Tuesday, January 12, 2021

முத்தையனந்தாதி ...!!!

 பார்போற்றும் நற்கவியே பைந்தமிழ்ப் பாவலனே

பார்வதி நாதனுன் பாட்டில் உருகாதார்
யாருளரிவ் வையகத்தில் இன்றளவும் உன்னாலே
சீர்பெறுதே வெள்ளித் திரை. 1
வெள்ளித் திரையுலகின் வெற்றிக் கவியரசே
துள்ளிவரக் காத்திருக்கும் சொற்களுன்றன் நாவினிலே
வெள்ளையுளங் கொண்டவ! மீட்டும் வரிகளால்
அள்ளிக்கொண் டாயெம் அகம். 2
அகம்நிறைந்த பாக்களால் அல்லும் பகலும்
மகிழ்கிறோம் துன்பம் மறந்துசிரிக் கின்றோம்
இகழ்வாரைக் கூட எளிதாய்மன் னிக்கப்
புகட்டியவுன் தத்துவங்கள் பொன். 3
பொன்னழகி யுள்ளத்தில் பூத்திருக்கும் கோமான்நீ
சென்றபின்னும் வாழும் சிறுகூடற் சீமான்நீ
தன்னிக ரில்லாத் தலையாய வாசான்நீ
நின்னை மறக்குமோ நெஞ்சு. 4
நெஞ்சுக்கு நிம்மதி தந்திடுமுன் பாடல்கள்
தஞ்ச மடைந்தோர்க்குத் தாய்மடி யானது
கொஞ்சுதமி ழாலே குலவி யணைக்குமது
அஞ்சலெனத் தேற்று மழகு . 5
அழகனாம் கண்ணனை ஆழ்மனத்தில் வைத்தாய்
குழலூதும் மாயனைக் கொஞ்சியே பாடி
மழைபோலு முள்ளம் வருடிடக் கேட்போர்
விழிகள் பனித்தன வே. 6
வேதத்தி னுட்பொருளை வேண்டுமட்டும் சாறெடுத்துப்
பேதமின்றி யாவரும் பின்பற்றத் தோதாகச்
சீதனமாய்ப் பாட்டிற் செதுக்கிய சிற்பியுனை
ஏதுசொல்லி வாழ்த்துவேன் யான்? 7.
யான்பெற்ற நல்வர மென்றே கருதியுன்
தேன்பாக்கள் நித்தமும் தித்திக்கத் தான்பருகி
வானுலுவு மேகமென மௌனமாய்ப் பூக்கிறேன்
ஊனொ டுருகு துயிர். 8
உயிர்வரை ஊடுருவி ஊக்கம ளிக்கும்
மயிலிற காய்வருடி வாட்டந் தணிக்கும்
இயல்பாகப் பேசி இதயநோ யாற்றும்
மயக்கும்நின் பாக்கள் மருந்து . 9
மருந்தாகும் சோர்வுற்ற மானுடர்க்கு வாழ்வில்
விருந்தாகும் காதுகட்கு மெல்லிசை யோடு
கரும்பாகும் எந்நாளும் காதலர்க்கு; நெஞ்சைப்
பரிவோடு தாலாட்டும் பார் . 10
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment