Wednesday, July 26, 2017

அம்பு விடுத்தனையோ ....??

அம்பு விடுத்தனையோ ஆழ்மனத்தில் தைக்கிறதே 
கம்பன் மகனோ கவிதையிலே? - வம்பை 
விலைகொடுத்து வாங்காதே; வீரனே! காதல் 
வலைவீசு முள்ளம் வனப்பு .

இரவும் பகலும் இனியென்ன வேலை
சுரமேழில் பாடு சுகமாய் ! - வரமாகப் 
பெற்றேன் உனைநான் பிரியமுள்ள தோழனே 
சற்றே எனைப்பார்,கண் சாய்த்து .

உயர்வான நம்காதல் ஊர்பேச லாமோ 
துயர்வந்து சேராதோ சொல்வாய்! - கயலாடும் 
கண்களில் சிந்திடும் கண்ணீர் துடைத்திட 
கண்ணனே வாராய் கனிந்து .

புகல்கின்ற வார்த்தைகள் பொன்மொழி யாக 
பகலிரவும் உன்நினைவே பாரில் ! - நிகரில்லாப்
பேரழகா! பூத்திடும் பெண்ணென் உளத்தினைச்
சாரலாய்ப் பெய்து தணி..

நிறைந்தென் இதயத்தில் நித்த மிருப்பாய் 
சிறைவைத்தே னுன்னைத் திருடி! - குறையின்றிக்
காப்பாய் உயிராய்க் கருதி இதமளிக்கப்
பூப்பேன் இதழ்சிவந்தாற் போல் ..

தொடர்ந்து வருவேன் துயரந் துடைக்கப்
படர்ந்து வருவேன் பனியாய்ச்! .- சுடரனைய 
தேகத்தைத் தீண்டுவேன் தென்றலாய், முப்போதும் 
சோகமே யில்லாச் சுகம் . 

சுடரா யொளிரும் சுகமாய்ப் பரவும் 
மடலாய் விரியும் மனிதம் - விடலைப் 
பருவ மறிந்தும் பருகத் துடித்தும் 
உருகும் மனமே உரம் . 

புகழால் கருவமின்றிப் பொன்னா யொளிர்ந்தாய்  
மகத்தில் பிறந்தயென் மன்னா ! - அகத்தினில் 
உன்னை நினைத்தே உலகை மறந்தேனே
என்னதவம் செய்தேனோ யான் ?

குதித்துவிழும் ஐந்தருவி குற்றாலந் தன்னில் 
நதியாய்ப் பெருகியோட நானும் - மதிமயங்கி 
விட்டேன்; எழுதினேன் வெண்பா, உனக்கிது
சொட்டும் மழைபோல் சுகம் . 

இறைவன் அருளாலே இல்வாழ்வில் சேர்ந்தே 
குறைவிலா இன்பத்தைக் கொள்வோம் !- நிறைவுடன் 
காதல் வனத்தில் களிப்புடன் ஆடியே
கீதம் இசைப்போம் கிளர்ந்து .

No comments:

Post a Comment