Saturday, April 11, 2020

கூவி யழைத்தேன் ...!!!


கூவி யழைத்தேன் குறைகளைய வாராயோ
பாவி மனம்படும் பாட்டை யறியாயோ
கேவி யழுதாலும் கெஞ்சி விளித்தாலும்
தாவி யணைக்கத் தயங்குவ தேனம்மா
ஓவியமாய் நெஞ்சி லுறைந்தவளே சொல்லம்மா
கோவி லடைத்தாலென்? கொண்டாடு வேன்மனத்துள்
ஈவிரக்கங் காட்டாம லேங்க விடலாமோ
தேவி யிதுமுறையோ தேரேறி வந்திடம்மா!!
வந்தாலுன் பாதம் வணங்கி வரவேற்பேன்
குந்தவைத்துப் பசியாறக் கூழூற்றித் தந்திடுவேன்
நந்தவனப் பூக்கொய்து நானுனக்குச் சூட்டுவேன்
முந்திவரு மன்பினால் முத்தமிட்டுக் கொஞ்சுவேன்
செந்தூரப் பொட்டிட்டுச் சிங்கார வூஞ்சலிலே
சந்தத்தில் பாட்டெடுத்துத் தாலாட்டித் தூங்கவைப்பேன்
அந்தக் கணத்தில் அழகு முகங்கண்டு
தங்க நிலவென்று தடவி மகிழ்வேனே!!
மகிழ்வில் அகம்மலர வாழ்த்திக் கவிவனைவேன்
அகிலத்தை யாட்சிசெயும் அம்மநின் அன்பெண்ணித்
திகைப்பில் அசையாச் சிலைபோலும் நின்றிருப்பேன்
சுகமான நித்திரையைத் தொட்டுக் கலைக்காமல்
நெகிழ்வில் விழிநனைய நெடுநேரம் பார்த்திருப்பேன்
மகளென்றன் பாசத்தில் மைவிழிகள் தான்மலர
நகையேந்தும் செவ்விதழால் நல்வாக்கு நீயுதிர்க்கப்
பகைவென்று விட்டாற்போல் பாவிநான் பூப்பேனே!!
பூப்போன்ற உள்ளத்தைப் பொங்க விடலாமோ
தீப்புண்ணாய் வெந்து சிதைய விடலாமோ
ஆர்ப்பரிக்கு மெண்ணத்தை யாற்றுப் படுத்தாயோ
சீர்ப்படுத்திச் சிந்தையைச் செம்மைப் படுத்தாயோ
வேப்பிலை சாற்றியுனை வேண்டித் துதித்திடுவேன்
ஈர்ப்புடன் பாடியு மின்னுமேன் தாமதமோ
காப்பாற்ற லுன்கடனே காளிகண் பாரம்மா !!
பார்த்த வுடனே பரவசத்தி லாடுவேன்
தேர்வந்து நின்றகணம் சேர்த்தணைத்துக் கொஞ்சுவேன்
கூர்விழிகள் கண்டு குளிர்ச்சியில் மெய்சிலிர்ப்பேன்
தீர்ந்தது துன்பமெனத் தித்திக்கப் பாடுவேன்
யார்க்கிவ் வரங்கிட்டு மென்றே யுருகுவேன்
ஊர்க்காக்கு முன்னை யுயிராய் நினைத்திருப்பேன்
சோர்வகன் றின்பங்கள் சூழக் களித்திருப்பேன்
மார்தட்டித் தாயென்று மாண்புடன் கூவுவனே!!

No comments:

Post a Comment