Thursday, September 28, 2017

சித்தங் குளிர நீ பாடு ....!!!

கன்னல் பேச்சில் மலர்ந்திருந்தேன்!
கன்னித் தமிழில் கனிந்திருந்தேன்!
உன்றன் பாட்டில் குளிர்ந்திருந்தேன்!

உன்னில் பழுதே இல்லையய்யா!
இன்னும் இன்னும் செவிகுளிர
என்றும் கேட்க விழைகின்றேன்!
அன்னைக் கில்லை பிடிவாதம்
அன்பா யுணர்த்த வந்தேனே!!

முத்தா யொளிரும் பிள்ளையுனை
மூட னென்றா நான்நினைப்பேன்?
சொத்தாய்த் தமிழுன் வசமிருக்கச்
சொர்க்க மதிலே உளம்நனைவேன்!
மெத்த வறிந்த உன்றனுக்கு
மின்னல் வீச்சும் விரல்நுனியில்
சித்தங் குளிர கவிபாடு
தெவிட்டா வரங்கள் தருவேனே!


( இலந்தை ராமசாமி ஐயா அவர்களின் கவிதைக்குப்
பின்னூட்டமாக எழுதியது !) 

No comments:

Post a Comment