Saturday, April 7, 2018

ஆசானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் !

அச்ச மகற்றி மரபினையே
***அன்பாய்ப் புகட்டும் பாவலரே !
பச்சை மரத்தி லாணியெனப்
***பதிய வைத்தீ ரெளிதாக !
உச்ச மெட்ட ஏணியென
***உயர்த்தி விட்டு மகிழ்ந்திருந்தீர் !
மெச்சி யும்மைப் புவிபோற்ற 
***மேன்மை யோடு வாழியவே !

செய்யும் பணியை நேசித்துச் 
***சிறப்பாய்ச் செய்யும் செம்மல்நீ 
நெய்யும் பாவில் பிழைதிருத்தி 
***நெறியாய்ப் புகட்டும் ஆசான்நீ !
மெய்யை வருத்தித் தமிழுக்காய் 
***மெய்யா யுழைக்கும் புனிதன்நீ !
தொய்வே யின்றித் தொடரட்டும் 
***தொண்டு நாளும் சோலையிலே !!

மருந்தாய் நினைத்த மரபுகண்டு 
***மருண்டு மிரண்டே ஓடாமல் 
விருந்தாய்ப் படைத்து வியக்கவைத்தாய் 
***விருப்ப முடனே பயிற்றுவித்தாய் !
திருத்தம் செய்து தவறுகளைத் 
***தெளிவு படுத்தி விளங்கவைத்தாய் 
குருவே நின்றன் பிறந்தநாளில் 
***குவித்தேன் இருகை வணங்கிடவே !!

பாடிக் காட்டிப் பக்குவமாய்ப்
***பாக்க ளியற்றப் பழக்குவித்தாய் !
தேடி வந்து பயில்வோர்க்குத் 
***தேர்வும் நடத்தி விருதளித்தாய் !
ஈடி லாத செம்மொழியின் 
***இனிய மரபு மாமணியே !
கூடி  வாழ்த்து பாடிடுவோம் 
***குயில்க ளின்று சோலையிலே !!

அன்னை தமிழுக் கணிசெய்ய
***அறிந்த மரபைப் பிறர்க்களித்தாய்!
என்னே யுன்றன் கருணையுளம்
***என்றே நிதமும் வியக்கின்றேன்!
இன்னு மின்னு முன்னிடத்தே
***இனிதாய்க் கற்க விழைகின்றேன்!
நின்றன் பிறந்த நாளினிலே
***நெஞ்சம் நிறைந்து வாழ்த்துவனே!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாவலர் அவர்களே !!

No comments:

Post a Comment