Wednesday, March 14, 2018

பாவை பாடும் பாட்டுடைத்தலைவன் ...!!!


அண்ணா மலையானை, ஐம்பூத நாயகனை,
உண்ணா முலையம்மன் உள்ளத் திருப்பானை,
தண்ணளி சிந்தும் தயாபரனைச், சித்தனை,முக் 
கண்ணனை, உச்சியில் கங்கை தரித்தானை,
விண்ணவர் ஏத்திடும் வேதப் பொருளானைக்,
கண்குளிரக் காணக் களிப்புடன் கூடியப்
பெண்களின் வாழ்த்தொலி பேதையே கேட்டிலையோ?
எண்ணியே நீயும் எழுந்தேலோர் எம்பாவாய் !

பாதிமதி சூடினானைப் பாம்பணி மேனியனை
ஆதிரையில் தாண்டவ மாடிய கூத்தனைச்
சோதிவடி வானவனைச் சுந்தரரின் தோழனை
ஆதியந்த மில்லா அருள்நிறை நாதனை
காதிலணி தோடாட காலில் சிலம்புகொஞ்ச
வேதியர் பண்ணிசைக்க வீதி யுலாவரும்
மாதொரு பாகனை மார்கழித் திங்களில்
மாதவத் தாலே வணங்கேலோர் எம்பாவாய் !
நற்றுணை யாகும் நமசிவாய மந்திரத்தை
பொற்புடன் ஓதிப் புனிதநன் னீராடி
சிற்சபையி லாடும் சிவபெரு மானது
நற்கழல் போற்றிட நங்கையரே வாரீரோ?
அற்பத் துயில்விடுத்(து) அற்புதங் காணீரோ?
பற்றற்றான் தாளினைப் பற்றிப் பணிந்திட
நற்றமிழ்ப் பாக்களால் நாளுந் துதித்திடச்
சுற்றமுடன் கூடித் தொழுகேலோர் எம்பாவாய் !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment