Monday, May 25, 2015

வான் மழையே ....வா மழையே ....!!!



சொட்டிச் சொட்டி நனைத்த வான்மழையே -உன்னை 
எட்டி எட்டிப் பிடிப்பேன் வாமழையே !
கட்டிக் கட்டிப் பனியாய் நீவிழுந்தால் -நானும் 
தட்டித் தட்டி மகிழ்வேன் தேன்மழையே !

வெட்டி வந்த மின்னல் இடியுடனே - நீயும் 
கொட்டி யுள்ளம் கொள்ளை கொண்டாயே !
குட்டிப் பெண்ணென் நெஞ்சம் நிறைந்தாயே - நானும் 
சுட்டித் தனம்செய் வேன்நீ வந்தாலே !

விட்டில் வந்தால் பொழிவாய் என்றறிந்தேன் -நானும் 
கட்டில் மேலே அமர்ந்து காத்திருந்தேன் 
கொட்டில் நின்ற பசுவும் பார்க்கிறதே - என்றன் 
தட்டில் சோறும் ஆறிப் போகிறதே ! 

விட்டி டாமல் பெய்வாய் நிலத்தினிலே -அசல் 
வட்டி யோடு சேர்த்தே வழங்கிடுவாய் 
திட்டி னாலும் பயந்து நிற்காதே - நீயும் 
பெட்டிப் பாம்பாய்ச் சுருண்டு அடங்காதே !

பட்டுப் புற்கள் மேலே முட்டாதே -இளம் 
மொட்டு பூக்கும் போதில் குட்டாதே
சிட்டுப் போலச் சிரித்துச் சிந்திவிடு- நல்ல
மெட்டுப் போட்டுப்  பாடி வந்துவிடு ....!!!

1 comment:

  1. சொட்டிச் சொட்டி நனைக்கும் வான்மழையே - எங்கள்
    சுட்டிப்பெண் ணுனை அழைத்தாள் வாமழையே - நல்
    பட்டுமனம் கொண்டாள் தேன்மழையே - அவளுனை
    தொட்டு மகிழ்ந்திடவேநீ வா மழையே.....!!!!!

    ......இந்தச் சுட்டிப்பெண் ஷியாமாவிற்காக......, நானும் மழையிடம் அன்புடன் பிரார்த்தனை செய்துகொள்கிறேன் :) :)

    ReplyDelete