Wednesday, November 9, 2016

மீட்டாத வீணை !

பூரிப்பில் நெஞ்சமது புதுராகம் பாட 
***பொங்கிவரும் நினைவுகளில் புதுவெள்ளம் பாய 
பாரிலுயர் பைந்தமிழில் பாட்டெழுதிப் பாட 
***பாவைமுகம் உவகையினால் பவளமென மாற 
வாரியின்பம் பெற்றவளின் வாழ்க்கைமனம் வீச 
***வாடாத மல்லிகையாய் மனம்குளிர்ந்தே கூட 
பேரிடியும் விழுந்ததுவே பெண்ணவளின் வாழ்வில் 
***பேரிழப்பில் துடிதுடித்தாள் பேதையவள் நொந்தே !

கண்போலக் காத்திருந்தக் கணவனுயிர் போக 
***கள்ளமிலா மங்கையவள் கதறியழக் கண்டு 
விண்ணுலகும் கண்ணீரை மேதினியில் சிந்த 
***விழிநீரும் வழிந்திடவே மெல்லிடையாள் துஞ்ச 
உண்ணாமல் உறங்காமல் உருக்குலைந்து போனாள்
***உள்ளூரும் அவன்நினைவால் உள்ளமது வெந்தாள் 
திண்டாடும் அவலநிலை தேங்கியதால் நெஞ்சம் 
***தெளிவற்றுக் கிடந்தாளே தேம்பியழு தாளே !

கூட்டுக்குள் வாழ்ந்தவனைக் கூற்று,பழி வாங்க 
***கோலமயில் துவண்டாளே கூடலின்ப மின்றி 
ஆட்டுவிக்கு ஆண்டவனே அளித்திடுவாய் தீர்வை 
***அடுக்கிவரும் துன்பத்தில் அலைக்கழிக்க லாமோ  
மீட்டாத வீணையிலே மீண்டிடுமோ நாதம் 
***மீட்டலிலாப் பெண்மையதும் மெருகிழந்து போகும் 
வீட்டுக்குள் முடங்கியவள் மீண்டுவரச் செய்ய 
***மீட்டுகின்ற விரலாக வேண்டுமொரு துணையே !

No comments:

Post a Comment