Tuesday, February 17, 2015

சாய்நாதரின் தாள் பணிவோம் ....!!!



பாபா நாமம் சொல்லச் சொல்ல 
பாவங்கள் பறந்தோடும் ! 
நாளும் போற்றி பக்தி செய்ய 
நற்கதி கிடைத்துவிடும் ....!! 

சத்குரு பாதம் பற்றிக் கொண்டால் 
பித்தம் தெளிவாகும் ! 
சத்சரி தம்தினம் வாசித் தாலே 
பிறவிப் பிணிதீரும்.....!! 

அன்பாய் உருகி வேண்டிக் கொண்டால் 
அபயம் அளித்திடுவார் ! 
பண்ணொடு பாடி துதித்து நின்றால் 
பக்கத்துணை இருப்பார் ....!! 

உண்மை யுடனுள மாறக் கூப்பிட 
உடனே வந்திடுவார் ! 
உதியை நித்தம் பூசிக் கொண்டால் 
உள்ளக்குறை களைவார் ....!! 

ஷீரடி நாதரின் தாள்கள் பணிய 
சிறப்புகள் தேடிவரும் ! 
ஷீரடி ஒருமுறை சென்று வந்தால் 
சீவன் முக்தி பெறும்...!! 

சகலமும் சாயி எனச்சரண் அடைந்தால் 
சங்கடம் விலகிவிடும் ! 
சர்வமும் நீயென பணிந்து விட்டால் 
சந்ததி மேன்மையுறும் ...!! 

கருணைக் கடலாம் பாபாவைத் தொழ 
கனவில் வந்திடுவார் ! 
தயாள சீலரை அழுது கும்பிட 
தரிசனம் தந்திடுவார் ....!! 

சாந்த சொரூபன் சாய்பக வானின் 
மகத்துவம் பாடிடுவோம் ! 
அல்லல் மிகுந்த வாழ்வினில் நமது 
தொல்லைகள் தொலைத்திடுவோம் ...!! 

அருமருந் தாவது பாபா வின்உதி 
அதிசயம் பலநிகழ்த்தும் ! 
பொறுமை நம்பிக்கை யுடன்வேண் டிடவே 
வேண்டுதல் நிறைவேறும் ....!! 

மதபே தமிலா மகானின் லீலைகள் 
மனதில் நிறுத்திடுவோம் ! 
சத்குரு சரணம் சரணம் என்றே
சாய்ராம் புகழ்சொல்வோம் ....!!!!


1 comment:


  1. ஐயப்பன் நமஸ்கார அஷ்டகம்



    Ayyappan Namaskara Ashtakam - YouTube

    http://youtu.be/QNPAMPzev5E

    MY FRIEND KS RAJAGOPAL SINGS THE SLOKAM
    அன்புள்ள ராஜு,

    ஷீரடியில் சாயிபாபா ஆரத்தியில் பங்குபெற்றுத் தரிசித்துத் திரும்பியபோது அதில் இடம்பெற்ற பாபா நமஸ்கார அஷ்டகம் நெஞ்சை நிறைக்க அதே வடமொழி சந்தஸ்ஸில் ஒற்றெழுத்து நீங்கலாக அடிக்கு 8 எழுத்துகள் என்றமைந்து ஐயப்பன் மீது இயற்றிய நமஸ்கார அஷ்டகம். எழுதி முடித்தபின் தான் கவனித்தேன், இப்பாடல் தொடங்கிய வார்த்தை அந்த சாயிநாதன் கொடுத்த வரம் என்று.
    "உதி" க்கின்ற. என்பதின் தொடக்கமே அவருடைய "உதி" பிரசாதம் என்று..

    பாடல் இதோ. யு ட்யூப் இணைப்பில் " அனந்த துலா" என்று தொடங்கும் நமஸ்கார அஷ்டகம் அனுப்பி உள்ளேன். அந்தப் பின்னணி இசையில் உன் மதுரக்குரலில் ஐயப்பன் நமஸ்கார அஷ்டகம் பாடிப் பதிவு செய்து கேட்க ஆசை. இது என் பணிவான வேண்டுகோள்.

    ஐயப்பன் நமஸ்கார அஷ்டகம்

    உதிக்கின்ற போதுன் முகம் பார்க்க வேண்டும்
    உழைக்கின்ற போதும் உனைப் பாட வேண்டும்
    துதிக்கின்ற போதே துயர் நீக்க வேண்டும்
    நமஸ்கார சாஷ்டாங்க ஸ்ரீ பூதநாதா !

    விதிக்கென்று மாளாது நீ காக்க வேண்டும்
    வினைக்குன்று நீபார்க்கத் தூளாக வேண்டும்
    நதிப் பம்பை தீபங்க ளேஆக வேண்டும்
    நமஸ்கார சாஷ்டாங்க ஸ்ரீ பூதநாதா !

    மலைக்காடு கோயில் மணித் தீப வாயில்
    மழைச் சாரல் வீசும் குளிர்த் தென்றல் காற்றும்
    நிலைக்காத வாழ்வில் நிஜம் காண வேண்டும்
    நமஸ்கார சாஷ்டாங்க ஸ்ரீ பூதநாதா !

    அஹங்காரம் போகும் அருட்பார்வை கூடும்
    அலங்கார தேஹம் கவிச்சோலை ஆகும்
    மஹத்தான தேவா. மணிகண்ட பாலா
    நமஸ்கார சாஷ்டாங்க ஸ்ரீ பூதநாதா !

    நதிக்கேது தேக்கம் பகற்கேது தூக்கம்
    நினைப் பாடும் நெஞ்சில் இருக்காது ஏக்கம்
    கதித்தோடும் காலத்தை நான் வெல்ல வேண்டும்
    நமஸ்கார சாஷ்டாங்க ஸ்ரீ பூதநாதா !

    அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே
    அழக் கூட மாட்டாத நான் உந்தன் சேயே
    பிடித்தென் கரம் பற்றி நீதூக்க வேண்டும்
    நமஸ்கார சாஷ்டாங்க ஸ்ரீ பூதநாதா !

    எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு போவோம்
    எதற்காக நாமிங்கு போராடுகின்றோம்!
    பதைக்கின்ற நெஞ்சில் பதம் பூக்க வேண்டும்
    நமஸ்கார சாஷ்டாங்க ஸ்ரீ பூதநாதா !

    புனஸ்காரம், பூஜைகள் ஸ்வர்கத்தில் சேர்க்கும்
    புலன் வென்ற யோகம் புதுப் பாதை காட்டும்
    நமஸ்காரம் அல்லாது வேறேது மார்க்கம்
    நமஸ்கார சாஷ்டாங்க ஸ்ரீ பூதநாதா !

    சு.ரவி.

    ReplyDelete