Monday, April 8, 2019

கோடை மழையே வாராயோ ??

கோடை மழையே வருவாயா 
***கொதிப்பைக் கொஞ்சம் தணிப்பாயா ?
ஓடை காய்ந்து கிடக்கிறதே 
***ஊறும் கிணறும் வற்றியதே !
வாடைக் காற்றை எண்ணியெண்ணி
***மனத்தில் ஏக்கம் பிறக்கிறதே !
பாடி உனையே நானழைப்பேன்
***பரிந்து குளிர்ந்து வந்துவிடு !!

வெளியில் செல்ல முடியவில்லை 
***வெயிலின் கொடுமை தாளவில்லை !
களைப்பில் மேனி சோர்ந்திடுதே 
***கடுப்பில் எரிச்சல் தோன்றிடுதே !
வளியும் அனலாய்ச் சுடுகிறதே 
***வடியும் வியர்வைக் கரிக்கிறதே !
கிளைகள் யோகம் பயில்கிறதோ
***கீழ்மேல் அசைய மறுப்பதுமேன் ??

தாகம் நாவை வறட்டிடுதே
***தண்ணீர் குடித்தும் அடங்கலையே!
தேகம் சூட்டில் தகிக்கிறதே 
***தென்றல் வரவை விழைகிறதே !
மேகம் வானில் சூழாதோ 
***மின்னல் கொடியும் பூக்காதோ ?
வேக மாக நீபொழிந்தால் 
***மேனி குளிர நனைவேனே !!

வருணன் விழிகள் திறவானோ 
***மண்ணிற் கமுத மளிப்பானோ?
தரும மிகுந்த சென்னையிலே 
***தாகந் தணிக்க வாரானோ 
உருண்டு மோதி இடிமுழங்க 
***உயிர்கள் பிழைக்கப் பொழிவானோ?
விரும்பி உனையே அழைக்கின்றேன் 
***விருந்தாய் விரைவாய் இக்கணமே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment