Sunday, April 22, 2018

தேன் சிந்திய வானம் - கண்ணதாசன் !!!

மானிட யினத்தை வசீகரம் செய்த
***மாபெரும் கவிஞரை நினைத்தேன் !
தேனினு மினிய திரையிசைப் பாடல்
***சிந்தையி லினித்திடச் சுவைத்தேன் !
கானிறை மலராய்க் காற்றினில் கலந்த 
***கவிதைகள் மணத்தினை நுகர்ந்தேன் !
வானிறை முகிலாய் வார்த்தைகள் சிந்தும்
***மழையினில் உயிர்வரை நனைந்தேன் !
கவிஞரின் பாட்டில் கவினுற விளங்கும்
***கற்பனைத் திறத்தினை ருசித்தேன் !
செவிகளி னோரம் தென்றலாய் வருடச்
***சிலிர்ப்பினில் இதயமும் மலர்ந்தேன் !
தவிப்பினைப் போக்கும் தத்துவப் பாட்டில்
***தனித்துவம் கண்டதில் உறைந்தேன் !
புவியினி லிவன்போல் புலவனு முண்டோ
***புன்னகை விரிந்திட வியந்தேன் !
கண்ணனைப் பாடும் கனித்தமிழ்ச் சுகத்தில்
***கலப்பிலா அமுதினைக் குடித்தேன் !
உண்டிடும் போதும் உறங்கிடும் போதும்
***உடன்வரும் பாடலில் கனிந்தேன் !
புண்படும் நெஞ்சிற் காறுத லாகப்
***பொருந்திடும் பாவினிலில் உயிர்த்தேன் !
கண்களில் வடியக் கைகளைக் குவித்தேன்
***கண்ணனின் தாசனே வாழி !!
இலக்கிய நயத்தை இங்கித மாக
***இழைத்தவன் தந்ததில் கரைந்தேன் !
சலங்கைக ளொலியாய்ச் சந்தமும் துள்ளத்
***தண்டமிழ்க் கொஞ்சிடக் குளிர்ந்தேன் !
கலங்கரை விளக்காய்க் காதலில் வீழ்ந்தோர்
***கவிஞரைக் கருதிடக் கண்டேன் !
நிலமுள வரையில் நிச்சய மாக
***நிலைத்திடு மவர்புகழ் நன்றே !!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment