Sunday, December 9, 2018

கால் முளைத்த கனவுகள் !!


கால்முளைத்த கனவுகள் !! ( எழுசீர் விருத்தம் )
*************************************
வாடிய உழவர் மாடமா ளிகையில் 
     மகிழ்வுடன் உலவிடக் கண்டேன் !
பாடிய படியே தேக்கினில் செய்த 
     படிகளில் ஏறிட வியந்தேன் !
கூடிய நண்பர் குழுவுடன் சேர்ந்து 
     குறுங்கவி சமைத்திடச் சுவைத்தேன் !
ஈடிலா வின்பம் நுகர்ந்திடும் அவர்தம் 
       இயல்பினைக் கண்டுளம் நனைந்தேன் !

சுற்றிலும் படர்ந்த வயல்வெளி யெங்கும்
     சோர்விலாப் புன்னகை கண்டேன் !
நற்றமிழ் செழிப்பாய் உழுபவர் நாவில் 
     நனிநடம் புரிந்திடக் கண்டேன் !
புற்களின் மேலே பனித்துளி யாவும் 
     பொன்னென மின்னிடக் கண்டேன் !
நெற்கதி ராடச் சுமந்திடும் தாயாய் 
     நிலமகள் மலர்ந்திடக் கண்டேன் !!

தேங்கிய நீரில் மீன்களைக் கொத்தித் 
      தின்றிட நாரைகள் சூழ
ஓங்கிய தென்னை மரங்களின் நிழலில் 
     உழத்தியர் அம்மானை யாடப் 
பாங்கிய ரோடு கும்மிய டித்துப் 
     பழங்கதை களிப்புடன் பேசப்
பூங்குயில் பாட்டில் புத்துணர் வோடு
     பொறுமையாய்ப் பணிதொடர்ந் தனரே !!

பொன்னெழில் சிந்தும் அந்தியில் பரிதி 
     போகவே  வுளமின்றிச் சிவக்கத்
தென்றலி லாடும் நாற்றுகள் திரும்பிச் 
     செல்வோர்க்கு வாழ்த்துகள் கூற 
மென்னகை மாறா முகத்தொடே யவர்கள்  
     விடைபெறும் அழகினைக் கண்டு 
புன்சிரிப் போடு நெல்ஜெய ராமன் 
     புவனத்தி லுயிர்த்திடச் சிலிர்த்தேன் !!

எட்டிய தொலைவில் கால்முளைத் தாற்போல் 
     எழுந்தெதோ செல்வதை யுணர்ந்தேன் !
கட்டிலில் புரள நித்திரை கலைந்து 
     கண்டது கனவென அறிந்தேன் ! 
பட்டினிச் சாவு கண்முனே படமாய்ப் 
     பரிகசித் திடமனம் கசிந்தேன் !
மட்டிலா இன்பம் வழங்கிட இறையை
      வணங்கினேன் கைகளைக்  குவித்தே!! 

சியாமளா ராஜசேகர் 
      

No comments:

Post a Comment