Saturday, January 26, 2019

பௌர்ணமி நிலவில் ....!!!



வண்ணவண்ண ஆடைகட்டும் வானப் பெண்ணின்
***வடிவான நெற்றிதனி லிட்ட பொட்டோ ?
கண்கவரும் ஒளியுடனே காண்போ ருள்ளம்
***காந்தமெனக் கவர்ந்திழுக்கும் தங்கத் தட்டோ ?
எண்ணற்றத் தாரகையர் சூழ்ந்தி ருக்க
***இளமையுடன் வளையவரும் காதற் சிட்டோ ?
விண்ணகத்துக் கவினரசி யாகப் பூத்து
***விடியலிலே மறைந்துவிடும் மாய மொட்டோ ??
மிதந்துசெலும் முகிலிடையில் முகம்ம றைத்து
***விளையாடும் வெண்ணிலவின் எழிலைக் கண்டால்
விதவிதமாய்க் கற்பனைகள் ஊற்றெ டுத்து
***விழிதிறந்தே கனவுகளில் மூழ்கச் செய்யும் !
இதமான இரவினிலே இதயம் கொய்தே
***இனியபல நினைவுகளை மீட்டிச் செல்லும் !
மதிமயக்கிக் காதலரை உருக வைத்து
***மணிமணியாய்ப் பலகவிதை எழுதச் சொல்லும் !!
நிறைமதியை நடுநிசியில் காணும் உள்ளம்
***நீளாதா இவ்விரவு மென்றே கெஞ்சும் !
குறைந்தாலும் வளர்ந்தாலும் அன்பில் நாளும்
***கோலவுரு கண்டவுடன் மகிழ்ந்து கொஞ்சும் !
சிறைபிடித்துப் பலமொழியில் கவிகள் வைக்கச்
***சிலையெனவே பூரணையும் கொள்ளும் தஞ்சம் !
முறைப்பெண்ணின் முகம்போலும் நிலவை யெட்டி
***முத்தமிடத் துடிப்பதுமேன் என்றன் நெஞ்சே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment