Monday, May 28, 2018

மும்மணி மாலை ...!!!

#சிற்றிலக்கியப்_படையல் :8 
கல்வியா ? செல்வமா ? வீரமா ? 
மும்மணிமாலை 
★ 
ஆக்கம்; 
ஆசுகவி வெங்கடேசன் (வெண்பா) 

ஆசுகவி விவேக்பாரதி (கட்டளைக் கலித்துறை) 

ஆசுகவி சியாமளா ராஜசேகர் 
(ஆசிரியம்) 
★ 
காப்பு 

(நேரிசை வெண்பா) 

கல்வியைச் செல்வத்தைக் காத்துநிற்கும் வீரத்தைச் 
சொல்லவந்தோம் பாட்டினில் தூய்தமிழே - வெல்லமாய் 
யாவரும்கேட் டின்புற அந்தமிழ்ச் சொற்களைப் 
பாவ விடுவாய் பரிந்து 

நூல் 

(நேரிசை வெண்பா) 

என்றும் எவருக்கும் எங்கும் பயன்தரும் 
நன்றெனச் சான்றோர் நவிலுவர் - குன்றின்மேல் 
நல்விளக் காய்த்தோன்றி நல்வழி காட்டும்நற் 
கல்வியைக் கற்பாய் களித்து (1) 

(கட்டளைக் கலித்துறை) 

களித்திடும் ஆவல் கருத்தினில் பூக்கக் கரமசைத்து 
விளித்திடும் போது வியனுல கேநம் விரலடைய 
அளித்திடும் செல்வம் அளந்திடும் நற்பணி ஆர்புரிவார் 
துளிர்த்திடும் செல்வம் சுரப்பது நாமுடன் துய்ப்பதற்கே! (2) 

(அகவல்) 

துய்த்திடுங் காதலும் துணிவெனும் வீரமும் 
உய்த்திடுஞ் சிறந்த உணர்வுக ளாகும் ! 
சற்றுஞ் சலியாத் தகைமை யோடு 
வெற்றியை யீட்ட வீரம் வேண்டும் ! 
நாட்டில் நாடொறும் நடக்கும் கேட்டினைச் 
சாட்டை யெடுத்துச் சுழற்றி வீச 
வல்லமை யுடனே மண்ணில் 
பொல்லது போக்கப் பொங்குக இன்னே !! 3. 

(நேரிசை வெண்பா) 

இன்னவர் ஈவா ரெமக்கின் னுரையென்றோர் 
எண்ணம் கொடுக்கும் எவருளரோ - அன்னவர் 
தாள்தொட் டவர்பால் தரமான கல்விபெறல் 
வாள்தொடும் வண்மையதற் கொப்பு (4) 

(கட்டளைக் கலித்துறை) 

ஒப்பில் பொருள்நமக் கோங்குதற் குற்ற உயர்வழிகள் 
செப்பும் பரம்பரை சேர்த்தவை தீர்த்தவை சேருழைப்பின் 
திட்ப மளிக்கும் திரட்டு கலைஞர் திறனறிந்து 
நட்பும் உலகமும் நல்குவ தென்றிவை நன்கறியே! (5) 

(அகவல்) 
நன்கறி மனமே! நந்தமிழ் மரபின் 
தன்னிக ரற்ற தலைமைப் பண்பாம் 
வீரந் தன்னை விவேகத் துடனே 
தீர மிக்கவன் செயல்படுத் திடுவான்! 
வித்தைகள் கற்று விரிந்த அறிவால் 
புத்தியுந் தீட்டிப் புரிந்திடும் போரில் 
விலைமதிப் பில்லா வெற்றியால் 
தலைநிமிர்ந் திடுவது தமிழரின் செருக்கே!! 6. 

(நேரிசை வெண்பா) 

செருக்கொடு தானெனும் தீக்குணம் மாய்த்து 
வருத்திடா இன்சொலே வாய்மேல் - வருமாம் 
நலந்தரும் கல்வி நயமாய்ப் பயில 
வளந்தருமக் கல்வி வளர் (7) 

(கட்டளைக் கலித்துறை) 

வளர்க்கும் பொருள்நல் வழியில் வருமேல் வளர்கருணை 
துளிர்க்கும் மனத்தில் துறவோர் இடம்படும் தூய்பொருள்போல் 
அளிக்கும் குணமும் அளக்கும் அறிவும் அணுகிவந்து 
தளர்த்தும் வறுமைத் தளையை நலப்பொருள் தந்திடுமே! (8) 

(அகவல்) 

தந்திடும் நன்மைகள் தரணியில் பலவாம் 
விந்தைகள் விளைந்திடும் வீரத் தாலே 
வங்கக் கரையினில் மாணவர் திரண்டு 
சிங்கத் தமிழராய்ச் சீறி யெழுந்து 
ஜல்லிக் கட்டைத் தமிழினம் மீட்க 
வெல்லும் முறையில் விதைத்த வீரம் 
நன்னெறி வகுத்து நடந்திடப் 
புன்னகை யோடுளம் போனது களவே!! 9. 

(நேரிசை வெண்பா) 

களவொடு கத்தும் கலையெனக் கொண்டு 
வளமுறக் கற்க மறுப்பாய் - அளவிறந்த 
துன்பமும் தோற்றுவிக்கும் தூய்மையிலாக் கல்வியது 
வன்முறைக் கீந்திடும்வாய்ப்பு (10) 

(கட்டளைக் கலித்துறை) 

வாய்த்திடும் செல்வம் வளமிலா அல்வழி வந்திடிலோ 
ஏய்த்திடும் கர்வம் எவரையும் போற்றா தெதிர்த்துவரும்! 
காய்ந்திடும் வன்மம் கடுஞ்சினம் யாவும் கவிந்துவரும் 
மாய்ந்திடும் நேசம்! மனங்களில் சோகம் மலிந்திடுமே! (11) 

(அகவல் ) 

மலிந்திடும் நாட்டில் வன்முறை தினமும் 
வலிகளால் துயருறும் மக்களின் நிலைமை 
சொல்லவு மியலுமோ? துட்டரின் வீரம் 
நல்லதற் கன்று; நச்சினைப் போன்றது! 
கத்தியால் குத்திக் கொலைகள் கொள்ளை 
நித்தமும் நடக்கும் நிலைமையைக் கண்டால் 
பிள்ளை மனமும் பித்தாய்த் 
துள்ளும் அசட்டுத் துணிச்சலைக் கற்றே!! 12. 

(நேரிசை வெண்பா) 

கற்கையில் வந்த களிப்பினை மிக்குமாம் 
கற்றதை மற்றவர்க்குக் கற்பிக்கக் - கற்றவர் 
உற்ற உயர்வெலாம் கற்பித்த வாசானுக் 
கெற்றைக்கும் ஈயுமாம் இன்பு (13) 

(கட்டளைக் கலித்துறை) 

இன்புடைச் செல்வ மியற்றும் பயனதை ஈதலென்பார்! 
துன்புடை மக்கள் துணையென நின்று துயரறுக்கும்! 
அன்புட னாழ்ந்த அறிஞர் கரத்தில், அகண்டதெரு 
முன்புறை ஊருணி போல்பயன் நல்கும் முழுப்பொருளே! (14) 

(அகவல்) 

பொருளா லுதவி புரிவார் சிலபேர் 
விரும்பி யுழைத்து வியக்கவைப் பார்சிலர் ! 
இருப்பினும் வீர மிருந்தா லென்றும் 
வருத்து மின்னலை மாய்த்திட லாமே ! 
எல்லையைக் காக்கும் இராணுவத் தாரும் 
தொல்லைகள் போக்கித் துணையா யிருப்பார்! 
போரில் வீரம் பொங்கச் 
சோர்வறச் சுடுவார் துமுக்கி யெடுத்தே!! 15. 

( துமுக்கி - துப்பாக்கி ) 

(நேரிசை வெண்பா) 

எடுக்க எடுக்க குறையுமொரு செல்வம், 
கொடுக்கக் கொடுக்கக் குறையா - மிடுக்குடை 
கல்விக் கிணையாமோ காசினியில் கல்வியே 
செல்வத்தின் மேலான சீர் (16) 

(கட்டளைக் கலித்துறை) 

சீருடன் பாடும் சிறந்த புலவனும் செல்வமடைந் 
தூருடன் வாழும் உயர்நெறி வேண்டி ஒருவரின்பால் 
பேருடன் பாடி பெரும்பொருள் கேட்டுப் பெறும்நிலத்தே 
ஆருடன் சொல்வர் அறிவு பொருளின் அரியதென்றே! (17) 

(அகவல்) 
அரிய தென்றே அனைவருஞ் சொல்வர் 
விரிந்த அறிவாய் விளங்கும் கல்வியை ! 
புரியார் சொல்வார் பொன்னும் பொருளும் பெரிதாய்க் கூட்டும் பெருமை யென்றே ! மிக்குயர் வானது வீர மென்றே 
இக்கண முணர்ந்தா லெளிதாய்ப் புரியும் ! நெஞ்சி லச்சம் நிலைத்தால் 
எஞ்சும் வாழ்வில் இடர்கள் வருமே !! 18. 

(நேரிசை வெண்பா) 

இடர்வரின் அக்காலம் எப்படி யேனும் 
உடனொரு செய்கையால் உய்வுண்(டு) - இடங்கருதிச் 
சிந்திக்கும் ஆற்றல் சிறப்பான கல்விதரும் 
என்றைக்கும் கல்வியே ஏர் (19) 

(கட்டளைக் கலித்துறை) 

ஏர்பிடிக் கின்ற உழவரும் மல்லரங் கேறியிங்கு 
மார்பிடிக் கின்ற மறவரும் வல்ல மதக்கரியால் 
போர்பிடிக் கின்ற பொறியுடை வீரரும் போகமெனும் 
தேர்பிடிக் கின்றவர் செல்வர்பின் னோடித் திரள்பவரே !(20) 

( அகவல் ) 
திரள்திரளாய்க் கூடிச் சேர்ந்து போரிட 
வரமாய் வெற்றியை வளைத்துப் போடலாம்! 
நெஞ்சி லுரத்துடன் நேர்மைத் திறத்துடன் 
வஞ்சக அரசை மாற்றி யமைக்கலாம் ! 
கல்வியால் பணத்தால் கைவரப் பெறாததை 
வெல்லலாம் முயன்றால் வீரத் தாலே! 
மறக்குடி பிறந்தோர் வாழ்வில் 
சிறப்புடன் சவால்களைத் தேடிச் செல்வரே!! 21. 

(நேரிசை வெண்பா) 

செல்வர்க் கடங்குவோர் சீறவும் செய்வரே 
செல்வரின் செல்வம் மறையுமேல் - கல்வியில் 
வல்லவர்தம் சீரோ மறையா தொருகாலும் 
கல்விகுன்றாத் தன்மையான் காண் (22) 

(கட்டளைக் கலித்துறை) 

காணும் பொருளதே கல்விக் கடித்தளம் கற்றவர்கள் 
பூணும் பெயரும் புகழும் பொருளைப் புரட்டலிலே! 
பேணும் பொருளினைப் பெற்றவர் கொள்ளும் பெருமையெலாம் 
பாணர் புலவர் படைப்பது மில்லையிப் பாரினிலே! (23) 

(அகவல்) 

பாரினில் வீரமே பகைவரை யொடுக்கும் 
சீரிய பண்பாம்; செல்வ மின்றி 
ஏழையா யிருக்கலாம்; என்றும் வாழ்வில் 
கோழையா யிருத்தல் கூடா தென்றுணர் ! 
கற்றிலன் ஆயினும் காதால் கேட்கலாம் 
வெற்றி யடைய வீரமே தேவை ! 
முன்னோர் பாதையில் முனைந்தே 
என்றும் நனிபுக ழீட்டுவர் மறவரே !! 24. 

(நேரிசை வெண்பா) 

மறவோர்க் கடங்குவோர் மல்லர் ஒருநாள் 
மறைவரேல் தாரார் மதிப்பை - அறவழிக் 
கற்றோர்தம் சீரோ கரையா தொருநாளும் 
உற்றவழி கல்வியென் றோர் (25) 

(கட்டளைக் கலித்துறை) 

ஓர்புக ழாரம் உணவளிக் காதே! உறுதியுடன் 
போர்புகும் வீரம் பசியறுக் காதே! புகல்மறத்தால் 
சேர்ப்புக ளாகச் செருக்கே மலரும்! செழுமையெலாம் 
தீர்ப்புகள் போடும் திருவுடை யான்கண் திகழ்பவையே! (26) 

(அகவல் ) 

திகழ்பவை யாவும் சீர்மீக வமைய 
அகவாழ் வினிலும் ஆற்றல் வேண்டும் ! 
சங்க காலத் தமிழர் வாழ்வில் 
மங்கையர் வீரம் மகத்துவம் மிக்கது 
படித்தறி யாத பாவையார்க் கூடத் 
துடிப்பு மிகுந்து துணிச்ச லுடனே 
எதிர்கொண் டிடுவார் இன்னலை 
அதிசயந் தானவர் அறிந்திடார் கல்வியே !! 27. 

(நேரிசை வெண்பா) 

கல்வி கவினுறு சீரெனினும் கற்றவர்க்குச் 
செல்வத் தொடுமறமும் சேர்ந்திடல் - நல்வழியாம் 
இம்மூன்றும் நன்றாய் இயைந்தவர்க் குண்டாகும் 
இம்மை மறுமையில் இன்பு (28) 

(கட்டளைக் கலித்துறை) 

மறுமையும் இன்பம் வளர்த்திடுங் கல்வி! மகிழ்ச்சிதந்து 
வறுமையின் துன்பம் வதக்கிடும் செல்வ வளம்நிலைக்க 
மறமையும் தேவை மதியிலிம் மூன்றும் மலர்ந்துவிட்டால் 
திறமையும் செல்வத் திரட்சியும் வீரமும் சேர்ந்திடுமே! (29) 

(அகவல்) 

சேர்ந்திடும் போது சிறப்புறும் மூன்றும் 
நேர்வழி காட்டி நிமிர்ந்திட வைக்கும்! 
எண்ணும் எழுத்தும் ஏற்றம் தந்திடும் 
மண்ணில் செல்வமே வளத்தினைக் கூட்டிடும்! 
துணிவைத் தக்க துணையாய்க் கொண்டால் 
அணியாய் விளங்கும் அவனியில் வாழ்வு ! 
வீரத் தோடு தேவை 
சீரெனக் கல்வியுஞ் செல்வமு மென்றுமே !! 30. 

நூற்பயன் 
************* 
மூவ ரிணைந்து முத்தொளிர் பாக்கள் 
ஆவ லுடனே அள்ளி வழங்கினோம் ! 
வெண்பா காரிகை விரும்பு மகவலைச் 
செண்டெனக் கல்வி செல்வம் வீரத்தை 
மும்மணி மாலையாய் மொத்தமாய்த் தொடுத்தோம் ! 
அம்புவி வாழ்விலிவ் வனைத்தும் பெறுவதன் 
அவசிய முணர்ந்தே அன்புடன் 
கவனமாய்ப் படிக்க காரியம் துலங்குமே !! 
★★★

No comments:

Post a Comment