Thursday, May 17, 2018

காதலில் கருக்கொண்ட காப்பியங்கள் ....!!!

கண்ணனை மனத்தில் கணவனாய் வரித்துக்
***காதலி லுருகினாள் கோதை !
தண்டமிழ்ப் பாக்கள் அன்பினால் நெய்து 
***தன்னுளம் காட்டினாள் பேதை !
பண்பொடு நாளும் பக்தியும் செய்து
***பைங்கிளி பாடினாள் பாவை !
கண்ணனின் மீது தூயவள் கொண்ட
***காதலே அவளது கீதை ...!!!
தேன்மொழி யாலே பாசுரம் பாடித்
***திருவடி நொடிதொறும் நினைந்தாள் !
மான்விழி யாளும் மாலைகள் தொடுத்து
***மன்னனுக் கதனையே படைத்தாள் !
தான்முதற் சூடிப் பார்த்ததைப் போட்டுத்
***தாமரைப் பூமுகம் சிவந்தாள் !
வான்பிறை போலும் நுதலினை உயர்த்தி
***மாதவன் எழிலினை வியந்தாள் !!
கருமுகில் வண்ணன் கைத்தலம் பற்றக்
***கனவினில் பூத்தது மாலை !
விருப்புடன் மங்கை விழியுயர்த் திடவே
***விரிந்தது தேன்மலர்ச் சோலை !
அருகினி லிருந்து செய்திட நினைத்தே
***அன்புடன் கனிந்தது சேவை !
திருமணக் கோலம் விழிகளில் கண்டு
***திருவுளம் சிலிர்த்தனள் பாவை !!
சந்ததம் நெஞ்சில் கண்ணனை நினைத்துத்
***தையலும் மையலில் கரைந்தாள் !
சிந்தையுள் பூத்த காதலை அவள்தம்
***செந்தமிழ்ப் பாக்களில் நிறைத்தாள்!
விந்தையாய் ஊரார் பார்த்திடும் போதே
***மின்னலாய் ஐக்கிய மானாள் !
அந்தமிழ்ப் பெண்ணாள் அரங்கனை யாண்டாள்
***அன்பினா லொன்றுகலந் தாளே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment