Friday, October 11, 2019

பன்னிரண்டுசீர் விருத்தம் ...!!!

கருணைக் கடலென்று கருதி உனைநம்பிக்
கந்தா ஓடிவந்தேன் !
கவலை வறுத்தெடுக்கக் கண்ணீர் ஊற்றெடுக்கக்
கதறி அழுதுநின்றேன் !
இருளில் ஒளிதேடி ஏழை படும்பாட்டை
இறைவா அறியாயோ ?
இதயம் குளிர்விக்க அன்போ(டு) அரவணைக்க
இனியும் தயக்கமென்ன ?
மருதா சலனுன்னை மனத்தில் நினைத்தபடி
மலையி லேறிவந்தேன் !
வழியில் மயிலாட அதுதான் நீயென்று
மௌன மாய்ச்சிலிர்த்தேன் !
அருளைப் பொழிவதற்குச் சற்றும் மனமிலையா
அழகா இதுமுறையா ?
அடிமேல் அடிவிழுந்து துடிக்கு மிதயத்தை
அன்பால் வருடாயோ ?? 1.
வெள்ளைப் பட்டுடுத்தி நீல மயிலேறி
வீடு பேறருள
வெற்றி வேலேந்தி சேவற் கொடியோடு
விரைந்து வரவேண்டும் !
அள்ளும் அழகிலிரு வல்லி மாரோடும்
அன்னை தந்தையோடும்
அண்ணன் கணபதியும் துணையாய் உன்னுடனே
ஆடி வரவேண்டும் !
துள்ளி வருங்கோலம் விழிகள் கண்டவுடன்
துன்பம் விலகியோடத்
தொடரும் இன்பத்தில் உள்ளம் நெகிழ்ந்தபடிச்
சுகமாய் நனையவேண்டும் !
வள்ளல் உன்புகழைத் தெள்ளு தமிழில்நான்
வடித்து மகிழவேண்டும் !
வற்றாக் கவிமழையில் உன்னைக் குளிர்வித்து
வாழ்த்து பெறவேண்டும் !! 2.
கல்லாய் இருந்தாலும் கண்ட கண்களிலுன்
காட்சி கிடைத்துவிட்டால்
கள்ளம் அழிந்துவிடும் உள்ளம் தெளிந்துவிடும்
கவலை தோற்றோடும் !
சொல்லே எழும்பாமல் சும்மா இருப்பதுதான்
சுகமென் றுணருமுள்ளம் !
சுற்றி நடப்பதெல்லாம் அழுத்தம் தந்தாலும்
சுமையாய்த் தோன்றாது !
முல்லை மலர்போலும் முத்து நகைசிந்தி
முருகா வந்திடுவாய் !
மூல மந்திரத்தை ஓதும் அடியவரின்
மூளும் வினைதீர்ப்பாய் !
புல்லில் பனித்துளிபோல் நிலையில் லாவாழ்வைப்
புரிய வைத்திடுவாய் !
பொன்னை நிகர்த்தவுனைப் பொலிவில் சுந்தரனைப்
போற்றி வணங்குவனே !! 3.
கொஞ்சு தமிழ்பேசும் அடியார் மனங்களிலே
குமரா களித்திருப்பாய் !
கோல விழியாளின் பாகு கனிமொழியில்
குளிர்ந்து மகிழ்ந்திருப்பாய் !
கஞ்ச மலர்ப்பாதம் பற்றிப் பணிவோரைக்
கனிவாய்க் காத்திடுவாய் !
கழலில் சிலம்பொலிக்க ஆறு தலையளிக்கக்
கடம்பா ஓடிவாராய் !
தஞ்ச மடைந்தோரைத் தணிகை வேல்முருகா
தயவாய்த் தாங்கிடுவாய் !
தங்கத் தேரேறிப் பவனி வரும்போது
தமிழால் வாழ்த்திடுவாய் !
பஞ்சா மிர்தமென வாழ்வின் சுவைகூட்டிப்
பத்தர் உளங்கவர்வாய் !
பழனி மலைமீதில் தண்டா யுதபாணி
பாலா அருள்புரிவாய் !! 4.
அலைகள் முத்தமிடும் செந்தூர்க் கடலோரம்
அழகாய் வீற்றிருப்பாய் !
அசுர வதஞ்செய்து தேவர் குலங்காத்தே
அமைதி யாகநிற்பாய் !
தலைகள் ஓராறு கொண்ட அறுமுகவா
தகப்பன் சாமிநீயே !
தரும மிகுசென்னை கந்த கோட்டமெனும்
தலத்தில் உறைபவனே !
மலையில் முகிலிறங்கி மாயோன் மருகனுன்னை
வணங்கும் எழில்கண்டேன் !
மயில்கள் நடனமிடும் விராலி மலையிலுன்றன்
மயக்கும் காட்சிகண்டேன் !
நிலைத்த பத்தியினால் கன்னல் திருப்புகழை
நித்தம் பாடிடுவேன் !
நெஞ்சம் கசிந்துருகிப் பாட நீகேட்டு
நிறைவாய் ஆட்கொளவா !!! 5.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment