Thursday, April 4, 2019

வெண்டளையானியன்ற தாழிசை ....!!!


உலகினில் வாழும் உயிர்களைக் காக்கும் 
தலைவநின் தாளைச் சரணடைவ தெக்காலம் ? 1 

அடைந்த பதவிகளால் ஆணவங்கொள் ளாமல் 
கடைவழி காட்டவுன் கண்திறப்ப தெக்காலம்? 2 

கண்திறந்து பார்த்துக் கவலைகளைத் தீர்ப்பதற்கு 
விண்ணின்று வந்து வினையறுப்ப தெக்காலம் ? 3 

அறுக்கும் நினைவுகளால் அன்றாடம் வாட்டி 
வறுக்கும் அவலநிலை மாறுவது மெக்காலம் ?4. 

மாற்றத்தை வேண்டி வணங்கித் துதிப்பவர்க்கு 
ஏற்றத்தைக் காட்டி யிதமளிப்ப தெக்காலம் ? 5. 

அளித்தவை யாவும் அவனன்றி யாரால் 
எளிதாய்க் கிடைக்கு மெனவறிவ தெக்காலம் ? 6. 

அறிவின் துணையோ(டு) அகவிருள் நீங்கிப் 
பிறவிப் பெருங்கடலை நீந்துவது மெக்காலம் ? 7. 

நீந்தும் பொழுதினிலே நீலகண்டன் தன்கரத்தில் 
ஏந்தி யரவணைக்க ஏற்றபொழு தெக்காலம் ? 8. 

பொழுதெலாம் வீணாக்கும் புல்லர் களையும் 
முழுதாக ஆட்கொண்டு முத்திதர லெக்காலம் ? 9. 

முத்திதரு மீசனை முப்போதும் போற்றியே 
சுத்தமெய் ஞானத்தைத் துய்த்துணர்வ தெக்காலம் ? 10. 

உணர்வில் கலந்தோனை ஓர்ந்துமிக வன்பாய் 
வணங்கித் தொழுது வரம்பெறுத லெக்காலம் ?11. 

பெறுதற் கரிய பிறவியெடுத் தாலும் 
தறுதலையாய்ச் சுற்றுவோருன் தாள்சேர்வ தெக்காலம் ? 12. 

சேர்க்கைச் சரியின்றிச் செய்யும் இழிதொழிலால் 
பேர்கெட்டோர் இவ்வுலகில் பேறடைவ தெக்காலம் ? 13. 

பேறாக எண்ணித்தம் பெற்றோரைப் பேணாத 
மாறாக் குணமுடையோர் மாறுவது மெக்காலம் ? 14. 

மாறிவரு மிவ்வுலக மாயைகளில் சிக்காமல் 
ஆறுதலாய்ப் பக்கமிருந் தாட்கொள்வ தெக்காலம் ? 15. 

கொள்கையில் மாறுபட்டுக் குற்றம் புரிவோரின் 
கள்ளத் தனம்போக்கிக் காட்சிதர லெக்காலம் ? 16. 

காட்சியைக் கண்டவுடன் கண்ணீர்ப் பெருக்கெ 
ஓட்டை விடுத்துன்னுள் ஒடுங்குவது மெக்காலம் ? 17. 

ஒடுங்கிய நெஞ்சத்தில் ஓங்கார மாகக் 
கடுகிநீ வந்தெம்மைக் காத்திடுத லெக்காலம் ? 18. 

காத்திருக்கும் வேளைதனில் காலன் அணுகாமல் 
கூத்தனுன் பார்வை குளிர்விப்ப தெக்காலம் ? 19. 

குளிர்ச்சியைத் தாங்கிக் கொதிப்படக்கும் நின்றன் 
வெளிர்நீற்றால் பாவம் விலக்கிடுத லெக்காலம் ? 20. 

விலகும்கொடுந் துன்பம் விரிசடையோன் பார்க்க 
நிலவும் அமைதியினால் நெஞ்சினிப்ப தெக்காலம் ? 21. 

நெஞ்சினிக்கும் மந்திரத்தை நெற்றியில் நீறிட்டு 
நஞ்சுண்டோன் நாமம் நவிலுதலு மெக்காலம் ?22. 

நாமம் நவில்வோர்கள் நற்கதி பெற்றிடவே 
காமத்தைப் போக்கிக் கரையேற்ற லெக்காலம் ? 23. 

கரையேறத் தான்விழைவோர் கண்ணீர் உகுக்க 
விரைந்துவந்து பேரின்ப வீடளிப்ப தெக்காலம் ? 24 . 

வீடுசெல்லும் பேறுபெற்று மேன்மை நிலையடைய 
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து கூப்பிடுத லெக்காலம் ? 25. 

கூப்பிடும் சத்தத்தில் கோயிலைத் தாண்டிவந்து 
தீப்பிழம்பாய்த் தோன்றிச் சிலிர்க்கவைப்ப தெக்காலம் ? 26. 

சிலிர்த்துப் பரவசத்தில் சேவடியைப் பற்ற 
வலிபறந்து போகும் வரங்கிடைத்த லெக்காலம் ? 27. 

கிடைத்த பொன்பொருளைக் கிஞ்சித்தும் வேண்டா 
அடியாரைப் போல அகந்தெளிவ தெக்காலம் ? 28. 

தெளிந்தவறி வின்றிச் செயற்பட்டு வாழ்வில் 
இளைத்து நலிந்தோரு மின்புறுத லெக்காலம் ? 29. 

இன்புற்ற போதும் இறுமாப்பு கொள்ளாத 
அன்பரைக் கண்டே அடிபணித லெக்காலம் ? 30. 

பணிவே பெருங்கொடையாய்ப் பைந்தமிழர் போற்றும் 
அணியாம் அறிந்தே அதைச்சூட லெக்காலம் ? 31. 

சூடிய கங்கையொடு சூலமு மேந்தியவன் 
ஆடிய பாதனவன் ஆட்கொள்வ தெக்காலம் ? 32. 

ஆட்கொள்ள வேண்டுமெனில் ஐம்புலன்கள் தானடங்கி 
எட்டா உயரத்தை எட்டுவது மெக்காலம் ? 33. 

எட்டும் வழியை எளியவர்க்கும் காட்டுபவன் 
பட்டு மலர்ப்பாதம் பற்றுவது மெக்காலம் ? 34. 

பற்றற்றான் தாளினைப் பற்றிப் பரவசத்தில் 
நற்றமிழில் பாவியற்றி நாடுவது மெக்காலம் ? 35. 

நாடும் நலம்பெறவே நாதன் புகழ்பாடத் 
தேடும் இதயத்தில் தேன்பொழிவ தெக்காலம் ? 36. 

தேனாம் வாசகத்தைத் தித்திக்கப் பாடுவோர்க்கு 
மீனாள் துணைவன் விழிமலர்வ தெக்காலம் ? 37. 

மலரடியைப் பற்றி மனமுருகி வேண்ட 
குலம்விளங்கக் காப்போன் குறைதீர்ப்ப தெக்காலம் ? 38. 

குறைகளால் நொந்து குமுறியழு வோர்க்கு 
மறைபோற்று மீசன்நல் வாழ்வளிப்ப தெக்காலம் ? 39. 

வாழ்வில் வருந்துயரால் உள்ளம் நிலைகுலைய 
ஆழ்மனக்கா யங்களை ஆற்றுவது மெக்காலம் ? 40 . 

காயங்க ளாற்றநெற்றிக் கண்திறந்து பார்த்தாலென் 
தூயவனே உன்கருணைத் துளிர்விடுத லெக்காலம் ? 41. 

துளிர்விடு மாசைகளைச் சுத்தமாய்ப் போக்கி 
எளியேனைக் கைகளில் ஏந்துவது மெக்காலம் ? 42. 

ஏந்திய சூலத்தால் என்பிழைகள் சாய்த்துவிட்டு 
நீந்தும் வழித்துணைக்கு நீவருத லெக்காலம் ? 43 . 

நீவரு வாயெனவே நெஞ்சத் துடிப்போடு 
பாவியென் உள்ளம் பணிசெய்வ தெக்காலம்? 44. 

செய்யும் பணிக்குச் சிவனார் துணையிருக்கப் 
பெய்யும் மழைபோலே பீடுறுவ தெக்காலம் ? 45 . 

பீடுடைய பெம்மான் பிறவிப் பிணிதீர்க்கக் 
காடுடைய நீரணிந்து காட்சிதர லெக்காலம் ? 46. 

காட்சியில் மெய்சிலிர்க்கக் காந்தமாய் உள்ளமீர்க்கச் 
சாட்சியாய் இங்குவந்து தானணைப்ப தெக்காலம் ? 47. 

அணைக்கும் கரங்களினால் ஆன்மசுகம் தந்தே 
இணக்கமுடன் என்னை இயக்குவது மெக்காலம் ? 48. 

இயக்கமும் காப்புமாய் என்னையும் நீயே 
மயக்கம் தெளிய மகிழ்விப்ப தெக்காலம் ? 49. 

மகிழும் பொழுதெலாம் மன்றாடி யுன்னை 
உகந்த இறையாய் உலகியம்ப லெக்காலம் ? 50. 

சியாமளா ராஜசேகர்






























No comments:

Post a Comment