Thursday, July 4, 2019

புறநானூற்றுப் பாடல் !!!

இல்லத்தின் முற்றத்தின் பலாமரத்தில் அடர்ந்தே
இருள்வானின் விண்மீன்கள் போல்மலர்கள் நிறைந்த
நல்லழகு கொடியாம்மு சுண்டையுடன் முஞ்சை
நன்னிழலைப் படரவிடச் சுகவளியில் குளிர்ந்து
வில்லம்பு டன்களைப்பில் கரிவேடன் அயர்ந்து 
விழிமூடித் தனைமறந்து நித்திரையில் மூழ்க
இல்லாளும் வெளிவந்து தன்பதியைப் பார்த்தே
எழுப்பமன மில்லாமல் அமைதியுடன் இருந்தாள் !!
அருகினிலே மடப்பிணையும் கலைமானும் கொஞ்சி
அன்பிலொன்று கலந்தின்பம் அனுபவிக்கக் கண்டாள் !
நெருங்கியங்கு சென்றாலோ ஒலியெழுப்பி னாலோ
நிம்மதியாய்த் தூங்குபவன் துயில்கலைந்து போகும் !
மருண்டோடும் ஆண்மானும் பிணைமானை விட்டு
மையலுடன் கலவியின்பம் தடைபட்டுப் போகும் !
ஒருசிறிதும் சத்தமின்றி வீட்டுக்குள் புகுந்தாள்
உள்ளத்தில் கள்ளமிலா வேட்டுவனின் மனைவி !!
மான்தோலில் உலரவைத்த தினையரிசி முழுதும்
வந்தகாட்டுக் கோழியொடு கௌதாரி தின்னத்
தான்பிடித்துச் சந்தனக்கட் டையால்தீ மூட்டிச்
சமைத்தவற்றைப் பாணருக்கும் மற்றவர்க்கும் கொடுத்தாள் !
மேன்மைமிகு தன்தலைவன் பெருவள்ளல் என்றும்
வேந்தனவன் நற்புகழைச் சிறப்புகளைச் சொன்னாள் !
கானகத்தின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வை
கண்முன்னே கவினழகாய்க் காட்டியது நன்றே !!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment