Thursday, August 6, 2015

கலந்தாடி மகிழ்ந்தனனே ....!!







இளந்தென்றல் இதமளிக்க எழில்மேகம் திரண்டிருக்க
வளங்கொழிக்கும் நதிக்கரையில் வண்ணமயில் பார்த்திருக்க
உளம்மகிழ ராதையவள் ஒயிலாக நடனமிட 
களங்கமில்லாக் கண்ணனுமே கலந்தாடி மகிழ்ந்தனனே ! 

கார்கூந்தல் சுழன்றாட கைவளையும் சேர்ந்தாட 
மார்தவழும் ஆரமுடன் மயிலிறகும் மகிழ்ந்தாட 
நேர்வகிடின் உச்சியிலே நெற்றிச்சுட் டியுமாட 
சோர்வின்றி இருவரையும் சொக்கவைக்கும் நாட்டியமே !


Wednesday, August 5, 2015

மண்ணுண்டோன் லீலை வனப்பு ....!!!



கண்ணனைச் சுற்றியிளங் கன்னியர் வீற்றிருக்க 
வெண்ணிலவு வெள்ளொளியில் வேணுகா  னம்பிறக்க 
பண்ணிசையில் அன்னங்கள் பக்கத்தில் வந்துநிற்க 
விண்சூழும் மேகம் விரைந்து  

கண்ணாடிக் கைவளையல் காற்றில் கலந்தாட  
அண்ணார்ந்துப் பார்த்திட்ட ஆம்பலும் பூத்திருக்க 
கண்டோமே காட்சிதனைக் கண்குளிரச் சித்திரத்தில் 
மண்ணுண்டோன் லீலை வனப்பு . 

அலை தவழும் ஆழியிலே ....!!!



அலைதவழும் ஆழியிலே 
குலைநடுக்கும் குளிரினிலும் 
உலைகொதிக்க வேண்டுமெனில் 
தொலைதூரம் படகில்போய் 
வலைவீசி மீன்பிடித்து 
கலையாத கனவோடு 
விலைபோகு மென்றுநம்பும் 
நிலைதானே நித்தமுமே …!!

காதல் வெண்பா ...!!!



வேங்குழலின் ரீங்காரம் தேங்கியதோர்ப் பூங்காவில் 
பூங்கொடியாள் ஏங்கினளே தூங்காமல் - சோங்கியப் 
பைங்கிளியை ஆங்கணே வேங்கையவன் பூங்கரத்தில் 
தாங்கிடவே ஓங்கிடும் பாங்கு .

Tuesday, August 4, 2015

மெய்சிலிர்க்க வைத்திடுதே !




உச்சியிலே அலங்காரக் கொண்டைப் போட்டு 
***உன்னதமாய் உயிர்ப்பித்து மிளிர்ந்த கோலம் 
பிச்சிமலர் மாலையிட்டுக் குஞ்சங் கட்டி 
***பின்னலிட்ட சடையினிலே துலங்கும் வாசம் 
கச்சிதமாய்க் குத்துக்கா லிட்டு வீற்று 
***கைமடக்கித் தாங்குகையில் பொங்கும் சீலம் 
மிச்சமின்றி எழிலனைத்தும் ஒன்றாய் சேர்ந்து 
***மெய்சிலிர்க்க வைத்திடுதே எந்தன் தாயே !! 

பட்டுடுத்தி நகைபூட்டி நீறு பூசி 
***பாங்குடனே மருதாணி கையி லிட்டு 
பொட்டுவைத்த வதனத்தில் கருணைப் பொங்க 
***பொற்பதத்தில் கொலுசுகளின் சத்தம் கொஞ்ச 
மெட்டியொலி செவியோரம் மெல்லக் கேட்க 
***மெய்மறந்து போகுமெந்தன் உள்ளம் அம்மா 
எட்டிநின்று ரசிக்கையிலே இதயம் துள்ளி 
***ஏங்கிநிற்கும் உன்னருளைப் பெறவே தாயே ! 

ஆடிவெள்ளி அலங்காரம் அழகு அம்மா 
***அன்னையுந்தன் எழிற்கோலம் கண்டோம் அம்மா 
பாடிடுவோம் உன்புகழை நாளும் அம்மா 
***பக்தியுடன் வணங்கிடுவோம் உம்மை அம்மா 
கோடிநாம அர்ச்சனையால் தொழுவோம் அம்மா 
***கோயிலிலே எழுந்தருளி ஏற்பாய் அம்மா 
வாடிநிற்கும் வேளையிலே காப்பாய் அம்மா 
***வாழ்வினிலே தீபஒளி ஏற்று தாயே !

கள்ளமில்லாச் சிரிப்பில் ....!!





கள்ள மில்லாச் சிரிப்பில் 
***கரைந்து போகும் இதயம் !
அள்ளு மழகில் நெஞ்சம் 
***அணைத்துக் கொள்ளக் கெஞ்சும் !

வெள்ளை முல்லைப் பற்கள் 
***விரிந்த இதழுள் மலரும் !
புள்ளிக் கோலம் போலே 
***புன்ன கையால் பூக்கும் !

வெள்ளி நிலவு வதனம் 
***வெகுளி யான உள்ளம் !
துள்ளும் கெண்டை மீன்கள் 
***துடிக்கும் விழியி னுள்ளே !

கிள்ளிக் கன்னம் கொஞ்சக் 
***கிலேச மெல்லாம் தீரும் !
தெள்ளு தமிழில் பேசித் 
***தேனைப் பாய்ச்சும் காதில் !

பிள்ளை மொழியின் இன்பம்  
***பெற்றால் தானே புரியும் 
எள்ளித் தள்ள வேண்டாம் 
***ஏழைச் சிறுமி என்றே !

Saturday, August 1, 2015

பாடும் பணியே பணியாய் அருள்வாய் ....!!




ஆல கண்டன் அருமைப் புதல்வா 
கோலக் குமரா குறத்தி மணாளா
சூல மேந்தித் துடிப்பாய் வருவாய்  
காலன் வருமுன் காப்பாய் முருகா !

சேவற் கொடியோய் செந்தில் வேலா 
பாவம் தீர்ப்பாய் பழனி வேலா 
ஆவல் கொண்டே அழைத்தேன் அழகா 
தேவ யானை தேவி நாதா !

விருத்தம் பாட விரைந்தே வாராய் 
வருத்தம் தீர வரமும் தாராய்
குருவாய் எந்தன் குறைகள் கேளாய் 
திருவாய் மலர்ந்தே தீர்ப்பைக் கூறாய் !

ஆடும் மயிலில் அமர்ந்தே வருவாய் 
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
ஈடு இணையே இல்லா தேவா 
வீடு பேற்றை வேண்டத் தருவாய் !