Tuesday, November 7, 2017

ஒத்தையில போறவளே ....!!!


ஒத்தையடிப் பாதையிலே 
***ஒத்தையில போறவளே 
பத்திரமா போய்வாடி 
***பால்நிலவு வருமுன்னே !
அத்தமவன் நானிருக்கேன் 
***அச்சத்த விரட்டிவிடு 
சத்தியமாத் துணையிருப்பேன் 
***சாகுமட்டும் உன்னுடனே !!

ஆத்தோரம் போகாதே 
***அலைவந்து முத்தமிடும் 
காத்துவந்து மேனிதொட்டுக்  
***காதலுடன் கதைபேசும் !
வாத்துகளும் நீந்திவந்து 
***வரவேற்கக் காத்திருக்கும் 
சேத்துக்குள் தாமரையும் 
***செவ்விதழால் சிரித்திடுமே !!

நாணமுடன் நீநடக்க 
***நாத்துகளும் தலையசைக்கும் 
நாணல்புல் கரையினிலே 
***நளினமுடன் நடனமிடும் !
ஆணவத்த விட்டுவிட்டு 
***அழகுமயில் ஆடிவரும் 
வீணான பயமெதற்கு 
***விரைந்துவாடி  என்குயிலே !!

பட்டெடுத்து வந்துனக்குப்
***பரிசமிட நாள்பார்ப்பேன் 
பொட்டுவச்சிப் பூமுடிச்சிப்
***புதுப்பெண்ணா உனைரசிப்பேன் !
கொட்டுமழை நாளினிலும் 
***குடையின்றி நடந்துவந்து 
கட்டிவெல்லத் தங்கமுனைக் 
***கண்குளிரக் காண்பேனே !!

பூவனமும் உனைக்கண்டால் 
***பூரிப்பில் குளிர்ந்துவிடும் 
தேவதையே உன்னன்பில்
***சிக்குண்டுத் தவிக்கின்றேன் !
தாவணியில் மயக்குறியே 
***தாகத்தைத் தூண்டுறியே
ஆவணிக்குள் தாலிகட்டி 
***ஆசையுடன் அணைப்பேனே !!

சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment