Wednesday, November 9, 2016

32 சீர் விருத்தம் ....!!!



வண்ணமயில் மீதேறி வேலன் வந்தான் !
*வள்ளியுடன் மனம்மகிழ வரமும் தந்தான்! 
**வனப்புடனே தெய்வானை பக்கம் நின்றாள் !
***வடிவேலன் அருகினிலே உள்ளம் வென்றாள்!
****வதனங்கள் ஆறுடனே காட்சி கண்டேன் !
*****வற்றாத பக்தியினால் காதல் கொண்டேன் !
******வணங்கிநிதம் திருப்புகழாம் அமுதை உண்டேன் !
*******வல்வினையும் வந்தவழி யோடக் கண்டேன் !!

தண்கழலில் சிலம்புகொஞ்ச ஆடி நின்றான் !
*தண்டாயு தம்கரத்தி லேந்தி நின்றான் !
**தமிழ்முனியின் பாட்டினிலே சொக்கி நின்றான் !
***தவசீலர் யாகத்தில் ஒளியாய் நின்றான் !
****தள்ளாத கிழவனென வேடம் பூண்டான் !
*****தந்திமுகன் தயவாலே காதல் வென்றான் !
******தகப்பனுக்கே உபதேசம் சொன்ன வன்தான் 
*******தணிகையிலே சினம்தணிந்து கோயில் கொண்டான் ! 

எண்ணமெல்லாம் நிறைந்ததுயார் நீயே யன்றோ ?
*எழுத்திலெல்லாம் உறைந்ததுயார் நீயே யன்றோ ?
**எந்தாயும் எனக்கருளும் தந்தை நீயே !
***என்னுயிரில் கலந்திருக்கும் விந்தை நீயே !
****எடுத்திடுவேன் காவடியும் என்றன் தோளில் !
*****எதிர்ப்பின்றி ஏற்றிடுவாய் நல்ல நாளில் !
******எல்லையில்லா அன்புடனே அழைத்தேன் வேலா !
*******எட்டெடுத்து வாராயோ உமையாள் பாலா !

கண்ணிரண்டும் உன்னழகைக் காண வேண்டும் !
*கனிவோடு நானுருகிப் பாட வேண்டும் !
**கள்ளமனம் உன்தயவால் கரைய வேண்டும் !
***கடுகிவந்து படும்துயர்நீ தீர்க்க வேண்டும் !
****கனவினிலும் உன்முகமே தோன்ற வேண்டும் !
*****கற்பனையில் உன்கோலம் கண்முன் வேண்டும் !
******கற்பூர ஒளிதனிலுன் காட்சி வேண்டும் !
*******கடைவழிக்குத் துணையாக நீயே வேண்டும் ...!!! 

No comments:

Post a Comment