே சுருங்கிவிட்டால் என்செய்வோம் நாளை ?
அவலங்கள் நீங்கிடவே அறுவடைநாள் தன்னில்
***அருணனுக்கு நன்றிசொல்லி வணங்கிடுமிவ் வேளை
உவகையுடன் புத்தரிசிப் பொங்கலிட்டு வேண்டி
***உறவோடு நட்பாகச் சேர்ந்துகளிப் போமே !
புவனத்தில் எப்போதும் புன்னகைப்பூப் பூக்கப்
***பொன்னாளை எல்லோரும் கொண்டாடு வோமே
!

No comments:

Post a Comment