Friday, November 17, 2017

இயற்கை - அந்தாதி


கதிர்வரவு கண்ட கமலம் விரிந்து 
நதியலையி லாடும் நயந்து ! - செதில்கொண்ட
கெண்டைமீன் நுள்ளக் கிறங்கிய தாமரையும் 
தண்ணீரில் தள்ளாடும் சாய்ந்து . 1.

சாய்ந்தாடும் தெங்கோலைத் தாலாட்டு கேட்டாற்போல் 
வாய்க்கால் கரையில் வளைந்தபடிப் ! - பாய்ந்துவரும் 
நீரில் முகங்கண்டு நேராய் நிமிர்ந்திடும் 
பூரிப்பில் புன்னகைக்கும் பூத்து. 2.

பூத்திருக்குஞ் சோலையில் பொன்வண்(டு) இசைபாடிக் 
காத்திருக்கும் ஆவலுடன் கள்ளுண்ணப் ! - பாத்திக்குள் 
தேடிவந்து செம்மலரில் தேனுறிஞ்சி விட்டதுவும் 
ஆடியே செல்லும் அழகு ! 3.

அழகிய மேகம் அணிதிரண்டு வந்து 
பழகிய வெண்ணிலவைப் பார்க்கக் -  குழவியாய்க்
கொஞ்சிச் சிரித்துக் குளிர்ச்சியாய்க் காய்ந்திடும் 
நெஞ்சைக் கவரும் நிலவு . 4. 

நிலவும் இரவினில் நித்திரை யின்றி 
உலவிடும் வானில் உவப்பாய்க் ! - கலங்காக் 
குளத்தினில் தானும் குளிக்க விரும்பிக் 
களிப்புடன் முங்கும் கனிந்து. 5. 

கனிவுடன் வந்துமெல்ல கால்வருடிச் செல்லும் 
இனிமைசுகம் வேரெதிலு மில்லை - தனிமையாய் 
நீலக் கடலினில் நீந்தும் அலைகளின் 
கோலயெழில் கண்டிடக் கூடு . 6. 

கூடிவரும் வான்முகிலும் கோலா கலமாக 
நாடிவரும் வானவில்லை நாட்டமுடன் - தேடிவந்து 
பார்த்துப் பரவசப் பட்டிருக்கும் காட்சியில்நம்
சோர்வகன்று கிட்டும் சுகம் . 7. 

சுகமாய் மலைமேல் துயிலும் முகிலும் 
மிகவும் அழகாய் விளங்கும் !- ககன 
வெளியி லுலவிடும் வெண்பனி மேகம் 
ஒளியாய்த் தெரியும் உணர் . 8.

உணர்ந்தால் இயற்கை உலகின் வரமே
இணக்க முடனே இயைந்தால்!- வணங்கிட 
என்று மியற்கையால் ஏற்றம் கிடைத்திடும் 
இன்ப மளிக்கும் இதம்.   9.

இதமான தென்றல் இதயம் தழுவும்  
மிதமான சாரல் விருந்தாய்ப் ! - பதமாய் 
நனைக்கும் மழையில் நமதுளம் பூக்க 
வனையும் கவிதை வரம் . 10. 

No comments:

Post a Comment