Tuesday, August 4, 2015

மெய்சிலிர்க்க வைத்திடுதே !




உச்சியிலே அலங்காரக் கொண்டைப் போட்டு 
***உன்னதமாய் உயிர்ப்பித்து மிளிர்ந்த கோலம் 
பிச்சிமலர் மாலையிட்டுக் குஞ்சங் கட்டி 
***பின்னலிட்ட சடையினிலே துலங்கும் வாசம் 
கச்சிதமாய்க் குத்துக்கா லிட்டு வீற்று 
***கைமடக்கித் தாங்குகையில் பொங்கும் சீலம் 
மிச்சமின்றி எழிலனைத்தும் ஒன்றாய் சேர்ந்து 
***மெய்சிலிர்க்க வைத்திடுதே எந்தன் தாயே !! 

பட்டுடுத்தி நகைபூட்டி நீறு பூசி 
***பாங்குடனே மருதாணி கையி லிட்டு 
பொட்டுவைத்த வதனத்தில் கருணைப் பொங்க 
***பொற்பதத்தில் கொலுசுகளின் சத்தம் கொஞ்ச 
மெட்டியொலி செவியோரம் மெல்லக் கேட்க 
***மெய்மறந்து போகுமெந்தன் உள்ளம் அம்மா 
எட்டிநின்று ரசிக்கையிலே இதயம் துள்ளி 
***ஏங்கிநிற்கும் உன்னருளைப் பெறவே தாயே ! 

ஆடிவெள்ளி அலங்காரம் அழகு அம்மா 
***அன்னையுந்தன் எழிற்கோலம் கண்டோம் அம்மா 
பாடிடுவோம் உன்புகழை நாளும் அம்மா 
***பக்தியுடன் வணங்கிடுவோம் உம்மை அம்மா 
கோடிநாம அர்ச்சனையால் தொழுவோம் அம்மா 
***கோயிலிலே எழுந்தருளி ஏற்பாய் அம்மா 
வாடிநிற்கும் வேளையிலே காப்பாய் அம்மா 
***வாழ்வினிலே தீபஒளி ஏற்று தாயே !

No comments:

Post a Comment