Saturday, April 18, 2020

வண்ணப் பாடல் ...!!!

தனத்தத் தனந்த தனதன
தனத்தத் தனந்த தனதன
தனத்தத் தனந்த தனதன தனதானா ( அரையடிக்கு )
பசிக்குக் குழந்தை யழுதிட
வணைத்துப் பரிந்து மகிழ்வொடு
படுத்துக் கிடந்த வனையவ ளெழுவாளே
பயத்துச் சுரந்த வமுதினை
யளித்துக் கனிந்த மனமது
பரத்திக் குளிர்ந்து மகவொடு துயிலாதோ ?
இசைத்துப் பணிந்த வெளியனை
விரட்டித் தொடர்ந்த வினைகளை
எதிர்த்துத் துணிந்து களையெடு மயில்வீரா !
இடர்க்குப் பயந்த பிளையெனை
எடுத்துச் சுமந்து வருடியெ
னிளைப்பைப் புரிந்து தயவுசெய் யொருதாயாய் !
அசைத்துப் பிழிந்த துயர்களை
மடக்கிச் சிறந்த முறையினி
லடக்கத் தெளிந்த வறிவினை யருள்வாயே !
அணைப்பிற் கசிந்த விழியொடு
திருப்பொற் பதங்க ளழகினை
யடுக்கிப் புகழ்ந்து தொழுதிட வருவாயே !
வசித்தற் குகந்த விடமென
விளக்கிற் படர்ந்த வொளியொடு
மனத்தைத் திறந்து பரவெளி விடுவாயே !
மயக்கிக் கவர்ந்த குறமக
ளகத்திற் பொழிந்த மழையென
வரித்துச் சிவந்து நடமிடு பெருமாளே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment