Thursday, April 16, 2020

ஆட்டம் ...!!!



ஆட்டம் ...!!!
*****************
வானில் கரிய மேகம் சூழ்ந்தால் 
மண்ணில் மயிலாடும் !
வனத்தில் தத்தம் இணைக ளுடனே 
மான்கள் சேர்ந்தாடும் !

தேன்நி லாவும் உலவும் முகிலின்
திரைக்குள் ஒளிந்தாடும் !
சீண்டிப் பார்க்கும் விண்மீன் கள்கண் 
சிமிட்டி உறவாடும் !

கானில் விரிந்த மலர்க ளெல்லாம்
காற்றில் கலந்தாடும் !
கள்ளை யுண்ணப் பறந்து வந்து 
களிப்பில் வண்டாடும் !

வானில் வளைந்த வான வில்லில்  
வண்ணம் இசைந்தாடும் !
மழைக்கு முன்னே கொடிபோல் மின்னல் 
மலர்ந்தே ஒளிர்ந்தாடும் !! 

மரத்தின் கிளையில் தாவித் தாவி 
மந்தி விளையாடும் !
மலையின் அருவி வழுக்கிக் குதித்து 
மகிழ்வில் நனைந்தாடும் !

இரவில் திங்கள் ஒளியில் அல்லி
இதழ்கள் விரித்தாடும் !
இருளில் குளத்தில் ஒளிந்த மதியும் 
இனிதே குளிர்ந்தாடும் !

குருவி சிறிய அலகால் இரையைக் 
கொத்திக் குதித்தாடும்  !
கொட்டும் மழையில் கிளைகள் குளித்துக்
குலுங்கி மகிழ்ந்தாடும் ! 

பொருநை நதியி னலையில் கயல்கள்
புரண்டு புரண்டாடும்!
புல்லின் நுனியில் துளிகள் திரண்டு
பொலிவாய் நின்றாடும் !!

செந்நெற் கதிர்கள் தலையைக் குனிந்து 
சிலிர்ப்பில் வளைந்தாடும் !
சிவந்த மரையும் பரிதி கண்டு 
சிரித்து மலர்ந்தாடும் !!

சொந்த மாகச் சொகுசாய் அமைத்த 
சொர்க்க புரிபோலும் 
தொங்கும் மஞ்சட் குருவிக் கூடு 
சுகமாய் அசைந்தாடும் !

அந்திப் பொழுதின் மஞ்சள் வெயிலும் 
அடங்கிச் சிவந்தாடும் !
அந்தக் கணத்தில் அடையும் கூட்டில் 
அன்பு மிளிர்ந்தாடும் !

தொந்த மாக நதியில் நித்தம் 
தோணி மிதந்தாடும் !
தூக்க மில்லாக் கடலின் அலைகள் 
துள்ளி எழுந்தாடும் ! 

தென்றல் காற்று தழுவிக் கொள்ளத் 
தென்னங் கீற்றாடும் !
சின்னக் கிளிகள் கொஞ்சும்  பேச்சைக் 
கேட்டுச் சிரித்தாடும் !

கன்னங் கரிய குயிலின் இசையைக் 
காற்றும் சுவைத்தாடும் !
கன்னல் கரும்பின் அழகுத் தோகை
கண்ணைக் கவர்ந்தாடும் !  

கொன்றை மலர்கள் மரத்தை மறைத்துக் 
கொத்தாய்க் குவிந்தாடும் !
கோடை மழையில் நனைந்த நெஞ்சம் 
குளிர்ந்து  சிலிர்த்தாடும் !

அன்னம் இணையோ டிணைந்து மெல்ல 
ஆற்றில் அசைந்தாடும் !
அன்றில் பறவை பிரியா தென்றும் 
அன்பில் உறவாடும் !

இயற்கை ஆட்டம் ஓட்டம் எல்லாம் 
இறைவன் அருளாகும் !
இயல்பை விட்டு மாறி னாலோ 
இழப்பு பெரிதாகும் !

உயர்வு தந்து நலத்தைப் பெருக்கி 
வுவகை யுந்தருமே !
உலகில் நாளும் புதிய ஆட்டம் 
உலவும் புதுசுகமே !

துயரை வென்று மீட்டு வந்து 
சுகத்தைத் தந்திடுமே !
சொந்த பந்தம் கூடி யாடச் 
சோர்வும் விலகிடுமே !

அயர்ச்சி யின்றி வாழ்வை வெல்ல
ஆட்டம் அவசியமே !
அதுவும் எல்லை மீறிப் போனால் 
அமைதி போய்விடுமே !

சியாமளா ராஜசேகர் 



No comments:

Post a Comment