Saturday, April 11, 2020

ஆனந்தக் களிப்பு ..!!!




கண்ணனைக் காணமல் நின்றாள் - தன்
கண்களை ஆலிலை யால்மூடிக் கொண்டாள் !
வெண்ணிலா வான்வரும் மாலை - அவள்
வெட்கத்தில் புன்னகை பூத்திடும் சோலை !!
தாவணி மேனியை மூடும் - அவள்
தாமரைப் பூமுகம் மன்னனைத் தேடும் !
காவலை மீறியே கெஞ்சும் - மனம்
காதலில் தில்லானா பாடியே கொஞ்சும் !!
பாவையின் கண்விடும் தூது - கரும்
பச்சையில் தோடுடன் ஆடிடும் காது !
வாவென்று கூப்பிட்ட போது - அவன்
மார்பினில் அன்புடன் சாய்ந்தாளே மாது !!
செக்கச் சிவந்தது கன்னம் - அந்தச்
செவ்வந்தி மாலையில் இன்னுந்தான் மின்னும் !
சொக்கித்தான் போய்விடும் உள்ளம் - அந்தச்
சுந்தர னின்பேச்சில் இல்லையே கள்ளம் !!
கைவளை கொஞ்சிடும் சத்தம் - இரு
காதுக ளோரம் வழங்கிடும் முத்தம் !
மைவிழி யாள்பாடும் சந்தம் - அந்தி
மையலில் தித்திக்கச் சேர்ந்தாடும் பந்தம் !!
வைகை நதிக்கரை யோரம் - அலை
வாவென்று முத்திட்டக் கால்களில் ஈரம்!
பொய்கையில் ஆடிடும் அல்லி - அது
பூத்திடும் பெண்ணிவள் காதலைச் சொல்லி !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment