Wednesday, November 9, 2016

சோலை வாழ்த்து ! (48 சீர் விருத்தம் )

விருத்தங்கள் விளையாடும் தமிழின் சோலை 
    வித்தகர்கள் எழில்யாப்பில் கட்டும் மாலை !
    விஞ்சையரும் வண்ணமுடன் சொல்லும் பாட்டு 
    விருந்தாக, சொக்கிவிடும் உள்ளம் கேட்டு !
    விதைத்திட்டார் மாவரதன் மரபை நன்றாய் 
    விருட்சமென வளர்ந்ததுவும் பூக்கும் செண்டாய் !
    வியக்கவைக்கும் திறமைகளும் இங்கே கூடும் 
    விருந்தளிக்கக் கருத்தாக சேர்ந்தே பாடும் !
    விவரித்துக்  கற்பிக்கும் ஆசான் பாட்டை 
    வியனுலகும் சுவைத்திடவே ஆர்வம் காட்டும் !
    விமர்சனமும் சிலநேரம் இங்கே முட்டும் 
    விடைகிடைக்கும் அதன்பின்னே தெளிவும் கிட்டும் ..!!
அருவியென வெண்பாக்கள் அமுதாய்ச் சிந்தும்
    அதிமதுர கலிப்பாவும் புலவோர் சொந்தம் !
    அந்தமில்லா ஒண்தமிழில் பழக்கும் சோலை 
    அபிநவமாய் வித்தகங்கள் புரியும் சோலை !
    அயர்வின்றி  அற்புதங்கள் படைக்கும் சோலை 
    அம்புலியாய் முகநூலில் உலவும் சோலை !
    அலைகடலாய் ஓயாமல் ஒலிக்கும் சோலை 
    அரியபல யாப்புகளும் அளிக்கும் சோலை !
    அடுக்கிவரும் தாழிசையும் பயிற்றும் சோலை 
    அழகழகாய் செந்துறையில் வாழ்த்தும் சோலை !
    அடங்காத தாகத்தில் அலையும் நெஞ்சம் 
    அமிருதமாய்த் தமிழ்பருக  அடங்கும் கொஞ்சம் ..!!
இருளகற்றி ஒளியூட்ட அகமும் பூக்கும் 
    இளமையுடன் திகழ்சோலை மரபைக் காக்கும் !
    இலக்கணமும் இலக்கியமும் அறியச் செய்யும் 
    இனிமைகொஞ்சும் யாப்பினிலே சிலிர்க்கும் மெய்யும் !
    இனியதமிழ் விருந்துண்ண விலகும் சோர்வு 
    இங்கிதமாய் பயிற்சிதந்து வைப்பார் தேர்வு !
    இணையில்லாக் குழுமமிது முகநூல் பேச்சு 
    இலங்குகின்ற மரபில்தான் சோலை மூச்சு !
    இரத்தினமாய் மின்னும்பைந் தமிழின் சோலை 
    இரசமிக்க சிந்துப்பா கொஞ்சும் சாலை !
    இமயத்தின் சிகரத்தை எட்டும் சோலை 
    இடையீடு வந்தாலும் தகர்க்கும் சோலை ..!!
பெருமைமிகு பாவலர்கள் காட்டும் பாதை 
    பெருந்தகையாய்ப் பயில்வோரை ஆக்கும் மேதை !
    பெருக்கெடுக்கும் வற்றாத கவிதை வெள்ளம் 
    பெருங்களிப்பில் தமிழமுதால் திளைக்கும் உள்ளம் !
    பெருந்தன்மை யோடிங்கே பயிற்று விப்பார் 
    பெருமாளின் திருநாமம் கொண்ட வர்தான் !
    பெற்றோமே பெரும்பேறு சோலை கூடி 
    பெருகிடுதே  இதயத்துள் இன்பம் கோடி !
    பெயர்விளங்கச் செய்திடுமிச் சோலை மண்ணில் 
    பெருகிவரும் மகிழ்ச்சியினால் துளிகள் கண்ணில் !
    பெறுமதியாய்க் கண்டோமே மரபின் சோலை 
    பெட்புடனே போற்றிடுவோம் சோலை வாழி ...!!!
    

No comments:

Post a Comment