Monday, June 18, 2018

பல்லவர்கள் ...!!!

காஞ்சிபுரம் அண்ணா கலையரங்கில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் சங்கங்கள் மாநாட்டின் மூன்றாம் நாளான 10-6-2018 இன்று பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் " பல்லவர்கள்" என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை .!

தமிழ் வாழ்த்து !
**********************
கன்னல் மொழியில் கவிசொல்ல விங்குவந்தேன்
என்றமிழ்த் தாயே! இனியவளே ! - நின்னருளால்
பல்லவர் மாண்பினைப் பாட, அமிழ்தனைய 
சொல்லெடுத்துத் தாராய் தொடர்ந்து. 

தலைமை வாழ்த்து !
****************************
பெருமைமிகு பைந்தமிழால் பேற்றினைப் பெற்றே 
அருந்தொண்டு தாய்மொழிக் காற்றும் - கருமலையார் 
நற்றலைமை யேற்க நயந்து பணிந்திடுவேன்
பொற்புடன்வெண் பாவால் புகழ்ந்து. 

பல்லவர்கள் ....!!!
***********************
பாரத மாண்ட பல்லவர் மாண்பைப் 
***பாங்குடன் சரித்திரம் பேசும் !
வீரமாய்ப் போரில் வெற்றிக ளீட்டி
***மேன்மையாய்த் திகழ்ந்ததைச் செப்பும் !
தாரணி போற்ற ஏழுநூ றாண்டு 
***தகைமையாய் ஆண்டதைச் சொல்லும் !
சீருடன் கலைகள் செம்மையாய்ப் பேணிச்
***சிறந்ததைச் சான்றுகள் காட்டும் !

பல்லவர் தோற்றம் பற்றிய கூற்றில் 
***பலவித கருத்துகள் மோதும் !
வல்லவ ரவர்தாம் யாரெனக் குறிப்பாய் 
***வரையறை செய்வதும் கடினம் !
பல்கலை வளர்க்கும் காஞ்சிமா நகரைப் 
***பல்லவர் தலைநக ராக்கிக் 
கல்வியிற் சிறக்க விரும்பிடு வோரைக் 
***காந்தமா யீர்த்ததிவ் வரசே !

இசைக்கலை யோடு கட்டடக் கலையும் 
***எழில்மிகு ஓவியக் கலையும் 
அசத்திடு மாடற் கலையொடு சிற்பம் 
***அழகுற மிளிர்ந்தபொற் காலம் !
வசப்பட வைக்கும் கலைநயங் கண்டு 
***மனமயங் காதவ ரில்லை !
திசைதொறு மின்றும் பல்லவர் பெருமை 
***செப்பிடா ஏடுக ளுண்டோ ? 

கடிகைகள் வேதப் பயிற்சிகள் அளிக்க 
***காஞ்சிமா நகரிலே உண்டு !
படிப்பதற் காக மாணவர் பலரும் 
***படையெடுத் தனர்கடி கைக்கு !
வடமொழி யோடு நற்றமிழ் மொழியும் 
***வளமுடன் விளங்கிய தன்று !
துடிப்புடன் பாக்கள் படைத்திடும் ஆற்றல் 
***தொடர்ந்தது தமிழிலும் நன்றே !

பண்ணொடு பாடி இன்புறும் வகையில்
***பக்தியி லக்கியம் தோன்றி 
எண்ணிலாப் பாக்கள் இறைவனைப் போற்றி
***எழுந்தது பல்லவர் காலம் !
வண்டமி ழாலே நாயன்மார் ஆழ்வார் 
***வண்ணமா யியற்றிய பாக்கள் 
மண்ணிலே பக்தி நெறிகளைப் புகட்டும் 
***மகத்துவ மிக்கது தானே !!

மன்னருள் சிறந்த மகேந்திர வர்மன் 
***மாபெரும் வீரனாய்த் திகழ்ந்தான் !
தன்னிக ரில்லாத் திறமைகள் பெற்றுத் 
***தனியிடம் தனக்கெனக் கொண்டான் !
இன்னிசைப் பாக்க ளியற்றிய வரசன் 
***ஈடிலாப் படைப்புகள் செய்தான் !
பன்முகத் திறமை கொண்டதால் பட்டம் 
***பலப்பல வென்றனன் நன்றே !

அலைதவழ் ஆழிக் கரையினி லமைந்த
***அழகியத் துறைமுக நகராம் 
கலையெழில் மின்னும் மாமல்ல புரத்தின்
***கடற்கரைக் கோயிலின் தோற்றம் 
விலைமதிப் பில்லாச் சிற்பங்க ளோடு
***விளங்கிடும் அற்புதக் கோலம் 
பலவகைச் சிறப்பால் மல்லையும் உலகப்
***பண்பாட்டுச் சின்னமாய்த் திகழும் !!

குடைவரைக் கோயில் பல்லவர் புகழைக்
***கோபுரக் கலசமாய் உயர்த்தும் !
கடற்கரை யருகில் கற்றளி யென்ற
***கற்கோயில் கவினுற விளங்கும் !
படைப்பினில் பஞ்ச பாண்டவர் ரதங்கள்
***பார்க்கையில் விழிகளும் விரியும் !
புடைப்புச்சிற் பங்கள் தொகுதிகள் யாவும் 
***புதுமையாய்ச் செதுக்கிய தழகே !!

மன்னவன் இராச சிம்மனும் இசையில் 
***வல்லமை பெற்றிருந் தானே ! 
அன்னவன் படைப்பாம் கைலாச நாதர் 
***ஆலயம் காஞ்சியின் வரமே !
உன்னத சிற்பக் கலைநயம் மிளிர 
***உயர்ந்ததே இவ்வெழிற் கோயில் !
தென்கயி லாய மெனவழைப் பதிலே 
***தெளிவுறும் சிறப்புக ளன்றோ ?

செறிவுடன் விளங்கும் யுவான்சுவாங் என்ற 
***சீனத்துப் பயணியின் குறிப்பால் 
அறியலாம் காஞ்சி மக்களின் கல்வி 
***அறிவுடன் வீரமும் மற்றும் 
பிறசெப்பே டும்கல் வெட்டுகள் பலவும் 
***பெருமையைக் காட்டிடும் நன்றே !
துறவியாம் போதி தர்மனிம் மரபில் 
***தோன்றிய பல்லவன் மகனே !!

பாரினில் பெரிய அங்கோர்வாட் கோயில் 
***பல்லவன் கட்டிய தன்றோ ?
போரினில் வென்ற கம்போடி யாவில் 
***பொற்புடன் எழுப்பினன், இரண்டாம் 
சூரிய வர்மன் கலைநயம் கொஞ்ச 
***தூயவன் திருமாலுக் காக !
பேருடன் வாழ்ந்த பல்லவர் வம்சப் 
***பெருமையில் இதுவுமோர் சான்றே !

நன்றி ...!!!
***************
கன்னித் தமிழில் கவியரங்கம் காஞ்சியில் 
என்றும் நினைவில் இனித்திடும்! - அன்புடன்
நன்றி யுரைத்திடுவேன் நானிருகை கூப்பியிம் 
மன்றந் தனிலே மலர்ந்து.

No comments:

Post a Comment