Monday, May 28, 2018

முருகன் மும்மணிக் கோவை ...!!!



சிற்றிலக்கியப் படையல் ...!!! 
************************************** 
மும்மணிக் கோவை ....!!! 
********************************** 
காப்பு ....!!! 
*************** 
மும்மணிக் கோவையில் முப்பது பாக்களால் 
பெம்மான் முருகன் பெருமையைச் - செம்மையாய் 
நற்றமிழில் யான்பாட ஞான முதல்வனே 
பற்றினேன் நின்றன் பதம் . 

நூல் !! 
******** 
நேரிசை ஆசிரியப்பா ...!!! 
********************************** 
சிவனா ருமையின் செல்வக் குமரன் 
குவலயம் போற்றும் குறத்தி மணாளன் 
குன்றுகள் தோறும் குடிகொண் டிருப்பான் 
பன்னிரு விழிகளால் பவவினை தீர்ப்பான் 
அடியவர் கூடி அவன்புகழ் பாடி 
அடிதொழு திடவே அகங்குளிர்ந் திடுவான் 
கோல மயிலில் குறைகள் களைய 
பாலகன் வடிவில் பறந்து வருவான் 
நெஞ்ச முருகி நெகிழ்ந்து 
தஞ்ச மடைந்தால் தயைசெய் வானே ! 1. 

வெண்பா ...!!! 
******************* 
வான்மதி யோடு வனப்பாய் நதிசூடி 
மான்மழு வேந்தியோன் மைந்தனை - நான்மறை 
யோதும் முனிவர் உளத்தே நிறைந்தோனைக் 
காதினிக்கப் பாடு கனிந்து . 2. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************ 
கனிந்த மனத்தில் கவின்மிகு காட்சியைக் கண்டபடிப் 
பனித்த விழிகள் பரவசத் தோடு படையலிட 
இனிக்குந் திருப்புக ழெங்கும் முழங்கி எதிரொலிக்க 
நினைத்த பொழுதில் நிறைவாய்த் தொடர்வான் நிழலெனவே ! 3. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
நிழலின் குளுமையாய் நெஞ்சம் நிறைந்த 
அழகன் வாழும் அறுபடை வீட்டின் 
புகழைச் சொல்லப் புண்ணியம் கிட்டும் 
பகலு மிரவும் பக்கத் துணையாய்க் 
குருகு கொடியுடன் கூர்வேல் தானும் 
இருபுற மிருந்தே இனிதே காக்கும் ! 
துதிக்கு மடியவர் துயரை விலக்கி 
விதியையும் மாற்றி வினைக ளறுத்திடும்! 
கதியென நம்பிக் கைத்தொழ 
எதிரில் தோன்றும் இனியவன் முகமே! 4. 

வெண்பா ...!!! 
********************** 
முகங்களோ ராறுடன் முத்தா யொளிர்வான் 
இகபர நற்சுக மீவான் - குகனை 
தினந்தொறும் நெஞ்சுருகிச் சேவிக்கு மன்பர் 
மனக்குறை தீர்ப்பான் மகிழ்ந்து. 5. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************* 
மகிழ்ச்சிப் பெருக்கில் மலர்ந்த முகங்கள் வனப்புடனே 
ககன முலவும் கவின்நில வாயெழிற் காட்சிதரச் 
சிகண்டி தனிலேறித் தேவிய ரோடு திருவருளை 
முகிலாய்ப் பொழியும் முருகன் விழைவது முத்தமிழே !! .6. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
*********************************** 
முத்தமிழ் வல்ல முதியவள் ஔவை 
சித்தங் குளிரச் செய்த பாலன் ! 
அல்ல லளித்த அசுரரை அழித்தே 
எல்லை யில்லா இன்ப மளித்தவன் ! 
சீரலை வாய்தனில் சேவலும் மயிலுமாய்ச் 
சூரனை யேற்றுச் சுகப்பட வைத்தவன் ! 
அரனார் செவியில் அழகுற ஒமெனும் 
பிரணவத் துட்பொருள் பிரியமா யோதத் 
திருவே ரகத்திற் சீர்மிகத் 
திருவாய் மலர்ந்த சிவகுரு நாதனே !! 7. 

வெண்பா ....!!! 
******************* 
நாத வடிவாகி ஞாலம் நிறைந்தே,ஐம் 
பூதமா யெங்குமுள புண்ணியனின் - பாதம் 
பணியுமெழில் மீன்விழியாள் பார்வதி மைந்தன் 
தணிகைவடி வேலே சரண் . 8. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************ 
சரண்புகு மன்பரைத் தாயாய்ப் பரிவுடன் தாங்குபவன் 
துரத்திடும் வெவ்வினை தூர விரட்டிடும் தூயனவன் 
தரணியோர் போற்றும் தமிழ்க்கட வுள்திருத் தாள்பணிய 
அரவணைப் பானவன் அன்பி லுருகி யருள்பொழிந்தே !! 9. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
அருளைப் பொழியு மறுமுகன் விழிக 
ளொருபன் னிரண்டு முயர்வைத் தந்திடும் ! 
கரங்களீ ராறும் கண்ணீர் துடைத்து 
நரகெய் தாமல் நலமுடன் காக்கும் ! 
பாதம் பற்றிடப் பவவினை தீரும் 
வேதனை மாற்றி மீண்டிடச் செய்யும் ! 
பொன்னொளிர் மார்பில் பூண்ட வணிகளும் 
புன்னகை முகத்தில் பொலிவினைக் கூட்டும் ! 
சந்தம் கொஞ்சும் சலங்கைகள் 
கந்தன் வரவைக் காதலாய்ச் சொல்லுமே !! 10. 

வெண்பா ...!!! 
****************** 
சொல்ல வினிக்கும் துயரந் தொலைத்திடும் 
அல்லும் பகலும் அருந்துணையாய் - நல்ல 
வழிகாட்டும் ஓமெனும் மந்திரந் தன்னை 
மொழிவாய் மனமே முனைந்து . 11. 

கட்டளைக் கலித்துறை 
******************************** 
முனைந்து திருப்புகழ் முப்பொழு தோத முறுவலுடன் 
தனையே மறந்து தகதிமித் தோமெனத் தாளமிட்டு 
நனைந்த வுளத்துடன் நாடி வருவான் நலமளிக்க 
மனையா ளிருபுற மாக வமர்ந்து மயிலினிலே!! 12. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
மயில்கள் விராலி மலையி லாடக் 
குயில்கள் சேர்ந்து கூவி யழைக்கக் 
குளிர்ந்த குமரன் குன்றின் மீது 
களிப்பி லாடும் காட்சி விரியும் ! 
இமைகள் மூடும் இரவில் கனவில் 
உமையின் மைந்தன் உருவம் தோன்றும் ! 
நெஞ்ச முருகி நெகிழ்ந்து கசியத் 
தஞ்ச மடைந்து சந்ததம் நினைக்க 
முத்தி யளிக்க முருகன் 
சித்தங் கொள்வான் சிரித்த படியே !! 13. 

வெண்பா ...!!! 
****************** 
படியேறிச் சென்று பரமன் மகனை 
அடிமுத லுச்சிவரை யன்பால் - வடியும் 
விழிகளாற் கண்டுவிம்மி மெய்யுருகி வேண்டப் 
பழிபாவ மோடும் பயந்து. 14. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************ 
பயமேன் மனமே! பகலவன் கண்ட பனித்திரையாய் 
மயக்கம் விலகும் மயில்வா கனத்தினில் மால்மருகன் 
வயலூ ரினில்வாழ் வடிவே லழகன் வருகையிலே 
வியப்பி லுறையும் வியனுறைத் தேவர் விழிகளுமே!! 15. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
விழிகளின் பார்வையில் மேனி சிலிர்க்கும் 
மொழிகளும் மறந்து மோனம் பிறக்கும் ! 
பழனி மலையில் பாங்குடன் வீற்ற 
அழக னருளால் அதிசயம் விளையும் ! 
மார்பி லணிந்த மலர்மா லைகளும் 
சீர்மணம் பரப்பிச் சிந்தையில் நிறையும் ! 
செவ்வேல் தாங்கியச் செவ்விய தோளும் 
கொவ்வை இதழில் குறுநகை விரிப்பும் 
உவகை யளிக்க உள்ளம் 
கவலை மறக்கும் கடம்பனைக் கண்டே !! 16. 

வெண்பா ....!!! 
******************* 
கண்டமனம் பூத்திடும்; கண்கள் பனித்திடும்; 
வண்டமிழில் பாக்கள் வடித்திடும்! - தண்டனிட்டுக் 
கந்தனடி பற்றிக் கதறி அழுதிடும் 
செந்தூரில் கண்டு சிலிர்த்து.. 17. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************** 
சிலிர்த்த இதயம் திருவருள் நாடித் தினம்துதிக்க 
ஒலிக்கும் அலைகளில் ஓமெனும் சத்தம் உளம்நனைக்கப் 
பொலிவாய்க் குருபரன் பூரிப் புடனிதழ் புன்னகைத்து 
மலர்ந்த குறிஞ்சி மலராய் மகிழ்வான் மலையினிலே !! 18. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
மலையில் வாழும் மாலின் மருகன் 
சிலையாய் நெடிதுயர்ச் சிறப்பினைப் பெற்றுப் 
பத்த மடையில் பக்தருக் காக 
நித்த மருளை நீங்கா தருள்வான் ! 
அருண கிரியார்க் கருள்மழை பொழிந்து 
திருப்புகழ் பாடச் செய்த வேலன் 
முத்தை தருவென முதற்சொல் லெடுத்துச் 
சத்தாய்க் கொடுக்கச் சந்தங் கொஞ்சும் 
நற்றமிழ்ப் பாக்கள் நயமுடன் 
அற்புதஞ் செய்யும் அறுசுவை விருந்தே !! 19. 

வெண்பா ....!!! 
****************** 
விருந்தாய்த் தமிழை விரும்பிச் சுவைத்துக் 
குருவாய் விளங்கும் குகனின் - அருளால் 
நடப்பவை யாவும் நலமாய்த் திகழ்ந்து 
சுடரா யொளிரும் சுகம். 20. 

கட்டளைக் கலித்துறை ....!!! 
************************************* 
சுகந்தரும் வாழ்வில் துயர்கள் விலக்கித் துணையிருக்கும் ! 
தகதக வென்றொளி தங்கமாய் மின்னித் தகவளிக்கும் !! 
அகத்திருள் நீக்கி அறிவொளி கூட்டும் அருந்தவத்தால் 
பகலிர வில்வேல் பகையை விரட்டிப் பலந்தருமே !! 21. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
தருவா னுவப்புடன் சங்கத் தமிழை 
உருகி கேட்டா லுள்ள மலர்ந்தே ! 
முந்தை வினைகளும் முடிவினை யெட்டும் 
கந்த வேளின் கருணைப் பார்வையால் ! 
சரவண பவனென சந்ததம் சொல்லப் 
பரகதி யவனும் பரிவுட னளிப்பான் ! 
சந்தனம் மணக்கும் சன்னதி தன்னில் 
கந்தனின் பொன்முகம் காந்தமா யீர்க்கும் ! 
வல்லிமா ரிருவரை வணங்க 
இல்லற மென்று மினிமையாய் விளங்குமே !! 22. 

வெண்பா ...!!! 
****************** 
விளங்குமெழிற் காந்தனாம் வெற்றிவடி வேலன் 
திளைப்புடன் வள்ளியைச் சீண்டி - வளத்தவளைக் 
காதல் மணமுடித்துக் கன்னல் மொழியாளின் 
பாதம் வருடியதைப் பார் . 23. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************* 
பார்த்த விழிகளில் பாசத் துடனே பரிவிருக்கும் ! 
ஆர்க்கும் நதியில் அயிரைமீன் துள்ளு மழகிருக்கும் ! 
வார்த்தை வராமல் மவுனமாய்க் கண்கள் வடித்திருக்கும் ! 
சேர்ந்து வழிபடச் செப்பிடும் நாமம் தினமழகே !! 24. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
அழகன் ! விசாகன் ! அடியவர்க் கெளியவன் ! 
பழத்திற் காகப் பழனி உறைந்தவன் ! 
குக்குடக் கொடியோன் ! குன்றம் நிறைந்தோன் ! 
சொக்கனின் மைந்தன் ! சூரனை வென்றவன் ! 
வஞ்சிய ருடனே மங்கள மாக 
மஞ்ஞையி லேறி வாழ்த்து வழங்கச் 
சலங்கை யொலியின் சந்தம் கொஞ்சக் 
கலியுக வரதன் கடுகி வருவான் 
திருப்புக ழாலே தினந்தினம் 
விருப்பொடு துதிக்க வீடுபே றருளவே !! 25 . 

வெண்பா ...!!! 
***************** 
அருள்நிறை சித்தர்க் கருள்சிவ பாலன் 
அருணகிரி நாதரை ஆட்கொண் - டருளி 
அருணையில் காட்சி யளித்ததைக் கேட்டால் 
அருவியாய்க்கண் கள்சிந்து மாம் . 26. 

கட்டளைக் கலித்துறை ....!!! 
************************************* 
சிந்துமாம் வான்மழை சிங்கார வேலவன் தேரினிலே 
வந்திடும் போழ்தினில் வாகாய் வளியுடன் வாழ்த்திடவே ! 
சந்திர சூரியர் தாமும் தொழுது தலைவணங்கிச் 
செந்தமிழ்ப் பாக்களால் தேன்பாய்ச் சிடுவார் செவிகளிலே !!! 27. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
செவிகளில் பாயும் தீந்தமிழ் கானம் 
தெவிட்டா தென்றும் செங்கோ டனுக்கு ! 
அசையும் குண்டல மழகா யாட 
இசைக்கு மயங்கி இசைந்து வருவான் ! 
பட்டுக் கழுத்தில் பவள மாலையும் 
தொட்டுத் தழுவும் துகிலொடு நூலும் 
நெற்றியில் நீறும் நீண்ட திலகமும் 
பற்றி யிழுக்கும் பரவசத் தோடு 
சுண்டி யிழுக்கும் தூயனைக் 
கொண்டா டிடவே குளிர்வான் மனமே !! 28. 

வெண்பா ...!!! 
******************* 
மனத்தி லமைதி மலர்ந்திடும் வண்ணம் 
சினமும் மறைந்திடச் செய்வான் ! - வனத்தில் 
தவழும் இளங்காற்றாய்ச் சாமரம் வீசி 
உவகை யளிப்பான் ஒளிர்ந்து. 29. 

கட்டளைக் கலித்துறை ....!!! 
************************************** 
ஒளிரும் சுடரென ஓமெனும் மந்திரத் துள்ளிருப்பான் ! 
குளிர்ந்த நிலையில் குமரா வெனவே குரல்கொடுத்தால் 
விளித்த வுடனே விரும்பி யணைக்க விரைந்துவந்துத் 
தெளிவை யுணர்த்திடும் சேயோன் வணங்கும் திருச்சிவனே !! 30. 

நூற்பயன் ...!!! 
****************** 
மும்மணிக் கோவையின் முப்பது பாக்களை முப்பொழுதும் 
செம்மணி மார்பன் திருவடி போற்றியே செப்பிடுவோர் 
இம்மையில் வாட்டும் இடர்க ளனைத்து மினிவிலகி 
நம்பிய வண்ணம் நடந்திடும் யாவும் நலத்துடனே !!! 

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment