Tuesday, September 29, 2015

முதுமை !


கருத்தக் குழலும் கழிந்து வெளுக்கும்
சுருங்கும் விழியின் சொலிப்பு மங்கும் 
சருமம் தளர்ந்து சரீரம் ஒடுங்குமே !

கவனம் பிசகும் கருமம் மறக்கும் 
துவளும் நடையும் தொலையும் சுகமும்  
அவதிப் படுத்தும் அடங்காப் பிணியுமே !

உறக்கம் குறையும் உடலும் களைக்கும்
மறதி வந்து மகிழ்வைக் கெடுக்கும் 
மறலி வரவை மனமும் விழையுமே !


( ஆசிரியத் தாழிசை - இலக்கணம் )

*மூன்றடிகளைப் பெற்று,
அடிக்கு நான்கு சீர்களைப் பெற்றுவரும்.
*ஆசிரியவுரிச் சீர்களான மாச்சீர், விளச்சீர்களைப் பெற்றுவரும். சில காய்ச்சீர்களும் வரலாம். அவை மாங்காய்ச் சீராக மட்டுமே வரும்.(வாராதிருத்தல் சிறப்பு.)
*ஒருபொருள் மேல்ஒரு பாடலோ, ஒருபொருள் மேல் மூன்றடுக்கியோ வரும். ஒரே பொருள்முடிவாய் இருக்க வேண்டும்.
*மூன்று அடிகளுக்கும் ஒரே எதுகையும், ஒவ்வொரு அடியிலும் பொழிப்பு மோனையும் பெற்று வரும். (முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் அமைவது பொழிப்பு மோனை எனப்படும்.)
*ஈற்றடி ஏகாரத்தில் முடியும். ஓ,ஆ,ஆல் என்றும் வரலாம். ஏகாரமே சிறப்பு.

No comments:

Post a Comment