Wednesday, February 18, 2015

பாலகனே உயர்வாயடா




ஆறிரண்டு மாதங்களில் 
அழகாக வளர்ந்திட்டாய் 
அன்னைமுகம் கண்டதுமே 
அன்பாய்நீ புன்னகைப்பாய் ,,,,!! 

தாமரைத்தண்டு காலெடுத்து 
தத்தித்தத்தி நடைபயில்வாய் 
தடுமாறி விழும்போது 
தாய்பிடிக்கச் சிரித்திடுவாய் ....!! 

ஆராரோ நான்பாட 
அதைக்கேட்டு ரசித்திருப்பாய் 
அன்னைமடி சொர்க்கமென 
அமைதியாய்க் கண்துயில்வாய் ....!! 

விழிகளிலே பட்டதெல்லாம் 
விரல்சுட்டிக் கேட்டிடுவாய் 
வாங்கியுனக்குத் தந்தவுடன் 
வேண்டாமென மறுத்திடுவாய் ....!! 

கையில்கிடைத்த பொருளெல்லாம் 
வீசிவெளியே எறிந்திடுவாய் 
வேகமாகப் பிடிக்கவந்தால் 
விழுந்தடித்து ஓடிடுவாய் ....!! 

அச்சுவெல்லக் கட்டிபோல் 
அம்மாவென அழைக்கையிலே 
அண்டமே சுற்றுதடா 
அன்னையுள்ளம் சிலிர்க்குதடா ...!! 

எச்சில்முத்தம் நீதரவே 
என்மனமும் இனிக்குதடா 
எட்டிநெஞ்சில் உதைத்தாலும் 
எனக்கதுவும் இன்பமடா ....!! 

முத்துப்பல் எட்டிப்பார்த்து 
முல்லைப்பூவாய் சிரிக்குதடா 
முலைகடிக்க வலித்தாலும் 
முழுமனதாய் பொறுத்தேனடா ....!! 

பாலைபோல் வறண்டநெஞ்சில் 
பாலூறி வழியுதடா 
பிள்ளையுந்தன் வரவாலே 
பிறவிப்பயன் பெற்றேனடா ....!! 

கன்னக்குழி நகையழகில் 
கரைந்தமனம் தொலைந்ததடா 
கனவில்நீ இதழ்விரிக்க 
கமலமுகம் மலர்ந்ததடா .....!! 

பாதம்பட்ட இடமெல்லாம் 
பாரிசாதம் பூத்ததடா 
பாலகனேநற் பேறுபெற்று 
பாரினில்நீ உயர்வாயடா ....!!

No comments:

Post a Comment