Wednesday, February 18, 2015

நவவெண்பா - மலர்கள்

கதிரவனின் சூடால் கருத்தாயோ நீயும் 
புதிதாய் விரிந்திட்டப் பூவே ! - அதிசயமுன் 
வண்ணம், கவலையேன் ? வாடாமல் புன்னகைத்துப் 
பெண்கள் மனதிலிடங் கேள் ! 

சிந்திய வெண்பனியால் செக்கச் சிவந்தவளே 
சுந்தரனும் உன்னழகில் சொக்கிடுவான் ! - சொந்தமெனக் 
கொண்டிடவே ஆணும் கொடுத்திடுவா னுன்னையே 
பெண்ணுக்குக் காதல் பரிசு . 

மஞ்சள் மலர்களும் மையலில் வீழ்ந்ததோ 
கொஞ்சி இரண்டுங் குலவுதோ - நெஞ்சினில் 
பொங்கிடுங் காதலுடன் பூக்களும் புன்னகைக்க 
தங்கிடு மின்பம் மணந்து . 

முத்தங்கள் தந்தாரோ மோகத்தால் பூவுனக்கு 
சித்திரங்கள் தீட்டியதார் செவ்விதழால் ? - நித்தமுமே 
பூத்திடுவாய் வெண்பூவே போற்றிடுவேன் வெண்பாவால் 
காத்திருப்பேன் நீமலர்வா யென்று ! 

உண்மையில் பேரெழிலி ஊதா நிறத்தழகி 
கண்மணியெ னுள்ளங் கவர்ந்தாயே !- வண்ணமேவுன் 
பட்டிதழில் கற்கள் பதித்தது யாரம்மா 
பட்டென சொல்லி விடு 

அதிகாலை நேரம் மலர்ந்திடும் மொட்டும் 
மதிமயங்கச் செய்யும் மணத்தால் - அதிரூப 
கன்னியர் கொண்டையில் கச்சிதமாய்ச் சூடிட 
புன்னைகைசிந் தும்மல்லிப் பூ . 

வானவில் பூவாகி வையகம் வந்ததோ 
தேனமுது வண்டீர்க்குந் தீஞ்சுவையோ ? - மேனகையும் 
பூவினைச் சூடிட பூலோகம் வந்திடுவாள் 
தாவிக் குதித்து மகிழ்ந்து . 

வியர்த்து வழிந்தாய் விரிகையில் மொட்டே 
பயமோ வலியோ பகர்வாய் ! - மயங்கி 
ரசித்தேன் மலர்களின் ராணியே ! என்னை 
வசியப் படுத்தினாய் நீ . 

விழிகள் விரிய வியந்தே ரசித்தேன் 
வழியெங்கும் செம்பூவின் வண்ணம் - செழித்து 
சிறந்தாய் கவின்மிகு செங்கொன்றைப் பூவே 
பிறந்ததுற் சாக மெனக்கு .



No comments:

Post a Comment