Thursday, December 17, 2015

அரும்புகள் !!



பையைத் தோளில் சுமந்திடும் 
***பள்ளிச் செல்லும் அரும்புகள் ! 
கையை யாட்டி நடந்திடும் 
***கட்டிச் சுட்டி எறும்புகள் ! 
சைகை யாலே பாவனை 
***சாலச் செய்யும் குறும்புகள் ! 
வைகை யோர நாணலாய் 
***வளைந்துக் கொடுக்கும் கரும்புகள் ! 

சோக முற்ற வேளையில் 
***சோர்வு நீக்கும் ஔடதம் ! 
தேகம் தளரும் போதிலே 
***தேற்று விக்கும் யௌவனம் ! 
நோக வைக்க அறிந்திடா 
***நுட்ப மான சௌந்தரம் ! 
வேகம் நிறைந்த வாழ்விலே 
***வெற்றி கூட்டும் மந்திரம் ! 

மழலைப் பேச்சில் மயக்கிடும் 
***மனத்தில் மகிழ்ச்சி நிறைத்திடும் ! 
பழகப் பழக இனித்திடும் 
***பாலும் கூடப் புளித்திடும் ! 
அழகில் முல்லை தோற்றிடும் 
***அகத்தில் சிலிர்ப்புத் தோன்றிடும் ! 
குழவி யுள்ள வீட்டிலே 
***குடும்ப உறவும் சொர்க்கமே !

மழைக்கு ஒரு விண்ணப்பம் ....!!!




மழையே ! 
இன்னும் நீ பெய்தழிப்பாய் என்று 
இங்கும் அங்கும் 
தகவல்களின் உலா 
வானிலை அறிவிப்பு முதல் 
வாட்ஸ்-அப் வரை ! 

உன்னால் விளைந்த 
பாதிப்புகளால் 
உனக்கே அழுகை 
முட்டிக்கொண்டு வருகிறதோ ? 

கருணை வள்ளலே 
கண்ணீர் சிந்திவிடாதே ! 
அடக்கிக்கொண்டு 
வானவீதியில் நடமாடு ! 
அழைக்கும் போது மட்டும் வா ! 

உன்னை .... 
கண்டிக்கவில்லை 
கனிவாய்தான் சொல்கிறோம் .... 
நாங்கள் எங்களை 
ஆயத்தப்படுத்திக் கொள்ள 
அவகாசம் கொடு !

Saturday, December 12, 2015

பொங்கிவரு மின்பம் பொலிந்து !



மங்கையவள்  கைகள் மகரயாழ் மீட்டிட 
செங்கனிவாய்ப் புன்னகை சிந்திட -அங்கமும்  
தங்கமென மின்னிடத் தையலவள் பாடுகையில் 
பொங்கிவரு மின்பம் பொலிந்து .

அவள் ....!!!




தலைவிதியை நொந்தபடி தலையணையில் முகம்புதையாள் !
மலையளவு துயர்வரினும் மங்கையவள் மதிமயங்காள் !
அலைதவழும் ஆழியைப்போல் அடங்காத நினைவுகளை 
உறைபனியின் திடமாக உள்ளத்தில் எதிர்கொண்டாள் !!

கடவுளின் ஆதங்கம் ....!!

மனிதா !

நீ .....இயற்கையை சிதைத்தாய் !
நீர்நிலை வழியை அபகரித்தாய் !
தண்ணீர் தாங்கிடும் மேனியில் 
அலங்கார அடுக்ககங்களும்
ஆடம்பர வீடுகளும் எழுப்பினாய் !

ஆற்றின் அபயக்குரலும் கேட்கவில்லை 
அபாய அறிவிப்பும் எட்டவில்லை!
கண்ணீருடன் அவை எங்குசெல்லும் ?

நிறைந்ததும் போவதெங்கே ?...தவித்தது 
பாதை தேடியே ஓடியது 
தடந்தெரியாது கண்டவழியெங்கும் 
புகுந்தோடியது !

நியாயம் கேட்டு இல்லக்கதவைத் தட்டியதோ ?
சீற்றங்கொண்டு சிங்காரச் சென்னையை 
சீரழித்ததோ ?

மனிதா ...!
உன் பிழையைத் தட்டிக் கேட்காமல் 
வாய்மூடி மௌனியாய் கற்சிலையாய் 
அமர்ந்ததால் தானோ ....

பாய்ந்து வந்த வெள்ளம் 
ஆலயப்பிரவேசம் செய்ததோ ?
ஆசாரமுடன் புனிதநீரால் அபிஷேகம் நடந்த எனக்கு 
முழுவீச்சாய் முழுநேர நீராட்டு நடந்ததே !

சந்தனத்தில் மணந்த என்னை 
சாக்கடை நீரில் நாறவிட்டது யார்பிழையோ ?
இனியேனும் .....
அதனதன் பாதையை அவற்றிற்கே விட்டிடுவீர் !
அவரவர் தேவையை அல்லலின்றி பெற்றிடுவீர் !

  

Thursday, December 10, 2015

அரவணைப்பாயா ...??



தலையில் குடமேந்தித் தள்ளாடி  நின்றால்   
அலையடிக்கு முள்ளத்தில், அன்பே !-சிலையாய்க் 
குழலிசையில் மெய்மறந்து கொஞ்சியழைப் பாயா ? 
அழகே! அரவணைப்பா யா ?

Wednesday, December 9, 2015

போதும் அடங்கு !



போதுமட்டும் பெய்துவிட்டுப் போய்விடுவா யென்றிருந்தோம் 
ஏதுகுறை வைத்தோம் இயம்பிடுவாய் !- காதுனக்குக் 
கேட்காதோ? வான்மழையே! கெஞ்சுகிறோம் ஆடிய 
ஆட்டமும் போதும் அடங்கு .