Monday, April 1, 2019

காதல் பாக்கள் ( மண்டலவந்தாதி )

காதல் பாக்கள் .... குறள் வெண்பா
* * * *  * * * * * *  * * ** * * * * * * * * *  * * * * 
மண்டலவந்தாதி
*********************** 
நிலவுமுகம் கண்டேன் நினைவில்நீ வந்தாய் 
மலர்ந்த(து)  இதயம் மகிழ்ந்து 1.

மகிழ்ச்சிக் கடலினில் மௌனமாய் நாமும் 
நெகிழ்ச்சியில் நீந்துவோம் வா. 2.

வான்முகில் தொட்டு வளர்பிறை யைக்கொய்து 
மான்விழியே வைத்திடுவேன் பொட்டு. 3.

பொட்டிட்ட நெற்றியில் பூத்த வியர்வையைத்
தட்டித் துடைப்பேன் தவித்து. 4.

தவிப்புடன் காக்கவைத்த தையலே உன்னைக் 
கவியா லணைப்பேன் கனிந்து.5.

கனிந்த மனத்தில் கவலை எதற்கு 
பனிமலரே சற்றென்னைப் பார் . 6.

பார்வையா லீர்த்தாய் பசிக்கு விருந்தாகச் 
சேர்ந்திங்கு வாழ்தல் சிறப்பு . 7.

சிறந்த குணமும் சிரித்த முகமும் 
உறவாய் நினைக்கும் உனை .8.

உனைநான் பிரியேன் ஒருபோதும் கண்ணே 
எனைநீ புரிந்தால் இதம். 9.

இதமளிக்கும் அன்பில் இதயம் குளிர்ந்தேன் 
மதுமொழி யாலென்னை மாற்று . 10.
மாற்றினாய் என்னை மயக்கந் தணியயிப்  
பாறையிலும்  பூத்தது பாட்டு. 11.

பாட்டி லுனைவைத்துப் பாச மழைபொழிவேன் 
வீட்டில் விளக்கேற்ற வா . 12

வாசலில் கோலமிட்டாய் வைகறை வேளையில் 
ஆசையில் வந்தேன் அறி .13. 

அறிந்தும் அமைதியேன் அன்பை விதைத்தால்
குறையொன்று மில்லை கொடு.14

கொடுத்துப் பெறுவதால் கோடியின்பம் கிட்டும் 
தொடுவதுந் தப்போநீ சொல். 15.

சொல்லி முடிக்குமுன் துள்ளி யெழலாமா 
மெல்லியளே மென்விரலால் மீட்டு . 16. 

மீட்டிய  வீணையின் நாதமாய்க் கொஞ்சியே 
ஊட்டுவாய் காதல் உரம் . 17

உரத்துநீ பேச ஒடிந்திடுமென் உள்ளம் 
அரவணைப் பொன்றே அழகு. 18.

அழகுமயி லுன்னை அணைக்கத் துடித்தேன் 
நழுவாதே நொந்திடுவேன் நான் . 19.

நானுன்னைச் சேர்ந்திடும் நாளினில் ஆவலொடு 
வானுலகும் வாழ்த்தும் வியந்து .20. 

வியக்கிறே னுன்னை விழிகள் விரியத்
தயங்காமல் கன்னத்தில் தா. 21

தாவென்று கேட்டேன் தரமாட்டே னென்றுசொன்னால் 
பாவியென் செய்வேன் பகர். 22

பகர்ந்த மொழியில் பரவசப் பட்டேன் 
சுகமா யிருந்ததந்தச் சொல். 23

சொல்ல வியலாச் சுமையும் விலகிடும்
செல்லமுன்னால் சேரும் சிறப்பு . 24 

சிறப்பொடு நீவனையும் தேன்பாக்கள் நம்மின் 
உறவை வலுப்படுத்தும் ஊற்று . 25.

ஊற்றெனப் பொங்கி உதிரத்தில் பாய்ந்திடத்
தோற்றிடுமோ நம்காதல் சொல் . 26 

சொல்லி யழுதால் துயர்களும் நீங்கிடும் 
வெல்லும் வழியை விளக்கு .27 

விளக்கின் சுடராய் விழிகளும் மின்ன 
இளகிய துள்ள மினிது. 28. 

இனியவளே! கண்ணே ! இளமை ததும்பும் 
கனிமொழியே  ! பக்கம்வா கண்டு. 29.

கண்டவுடன்  கூத்தாடும் கால்களும் எம்பியே 
விண்ணுக்குத் தாவும் விரைந்து .30.

விரைந்துவரும் வான்மழையில் மேனி நனையக்
கரையலாம் ஒன்றாய்க் கலந்து. 31

கலந்த மனங்களில் கள்ளமில்லாக் காதல் 
நிலமிசை வாழும் நிலைத்து. 32

நிலைக்குமென் றெண்ணித்தான் நெஞ்சிலுற வானாய் 
மலைப்பதேன் மானே மருண்டு. 33

மருளும் விழிகளில் மையலைக் கண்டேன் 
இருளி லொளியா யிரு. 34

இருவரின் பார்வை இனிதாய்க் கலக்க 
உருகி வழியும் உயிர் . 35

உயிரில் கலந்தாய் உணர்வில் நிறைந்தாய் 
வயிற்றில் சுமப்பாய் வரம் .36.

வரமாய் நினைத்து வடிவழகே உன்னை 
கரம்பற்றிக் காப்பேன் கனிந்து. 37 

கனியும் பொழுதில் கலங்கிட லாமா 
இனிக்கு முறவுக் கிசை . 38

இசையும் கவியும் இருவிழிக ளாக 
அசைக்கு முளத்தி லடங்கு. 39 

அடங்கிடுமோ வாசை அனுபவிக் காமல் 
உடற்படுத்தும் பாட்டை உணர். 40

உணர்ச்சிப் பிழம்பாய் உருகிடும் போழ்தில் 
அணங்கேவுன் காதல் அழகு . 41. 

அழகே அமுதே அருகில் வருவேன் 
பழகிய கண்களைப் பார். 42 

பார்த்ததும் பூத்திடும் பாவையுன் நெஞ்சத்தில் 
வேர்விட்ட அன்பை விரி . 43 

விரிவானின் வானவில்லை வெட்டி யுனக்குப்
பரிசாய்த் தருவேன் பரிந்து. 44.

பரிவா யுனையணைத்துப் பட்டாடை தந்தே  
உரியவ ளாக்குவேன் ஏற்று. 45 

ஏற்க மறுக்காதே என்னுயிரே தேவதையே 
சீற்றந் தணிவாய் சிரித்து. 46 

சிரித்துச் சிரித்துச் சிறையிலிட்ட பெண்ணே 
நுரைத்த துளமிந் நொடி.. 47. 

நொடிப்பொழுதும் நீயின்றேல் நொந்திடும் வாழ்வு 
மடியில் விளையாட வா .. 48

வாடா மலரே மலையருவிச் சாரலே 
ஈடாய் எதுவுமில்லை இங்கு. 49 

இங்குன்னைக் கண்டதும் இன்பம் பெருகிடுதே
தங்கமே என்னிதயம் தா . 50 

தாமரைப் பூத்த தடாகத்தில் வண்டெனக்
காமமிக வாகுதே கண்டு. 51. 

கண்டாங்கிச் சேலையில் கண்குளிர வைத்தவளே 
சுண்டு விரலைச் சொடுக்கு . 52 

சொடுக்கும் நொடியில் சுவைப்பேன் இதழைக்
கொடுப்பா யுனையே குளிர்ந்து. 53 

குளிர்ந்த இரவில் கொதிப்பு மடங்கக்
களிப்போம் கனிவாய்க் கலந்து. 54

கலந்துற வாடிக் கதைப்பல பேசி 
உலகை மறப்போம் உவந்து. 55 

உவகை யுடனே உனதுகரம் பற்றி 
அவல ழிப்பேன் அணைத்து. 56

அணைப்பின் கதகதப்பில் ஐம்புலனும் சொக்கும்
துணையிருப் பாயா தொடர்ந்து. 57 

தொடர்ந்துவரும் பந்தம் சுகராகம் மீட்ட 
கடந்துவிடும் துன்பம் கரைந்து. 58 

கரைந்துவிடும் சோகம் கடலுக்குள் உப்பாய் 
வரையாத ஓவியமே வா . 59

வாசிப்பேன் புத்தகமாய் வண்ணமலர் போலுன்னை
நேசிப்பேன் வாழிய நீடு. 60

நீடுநீ வாழ நிறைமனத்து டன்வேண்டிப்
போடுவேன் உண்டியலில் பொன் . 61.

பொன்னே! ஒளியே! பொலிவாய் விளங்கிடும்
கன்னக் குழியினைக் காட்டு . 62 

காட்டாற்று வெள்ளமாய்க் காதலுடன் பாய்ந்துவந்(து)
ஊட்டுவே னின்ப முரித்து. 63 

 உரியவனைக் கண்டும் ஒளிந்திட லாமா 
புரியவில்லை நீயே புகல். 64.

புகலும் மொழியால் புனித மடைவேன் 
அகத்தின் இருளை யழி. 65 

அழியா நினைவுகள் ஆட்டுவிக்க நானும் 
விழுந்தேன் கனவில் விழித்து. 66.

விழிகள் கலந்திட வெட்கச் சிவப்பில் 
எழில்கூட மின்னும் இதழ் . 67 

இதழில் கவிவனைய இங்கோடி வந்தேன் 
இதய மலரே எழு. 68 

எழுதிய பாக்களெல்லாம் என்று முனக்காக
முழுதாய்ப் படித்து முடி .69 

முடிச்சுகள் மூன்றிட்டு முத்தந் தருவேன் 
விடியும் வரையில் விழித்து. 70.

விழித்ததும் என்முன்னே மின்னலாய் வந்து 
பொழிந்திடும் அன்பால் புதை . 71.

புதையலாய் நீகிடைத்தாய பொன்போல்நான் காப்பேன் 
வதைக்காமல் அருகிலே வா . 72.

வார்த்தைக ளின்றி மனந்தடு மாறுமுன்
கார்க்குழ லாடிடக் கண்டு .73.

கண்டேன் கனிந்தேன் களிப்பினில் துள்ளினேன்
வண்ணத்தில் வைப்பேன் வளைத்து. 74 

வளைகுலுங்கும் கைகளினால் வாரி யணைக்கத்
திளைப்பேன் இதயம் திறந்து. 75 

திறந்தவிழி மூடாமல் தேடினே னுன்னை
உறைந்தததே என்ற னுளம். 76

உளம்முழுதும் நீயாக ஊட லெதற்கு 
தெளிந்தால் முளைக்கும் சிறகு. 77 

சிறகு விரித்திணைந்து சிட்டாக வானில்
பறந்தே இசைக்கலாம் பாட்டு . 78 

பாட்டி லுருகவைத்த பைங்கிளியே பேசாமல் 
வாட்டுவதேன் கொஞ்சமுன்னை மாற்று .79

மாறா திருப்பாயோ மானே  உனதிதயம்
பாறாங்கல் லென்றுநினைப். பார். 80 

பார்க்கு மிடமெல்லாம் பாவையுன் பூமுகமே
நேர்நிற்கும் என்னுள் நிறைந்து. 81

நிறைகுடமாய் நீயிருக்கும் நெஞ்சத்தி லென்றும் 
குறையேது மில்லையெனக் கூறு . 82

கூறும் மொழியில் குளிர்ந்து கவலகன்(று)
ஆறுதல் கொண்ட(து) அகம். 83 

அகத்தில் இனிக்கின்ற ஆனந்த யாழாய் 
புகட்டுமுன் அன்பு பொலிவு. 84 

பொலிவுடன் பாய்ந்தோடும் பொன்னி நதியின் 
அலைகளில் என்னுடன் ஆடு. 85 

ஆடிவரும் தென்றலை ஆரத் தழுவியே 
கூடுவோம் ஒன்றாய்க் குளிர்ந்து. 86

குளிர்ந்த அருவியில் கொஞ்சிக் குலாவிக்
குளிக்கும் வரத்தைக் கொடு. 87 

கொடுத்துப் பெறுவது கொண்டாட்டம் தானே?
கொடுத்திடி லென்ன குறை . 88

குறையென்மீ துண்டோ குறுநகை ஏனோ
நொறுங்கிடு முள்ளம் நொடிந்து.89

நொடித்த பொழுதினில் நோவு தணிக்க 
மடியிற் கிடத்தி வருடு. 90

வருடி யணைப்பேன் வயல்வெளிக் காற்றாய் 
விருந்து மளிப்பேன் விழைந்து. 91. 

விழைந்த மனத்திற்கு வேண்டியது நல்க 
அழைத்தெனைச் செய்வாயா அன்பு. 92 

அன்பேவுன் சேவைகள் ஆரம்ப மாகட்டும் 
இன்பந் தழுவட்டும் ஈண்டு. 93

ஈண்டுனை யான்பெற என்னதவம் செய்தேனோ 
சீண்டலில் பெற்றேன் சிலிர்ப்பு. 94

சிலிர்க்குமென் ஆவி தெவிட்டாமுத் தத்தில்
பொலிவாய் மலரும் புலன். 95.

புலன்களுக்கென் துன்பம் புரியுமோ பெண்ணே 
சிலசொற்க ளாவது செப்பு. 96

செப்புச் சிலையெழிலே தென்பொதிகைத் தென்றலே 
சப்பரத்துச் சாமியை நாடு. 97.

நாடி வருமென்னை நம்பி வருவாயா 
பாடித் திரிவோம் பழகு .98

பழகிடும் போது பனிமழை சிந்தச்
சுழன்று  நனைந்தபடி சுற்று . 99

சுற்றிவரும் வானில் சுகந்தரும் காதலியின் 
நெற்றியில் பொட்டாய் நிலவு. 100

சியாமளா ராஜசேகர் 

  












   















































































No comments:

Post a Comment