Friday, October 11, 2019

ஆசானுக்கு வாழ்த்து ...!!!

நெஞ்சினிக்கும் செம்மொழியாம் பைந்தமிழோ டுறவாடும்
நேயக் காரன் !
கொஞ்சுதமிழ்ப் பாக்களினால் கோடியின்பச் சுவைதன்னைக்
கூட்டும் மாயன் !
அஞ்சாமல் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைப்போல்
ஆற்றல் மிக்கோன் !
நஞ்சென்று பிறவொதுக்கித் தனித்தமிழைச் சீராட்ட
நாட்டம் கொண்டோன் !!
கொண்டலெனப் பொழிந்தாலும் தணியாத தமிழ்ப்பற்று
கொண்ட கோமான் !
கண்ணிமையாய்ச் செந்தமிழின் சீரான மரபுகாக்கும்
காவல் காரன் !
வண்டமிழாள் மலரடியை இதயத்தில் தான்பதித்த
வரத ராசன் !
எண்ணற்ற பாவலரைச் சோலையிலே வளர்த்துவிடும்
எங்கள் ஆசான் !!
ஆசானென் றாலிவர்போல் மிகவாழ்ந்த தெளிவான
அறிவு வேண்டும் !
காசாக்க முயலாமல் கற்றவற்றைப் பிறர்க்களிக்கும்
கருணை வேண்டும் !
கூசாமல் விருதுக்கு விலைபோவோர் மத்தியிலே
குன்றாய் நின்று
பேசாமல் அமைதியாகப் பலபுதுமை செய்துயரப்
பெருமை பெற்றோன் !!
பெற்றமக வைப்போல்தான் நிறுவியபாச் சோலையினைப்
பேணிக் காக்கும்
நற்றமிழ்த்தாய் தவப்புதல்வ னாம்வரத ராசனையிந்
நாடே போற்றும் !
கற்பித்த லைவிரும்பிக் கைம்மாறு கருதாமல்
கடமை யாற்றும்
வற்றாத தமிழ்நதியை மனதார வாழ்த்துமிந்த
வையம் என்றும் !!
என்றுமுள தென்றமிழின் தேமதுர மரபுதனை
எல்லோ ருக்கும்
கன்னலெனச் சாறெடுத்தே எளிதாகப் புகட்டிவிடும்
கனிந்த உள்ளம்
குன்றனைய உயர்வான புகழீட்டி எந்நாளும்
குறையில் லாத
நன்மணியாய் ஒளிவீசும் பாவலரை வணங்கியன்பாய்
நன்றி சொல்வோம் !!
சொல்வோம்பைந் தமிழ்ச்சோலைக் குயில்களெல்லாம் வாழ்த்துகளைத்
தூய அன்பால்
கல்லையும்பொற் சிலையாகச் செதுக்கியநம் சிற்பிக்குக்
கவிதை யாலே !
நெல்லுக்குள் மணியாக மறைந்திருக்கு மிவர்பெருமை
நீடு வாழ
வல்லவளாம் தமிழன்னைப் பொற்பாதம் வணங்கியொன்றாய்
மகிழ்வோம் யாமே !!
( எங்கள் ஆசான், பைந்தமிழ்ப்பேராசான், மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களுக்கு சோலையின் நான்காம் ஆண்டு நிறைவுவிழாவில் , 20 கவிஞர்கள் யாத்த 'பைந்தமிழ்ச் சோலை பன்மணிமாலை என்ற ' நூலைக் காணிக்கையாக்கினோம்.. அதில் நான் எழுதிய பாக்கள் )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment