Saturday, January 26, 2019

மழையில் நனைந்த மனம் ....!!!


வளிவருடும் சுற்றிலும் மண்வாசம் வீசும்
இளஞ்சாரல் தூவு மினிதாய்க் - களிப்பில் 
சுழன்று குதித்தாடிச் சொர்க்கத்தைக் காணும்
மழையில் நனைந்த மனம் . 1.
முகில்கள் உரசி முழங்கும் ஒலியில்
திகிலுட னுள்ளம் சிலிர்க்கும் ! - சுகமாய்ப்
பொழியுமவ் வேளையில் பூரிப்பில் துள்ளும்
மழையில் நனைந்த மனம் . 2 .
மெள்ள விருள்சூழ மின்னல் ஒளிகூட்ட
அள்ளும் அழகுடன் அண்டமும் - வள்ளல்
வழியொப்ப வா(மா)ரி வழங்க மகிழும்
மழையில் நனைந்த மனம் . 3.
வெயிலும் மறைந்து வெளிச்சமும் மங்கிப்
பெயலும் நிலத்தினிற் பெய்யும் - பயிர்கள்
தழைத்துச் சிரிக்கச் சடுகுடு வாடும்
மழையில் நனைந்த மனம். 4.
மேக வுருள்வலமோ மேளதா ளத்துடன்
தாகம் தணிக்கத் தரைவருதோ - சோக
மழிந்து நிலத்தி லமைதி பெறுமே
மழையில் நனைந்த மனம் . 5.
தவளைகளின் சேர்ந்திசைக்குத் தாளமிட்டுச் சிந்தும்
உவகையினை யாவர்க்கு மூட்டும் - புவன
மெழிலுறத் தான்பொழிய இன்பத்தில் பூக்கும்
மழையில் நனைந்த மனம். 6.
மரங்கள் குளித்து மயக்கந் தெளியும்
வரமாய் வருணன் வரவில் - தரையில்
விழுந்துளிகள் நீராட்ட மின்னி வியக்கும்
மழையில் நனைந்த மனம். 7.
நீலவான் தான்கறுக்க நீலமயில் கண்டாடும்
சோலையில் பேரழகாய்ச் சுற்றிவந்து - கோலக்
குழலிசையும் காற்றோடு கொஞ்சிவரப் பாடும்
மழையில் நனைந்த மனம். 8.
ஒட்டியே ஒன்றன்பின் ஒன்றாக நீள்கோடாய்
முட்டி நிலத்தினை முத்தமிடும் - சொட்டு
மெழிலுக் கிணையிங் கெதுவெனத் தேடும்
மழையில் நனைந்த மனம். 9.
மலைமேனி யைத்தடவி மையலுடன் வீழ்ந்தே
அலைதவழப் பாய்ந்தோடு மாறாய் !- தொலைவில்
விழுமருவிச் சத்தத்தில் மெல்லக் கரையும்
மழையில் நனைந்த மனம் . 10.
( ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய முத்தமிழ்க் கலைஞர் நினைவு உலகளாவிய மரபுக் கவிதைப்போட்டி – 2018 -ல் ஆறுதல் பரிசு (ஆயிரம் ரூபாய் ) பெற்றுத்தந்த கவிதை !!
ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் ! மென்மேலும் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகள் 💐💐💐 )

No comments:

Post a Comment