Tuesday, May 5, 2015

விவசாயி



விளைநில மெல்லாம் விலைநில மானால் 
உளைச்சலில் நோவான் உழவன் - சளைத்துக்
களைத்தாலும் நல்லுழைப்பின் காதலன், யார்க்கும்
இளைத்தவ னில்லை அவன் ..
நெற்றி வியர்வை நிலத்தில் வழிந்திட
சற்றுஞ் சலியாமல் தானுழைப்பான் - உற்பத்தி
ஓங்கிடச் செய்வதில் ஒப்புயர் வற்றவனின்
நீங்கா வறுமையை நீக்கு .
சேற்றி லிறங்கியவன் சேவகஞ்செய் யாவிடில்
சோற்றுக்கேத் திண்டாடித் தொய்ந்திடுவோம் - போற்றி
மகிழ்வோம், விவசாயி மண்ணின்மைந் தன்தான்
மகிமைப் படட்டுமவர் மாண்பு .
உழைப்புக்குத் தக்கவென ஊதியங் கிட்ட
பிழைப்பும் நடக்கும் பிணையாய் - தழைக்க
விடாவறு மையில் விவசாயி நொந்தால்
கெடாதோ உழவும் கிடந்து .
வான்மழைப் பொய்த்தாலோ வர்த்தகம் வீழ்ந்தாலோ
தான்படும் பாட்டால் தவித்திடுவார் - ஈன்று
விவசாயி வாழ்க்கையே வில்லங்கந் தானோ
உவகைமல ரட்டும் ஒளிர்ந்து .
காடுவிளைந் தாலும்கைக் காசுமிஞ் சாவிடில்
வாடும் விவசாயி வாழ்க்கையே ! - கேடுவரு
முன்னே புரிந்தே முதுகெலும் பாய்ப்பேண
முன்னேறும் வாழ்வும் முகிழ்ந்து .

No comments:

Post a Comment