Tuesday, October 3, 2017

எப்போது விடியுமோ ....???




மாடுகள் பூட்டி வயலில் உழுவோர் வறுமையிலே 
பாடுகள் பட்டும் பலனே யிலையெனில் பாழுலகில் 
வாடுவ தொன்றே வழக்கமா யின்றும் வருந்துவது
நீடுதல் நன்றோ நிமிர்ந்திடச் செய்வோம் நிலைபெறவே! 

பெற்ற மகவெனப் பேணும் வயலில்  பிரியமுடன் 
நெற்றி வியர்வை நிலத்தினில் சிந்த நிதமுழைத்தும் 
அற்றா ரெனவே அவர்தம் பிழைப்பும் அலக்கழித்தால்
வற்றி விடாதோ வயிறொடு வாழ்வும் வனப்பிழந்தே !

வறண்ட நிலமும் மழைப்பொழி வின்றி வெடித்திருக்க 
உறக்கந் துறந்த உழவர் உளமும் உடைந்திருக்க 
அறத்தை மதியா அவல அரசின் அலட்சியத்தால் 
இறக்கத் துணியும் இழிவை நிறுத்துவோம் இக்கணமே !

சீறும் இயற்கையும் சேதப் படுத்தியே சீரழித்தால்
சேறு மிதித்துச் சிறப்பாய்ப் பயிர்த்தொழில் செய்பவரின் 
ஊறு களைய உதவி புரிய ஒருவரின்றேல் 
சோறு கிடைக்குமோ சொல்வீர் பசியைத் துடைத்திடவே!

விடியுமோ வென்றே விழிநீர் பெருக வெறித்திருப்போர் 
இடிந்திடா நெஞ்சுடன் ஏர்த்தொழில் காக்க எழுச்சியுடன் 
முடிவிலா இன்னலை முற்றிலும் போக்க முனைந்துவிடில் 
மடிந்திடும் துன்பம் வரமென வாழ்வும் மலர்ந்திடுமே!

வங்கிக் கடனால் வருஞ்சுமை கூடி மனம்வெதும்பித் 
தொங்கும் நிலைக்குத் துரத்தப் படுமித் துயரநிலை 
எங்கே முடியும் இனியும் தொடர்ந்தால் இழந்திடுவோம்  
பொங்கி எழுவோம் புதிதாய் விடியலும் பூத்திடவே !

( கட்டளைக் கலித்துறை )

சியாமளா ராஜசேகர் 

கவியுலகப் பூஞ்சோலை ஆண்டுவிழாப் போட்டியில் பாரதியார் விருது பெற்ற கவிதை 


No comments:

Post a Comment