Tuesday, October 2, 2018

பட் என்று தொடங்கி படார் என்று முடியும் பாக்கள்!!

பட் என்று தொடங்கி படார் என்று முடியும் பாக்கள்!! 

பட்டுடல் தீண்டிய பாதகர் பேயுடலை 
வெட்டிப் புதைத்து விடவேண்டும்! - வட்டமிட்(டு) 
ஆவியா யென்று மலையட்டு மிவ்வுலகில் 
பாவியர்மன் னிக்கப் படார். 

பட்டணத்து வீதியில் பஞ்சுமிட்டாய்த் தின்றபடி 
கட்டியவன் கையோடு கைசேர்த்துச் - சிட்டாக 
ஊர்க்கதை கள்பேசி ஒட்டி நடந்தாலும் 
பார்ப்போரால் சீண்டப் படார். 

பட்டுணர்ந்த தாலே பரிவுடன் மூத்தோரும் 
எட்டும் வரையில் எடுத்துரைப்பார் - திட்டிடினும் 
குட்டிடினும் உள்ளத்தில் குன்றாத அன்புடையோர் 
பட்டென்று கோபப் படார். 

பட்டாடை கட்டிய பாவையின் கார்க்குழலும் 
பொட்டிட்ட பொன்முகத்தில் புன்னகையும் - கட்டோடு 
காவியையும் ஈர்த்துவிடும் காரணத்தால் மூழ்கிவிட்டப் 
பாவியரும் மீட்கப் படார். 

சியாமளா ராஜசேகர்

காவிரியாள் பொங்கி வந்தாள் ...!!!


காவிரியாள் பொங்கிவந்தாள் 
***காதலுடன் ஆடி - அவள் 
***கனித்தமிழை நாடி -அகக் 
***களிப்புடனே கூடி - அந்தக் 
***கவினழகைக் கண்பருகக் 
***காணுமின்பம் கோடி !! 

பூவிரிந்த சோலையிலே 
***புகுந்துவிட்டாள் தஞ்சம் - பிறர் 
***புரிதலில்தான் வஞ்சம் - இனி 
***பொலிவுக்கில்லை பஞ்சம் - நம் 
***பொன்னியவள் வருகையிலே 
***பூரித்ததே நெஞ்சம் !! 

காடுகளைத் தாண்டியவள் 
***கடுகிவந்த நேசம் - அந்தக் 
***கல்லணையின் வாசம் - மனக் 
***கவலையின்றிப் பேசும் - அவள் 
***காத்திருந்து பாய்ந்துவந்து 
***காட்டிடுவாள் பாசம் !! 

ஆடுகின்ற அலைகளிலே 
***அயிரைகெண்டை துள்ளும் - அதன் 
***அழகுநெஞ்சை அள்ளும் - நுரை 
***ஆடைகட்டிச் செல்லும் - நதி 
***ஆயிரமாய்க் கதைகள்சொல்லி 
***ஆழ்மனத்தைக் கிள்ளும் !! 

உருண்டுபுரண்டு வந்ததாலே 
***உவகைபொங்கும் உள்ளம் - அவள் 
***உருவிலில்லை கள்ளம் - அவள் 
***உணர்ச்சிகளில் வெள்ளம் - இங்கு 
***உலர்ந்துகாய்ந்த நிலத்திலினி 
***உழவர்வாழ்வும் வெல்லும் !! 

வருணன்கருணை காட்டியதால் 
***வரவிட்டாரோ உன்னை - வரும் 
***வழியெங்கிலும் தென்னை - நல் 
***மலர்தூவும் புன்னை - இனி 
***வளமிகவே செய்திடுவாய் 
***வாழ்வில்நீயும் அன்னை !! 

சியாமளா ராஜசேகர்

காட்டிடாயோ...???


உள்ளத்தி லொன்று வைத்தே 
***உதட்டளவி லொன்று பேசிக் 
கள்ளமனத் தோடு நாளும் 
***காசினியில் உழலு வோரை 
எள்ளிநகை யாடு வோரை 
***எடுத்தெறிந்து பேசு வோரை 
முள்ளாய்நெஞ் சில்தைப் போரை 
***முன்னேநீ காட்டி டாயோ ??

ஈற்றடிக்கு வெண்பா....!!!

பொன்னந்தி மாலையில் போனவளைக் காணாமல் 
என்னாச்சோ ஏதாச்சோ என்மகளுக்(கு)- என்றபடி 
வாட்டமுற்ற பேதை மனம்பதைத்தாள் அல்லிலவள் 
காட்டுவழி போய்வரக் கண்டு. 

கற்றறிந்தோர் மன்றில் கவினுற ஈற்றடிக்கு 
அற்புதமாய் வெண்பா அளித்திட - நற்றமிழ்ப் 
பற்றோடு பொற்புடன் பாட்டியற்றும் பாவலர்தம் 
சொற்பெருக்கால் பொங்கும் சுழல். 

அயர்வின்றி நாளும் அறுதி வரையில் 
சுயமா யுழைத்தல் சுகமே! - முயற்சியில் 
சற்றும் மனம்தளராத் தன்னம்பிக் கையேயென் 
வெற்றிக்கு நான்போடும் வித்து. 

படமெடுக்கு முன்னைப் படத்தில்கண் டாலே 
நடுங்கிடு வேனன்று நானே! - அட!சும்மா 
நில்லென் னருகில் நெளியாமல் நாகமே! 
செல்ஃபி படமெடுக்கச் சேர்ந்து. 

( கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு வெண்பா)

#நாட_உயிர்க்கு_நலம்

#நாட_உயிர்க்கு_நலம் 

காலன் அழைக்கையில் காசும் உதவாது 
கோலம் குலைத்தவன் கொண்டுசெலுங் - காலத்தே 
வீடளிப் பாயென வேலன் மலர்ப்பதம் 
நாட உயிர்க்கு நலம். 

தொல்லைகள் வாழ்வினில் சூழ்ந்திடும் போழ்தினில் 
அல்லல் களைய அருள்புரியும் - தில்லையின் 
ஆட லரசை அகம்நிறை அன்புடன் 
நாட உயிர்க்கு நலம். 

நெஞ்சம் நெகிழ்ந்தன்பாய் நீயே சரணெனத் 
தஞ்ச மடைந்தால் தயவுடன் - அஞ்சேலென்(று) 
ஓடி வருபவனை ஓங்கார மானவனை 
நாட உயிர்க்கு நலம். 

நோயுற் றிருக்கையில் நொந்துமனம் வாடாமல் 
ஆயுளை நீடிக்க அன்றாடம் - தூயவன்பாய்க் 
கூடியொன்றாய்ச் செய்திடும் கூட்டுப் பிரார்த்தனை 
நாட உயிர்க்கு நலம். 

குருதி வழிந்தோடக் குற்றுயி ராகத் 
தெருவில் கிடப்போனைத் தேற்றப் - பரிவுடன் 
ஓடிப்போய்த் தூக்கி உடனே மருத்துவரை 
நாட உயிர்க்கு நலம் . 

விரும்பி மணமுடித்து வீடுவந்து தன்னுள் 
கருசுமக்கும் மங்கையைக் காப்பீர்! -நொருங்கியவள் 
வாட விடமான வார்த்தையுமி ழாமலன்பாய் 
நாட உயிர்க்கு நலம். 

( ஈற்றடிக்கு வெண்பா ) 

பண்ணிருக்கு! ஏனோ பயம்?



கண்மணி வாராய் கவிவனைய லாமிங்கே! 
பண்ணிசைத்(து) ஒன்றாகப் பாடலாம்! - பெண்ணுனக்கு 
வெண்பாட்(டு) எனவழைக்கும் வெண்பா வியற்றிடப் 
பண்ணிருக்கு ஏனோ பயம். 
(பண் - தகுதி என்ற பொருளில்) 

தம்புரா வோடு தபலாவும் வந்தாச்சு; 
சும்மாவோர் பாட்டு சுருதியொடு - தெம்பாக 
வண்ணத்தில் பாடு! வயலினுடன் நல்லழகு 
பண்ணிருக்கு! ஏனோ பயம்? 

சியாமளா ராஜசேகர்

கொக்கு ...!!!

கொக்கு வருந்திக் குளக்கரையில் நின்றிருக்கச் 
சிக்காத மீன்கள் சிரித்தோட - இக்கரையில் 
காத்திருந்து கூரலகால் கவ்விப் பிடித்தபடி 
கூத்தா டியதுவெண் கொக்கு. 

( கொக்கு என்று தொடங்கி கொக்கு என்று முடியும் நேரிசை வெண்பா ) 

சியாமளா ராஜசேகர்