Wednesday, September 27, 2017

இருபா இருஃபது ....!!!



#சிற்றிலக்கிய_வரிசை
இருபா இருஃபது
***********************
காப்பு
********
ஆறுபடை வீட்டின் அழகனைப் போற்றியே
ஈறு முதலியாய் இக்கணம் - வீறுடன்
பாக்கள் இருபஃது பைந்தமிழில் பாடிடவென்
வாக்கில் கணபதியே வா.
நூல்
******
வெண்பா
************
தமிழ்க்கடவு ளென்று தரணியே போற்றும்
அமிர்தை மகனாம் அழகன் ! - குமரன்
திருவடி பற்றித் திருப்புகழ் பாடக்
குருவாய் வருவான் குளிர்ந்து . 1.
அகவல்
**********
குளிர்ச்சியாய் வேலன் கோல மயிலில்
களிப்புட னாடிக் கடுகியே வந்து
கூர்வடி வேலால் குறைகளைப் போக்கும்
சீர்மிகு தலமாம் திருப்பரங் குன்றமே ! 2.
வெண்பா
************
குன்றுகள் தோறும் குடியிருக்கும் கந்தனின்
மின்னும் விழிப்பார்வை வெற்றிதரும்! - புன்னகை
சிந்திடும் தேனூறும் செங்கனி வாயினில்
அந்தமிழ் கொஞ்சும் அழகு . 3.
அகவல்
***********
அழகனைக் குகனை அம்பிகை பாலனைப்
பழமுதிர்ச் சோலையில் பார்த்திடல் பரவசம்
வலமிட மாக வல்லிமார் இருவரும்
நலமுட னருளும் நற்படை வீடே ! 4.
வெண்பா
************
வீடளித்(து) ஆட்கொள்ள வேலன் விரைந்திடுவான்
பாடலினைக் கேட்டுப் பரவசமாய் ! - வேடர்
குலமகள் வள்ளியுடன் கூடி மயிலில்
துலங்கு மெழிற்கோலத் தோடு . 5.
அகவல்
***********
தோடுடைச் செவியன் சொற்றுணை வேதியன்
காடுடை யார்மகன் கார்த்தி கேயனின்
பன்னிரு விழிகளின் பார்வை பட்டால்
துன்பமும் விலகிச் சுகங்கள் பெருகுமே ! 6.
வெண்பா
*************
பெருகிடு மன்பால் பிழைகளும் மாறும்
குருபரன் நல்லருள் கூடும் - முருகனை
ஏரகத் தானை இருவிழி நீர்மல்கச்
சீரகத் தோடுநீ தேடு . 7.
அகவல்
***********
தேடும் குகனைச் சீரலை வாய்தனில்
பாடும் கடலலை பரிவுடன் நாளும்
செந்தூர் அழகனின் சேவடி தொடவே
வந்து கரைதனை வருடிச் செல்லுமே ! 8.
வெண்பா
************
செல்லும் வழிக்குத் திருப்புகழ் பக்களே
வெல்லும் படையாய் வினைவிரட்டும் ! - தொல்லுலகில்
உற்ற துணையாய் உடன்வந்து முப்போதும்
அற்புதஞ் செய்யு மருள் . 9.
அகவல்
***********
அருள்நிறை நோக்கில் ஆணவ மழிந்து
விரும்பிடும் செயல்களில் வெற்றி கிட்டும்
தணிகைவேல் முருகனைத் தமிழால் வாழ்த்திப்
பணிவுடன் தொழுதிடப் பகையும் விலகுமே ! 10.
வெண்பா
************
விலகிடும் வல்வினை வேண்டிட நாளும்
பலனும் பெருகிடும் பல்கி ! - நலமுடன்
வாழ பழனி மலைபாலன் பாங்குடன்
தோழனாய்த் தந்திடுவான் தோள். 11.
அகவல்
***********
தோளினில் காவடி தூக்கி வழிபட
கோளினால் வந்த குறைகள் அகலும்
ஆவினன் குடிவாழ் அறுமுகன் கைகளால்
தாவியே அணைப்பான் தாய்போல் பரிந்தே ! 12.
வெண்பா
************
பரிவுடன் பார்த்திடும் பன்னிரு கண்கள்
புரிந்திடும் லீலைகள் பொற்பாய் - எரித்திடும்
தீயன யாவையும், தேய்ந்திடும் வாழ்வினில்
காயமிது பொய்யெனக் கண்டு . 13.
அகவல்
***********
கண்ட கனவில் கழல்க ளிரண்டில்
தண்டை யுடனே சதங்கையும் கொஞ்சிடச்
செம்பொன் மயிலினில் சிரிப்பொடு வந்தான்
பெம்மான் முருகன் பிரிய முடனே ! 14.
வெண்பா
************
உடனே விரைந்திடில் உள்ள முவக்கும்
கடம்பன் திருமுகம் கண்டே !- இடர்கள்
களையுந் தருணமிதே! கந்த வடிவேலா !
வளைகரத் தாளுடன் வா . 15.
அகவல்
***********
வாராய் மருத மலைவாழ் முருகா
தாராய் வரங்கள் தயவுடன் நீயே
தீரா வினைகள் தீர்த்திட வேண்டும்
வீரா! சூரனை வென்ற தேவே ! 16.
வெண்பா
*************
தேவே! உனையன்றித் தெய்வம் எனக்கில்லை
ஆவேசம் கொண்டபடி ஆடிவரக் - காவேரி
ஆற்றில் கரைபுரளும் ஆனந்த வெள்ளமாய்
ஊற்றெடுத்துப் பொங்கு முளம். 17.
அகவல்
***********
உளமே கோயிலாய் உறையும் முருகா
விளக்கின் சுடராய் விளங்கு மொளியில்
மனத்தில் பதிந்த மாசினை யகற்றி
அனந்த சத்தி அளிப்பவன் நீயே ! 18.
வெண்பா
*************
நீயேயென் வாழ்வினில் நிம்மதியும் தானளித்து
நாயேனை யாட்கொள்வாய் நாடிவந்தே! -நோயேதும்
அண்டாமல் காத்திடும் ஐங்கரன் தம்பியே
தண்டமிழ்ப்பா பாடவரந் தா . 19.
அகவல்
***********
தாங்கும் துணையே! தங்கச் சிலையே!
நீங்கா வருளை நித்தம் பொழிவாய்!
விரல்கள் குவித்தேன் வேலின் வடிவாய்
சரவண பவனே! தருவாய் தமிழே ! 20.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment