Friday, October 11, 2019

பைந்தமிழ்ச் சோலை ...!!!

பைந்தமிழ்ச் சோலை ....!!!
***********************************
பாமலரும் சோலையிது பைந்தமிழின் சோலை
பாவலர்மா வரதராசன் தோற்றுவித்த சோலை !
தேமதுர மரபிலவர் பயிற்றுவிக்கும் சோலை
தீந்தமிழை முகநூலில் அலங்கரிக்கும் சோலை !
நாமகளும் நனியழகாய் நடமாடும் சோலை
நற்றமிழாள் மகிழ்ச்சியுடன் உறவாடும் சோலை !
பூமணத்தை விஞ்சிநிற்கும் பாமணத்தை நுகர்ந்தோர்
பூரிப்பில் மனமுவந்து வாழ்த்துகின்ற சோலை !!
விருத்தங்கள் விளையாடத் திளைத்திருக்கும் நெஞ்சம்
வியக்கவைக்கும் சந்தத்தில் வண்ணங்கள் கொஞ்சும் !
அருவியென வெண்பாக்கள் அமுதாகப் பொழியும்
அதில்நனைந்த உள்ளத்தில் கவிபொங்கி வழியும் !
இருள்விலக்கும் தமிழ்க்கூடல் நினைத்தாலே இனிக்கும்
இணையில்லாச் சேவைகண்டு விழியிரண்டும் பனிக்கும் !
பெரும்பேறு பெற்றதனால் இணைந்தோமிச் சோலை !
பேரழகாய்ச் சூட்டிடுவோம் யாப்பினிலே மாலை !!
பெருங்கவியாம் பாவலரின் வழிகாட்ட லோடு
பீடுநடை போடும்பைந் தமிழ்ச்சோலை பாரில் !
திருவண்ணா மலையினிலும் தன்கிளையை விரித்துச்
சிறப்பாக ஓராண்டை நிறைவுசெய்த சோலை !
அருந்தமிழின் எழில்மரபைக் காப்பதேதன் பணியாய்
அரவிவேகா னந்தனிங்கே செயலாற்றும் சோலை !
விருந்தாக மாதமொரு கவியரங்கம் நடத்தி
வெற்றிக்கு வித்திட்ட திருவருணைச் சோலை !!
பொறுப்போடு கற்பிக்கும் பயிலரங்கம் உண்டு
போட்டிகளு முண்டிங்கே விருதுகளும் உண்டு!
சிறப்பான ஏடுகளின் அறிமுகமு முண்டு
சிந்தைக்கு விருந்தாகச் சிறப்புரையு முண்டு !
முறையோடு நெறிப்படுத்தும் முனைவரிவர் தொண்டால்
முத்தமிழும் மனங்குளிரும் பேரவையைக் கண்டு !
குறைவின்றி இச்சோலை பணிசிறக்க வேண்டும்
குவலயமே வியக்குவண்ணம் உயர்வடைய வேண்டும் !!
தேவைகளைக் கண்டுணர்ந்து புகட்டும்நற் றாயாய்
செந்தமிழைத் தெவிட்டாமல் ஊட்டிவிடும் சோலை !
பாவகைகள் பலவற்றை ஆவலுடன் இங்கே
பாட்டறிந்த புலவோரும் கேட்டறிந்து செல்வார் !
காவியமும் படைத்திடுவார் மரபறிந்த பின்னால்
கணினிவழிக் கனித்தமிழைக் கற்பிப்பார் பின்னாள் !
பாவலரால் உருவான பைந்தமிழின் சோலை
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழி !!
சியாமளா ராஜசேகர் !
( பைந்தமிழ்ச் சோலை திருவண்ணாமலைக் கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்த கவிப்பொழிவில் வாசித்த கவிதை )

No comments:

Post a Comment