Tuesday, May 8, 2018

தூது சுமந்த சிறகுகள் ....!!!


கண்ணகி சான்றிதழ் ...!!!
********************************

அக்கரைச் சென்ற மன்னனை எண்ணி 
***அலைகடல் போலுளம் பொங்கும் !
இக்கரை மீதில் துடித்திடு மிதயம்  
***இசைக்கையில் சோகமே மிஞ்சும் !
திக்கறி யாமல் தவித்திடும் படகாய்த்
***தியங்கிய நிலையினி லஞ்சும் !
விக்கிடும் போது நினைப்பது மவனோ
***விழைந்திடும் இக்கணம் நெஞ்சம் !!

தேனினு மினிய வார்த்தைகள் சொல்லிச் 
***சென்றவன் மனநிலை யறியேன் !
ஏனினும் அவனும் திரும்பிட வில்லை 
***ஏங்கியே இதயமும் கசிந்தேன் !
மேனியும் துவள இடையது மெலிய 
***மேகலை நழுவிடக் கண்டேன் !
வானிலே பறக்கச் சிறகுக ளிருந்தால்
***வரமென அவ்விடம் செல்வேன் !!

சோலையில் கொஞ்சும் பைங்கிளி உன்னைத் 
***தூதுவி டுத்திட நினைத்தேன் !
காலையில் கிளம்பி காதலைச் செப்பக் 
***கடுகிநீ சிறகுகள் விரிப்பாய் !
வேலையாய்ச் சென்ற தலைவனைத் தேடி 
***வேதனை உணர்ந்திடச் செய்வாய் !
பாலையி லவனைக் கண்டதும் தேற்றிப் 
***பக்குவ மாகவே  சொல்வாய் !!

நல்லதோர் சேதி கொண்டுநீ வந்தால் 
***நன்றியி லிருவிழி பனிக்கும் !
நெல்மணி தந்துன் சிறகினை வருட 
***நெஞ்சினில் நிம்மதி பிறக்கும் !
சொல்லெடுத் தடுக்கித் தூதினை மெச்சிச் 
***சுந்தர கவிதைகள் வடிக்கும் !
முல்லையாய் மலர்ந்து மகிழ்வினில் திளைக்கும் 
***முகத்தினில் புன்னகை விரியும் !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment