Wednesday, October 10, 2018

பேத்திக்குப் பிறந்தநாள் வாழ்த்து ....!!!


எங்கள் வீட்டுத் தேவதை
***எழிலாய்ப் பூத்த தாரகை!
தங்க முகத்தில் புன்னகை
***ததும்ப விரியும் நறுமுகை!
செங்க ரும்பின் சுவையெனச்
***சிந்தும் மொழியின் இன்சுவை!
பொங்கும் இன்பத் தேன்நிலா
***பொம்மி இவள்தான் வினுஷரா!
கன்னல் பேச்சில் மயக்குவாள்
***கண்ணால் கதைகள் சொல்லுவாள்!
அன்பால் மனத்தை உருக்குவாள்
***அக்கா வென்றால் உருகுவாள்!
அன்னை தந்தைச் செல்லமாய்
***அமுதத் தமிழின் இனிமையாய்
என்றும் வாழ்வில் சிறந்திட
***இதயங் கனிந்து வாழ்த்துவேன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வினுஷரா செல்லம்💐💐💐🎈🎈🎈🎉🎉🎉🎁🎁🎁🎂🎂🎂🍫🍫🍫🌹🌹🌹

Monday, October 8, 2018

தமிழா உடனே விழி ...!!!

தமிழா உடனே விழி ...!!!
********************************

தமிழ னென்று சொல்லடா
தலைநி மிர்ந்து நில்லடா!
அமுத மொழியைக் கேட்டதும்
அகம் சிலிர்க்கு தல்லவா ?
கமழு மலரி ருக்கையில்
காகி தப்பூ தேவையோ ?
நமது தமிழி னிக்கையில்
நஞ்சைக் கலத்தல் நியாயமோ ?
படிக்க எளிய செம்மொழி
பாரிற் சிறந்த இன்மொழி
தடைகள் தாண்டி வந்துநீ
தமிழைத் தாயாய் மதித்திடு !
அடச்சீ நம்மை ஆங்கிலம்
அடிமை யாக்கி யாள்வதா ?
உடன் விழித்துக் கொள்ளடா
உலகைத் தமிழால் வெல்லடா !
கொடுமை கண்டு பொங்கிநீ
கொள்கைக் காகப் போரிடு !
மடமை தன்னை மாற்றிட
மரபின் பெருமை காத்திடு !
திட மனத்தில் துணிவெனும்
திறன் வளர்த்துக் கொள்ளடா !
கடமை யாற்றி உயர்ந்திடு
கர்ம வீரன் வழியிலே !
உழைக்கும் வருக்கம் மேம்பட
உரிமைக் குரலெ ழுப்படா !
அழிவி லிருந்து காத்திடா
அரசால் என்ன பயனடா ?
உழவர் நிலைமைத் தாழ்ந்திடில்
உணவுக் கென்ன செய்குவோம் !
விழிப்பு டன்நீ செயல்பட
வீறு கொண்டெ ழுந்திடு !
மதுவுக் கடிமை யாகிடில்
வாழ்வு நரக மாகிடும் !
மதங்க ளென்ற போர்வையில்
மதம் பிடித்துத் திரிவதா ?
வதைத்த தெல்லாம் போதுமே
மனித நேயம் காத்திடு !
புதிய பாதை வகுத்துநீ
புனித னாக வாழ்ந்திடு !
இயற்கை நமக்கு வரமடா
இதனை நினைவில் வையடா
இயைந்து வாழப் பழகடா
இலையேல் நாசம் நமக்கடா
முயன்றால் வானும் வசப்படும்
முன்னோர் வார்த்தை பலமடா !
தயக்க மென்ன சொல்லடா
தமிழா! விழித்துக் கொள்ளடா !!!

சியாமளா ராஜசேகர்

வெண்பாக்கள்

ஈற்றடிக்கு வெண்பா!
**********************
#நெஞ்சத்தில்_நிற்கும்_நிறைந்து!
கண்ணால் கதைபேசிக் காத லுறவாடி
வண்ணமலர்ச் சோலையில் வந்தணைத்(து) - அன்புடன்
பஞ்சனைய செவ்விதழால் பாவையவள் தந்தமுத்தம்
நெஞ்சத்தில் நிற்கும் நிறைந்து.
சற்றும் விழிகள் சலிக்காமல் பார்க்க,வான்
முற்றத்தில் கோலம் முளைத்திருக்கும் - பற்பல
வண்ணத்தில் பூத்து வளைந்தழகாய்த் தோன்றுமே
விண்ணில் விழுந்த விதை.

முருகன் தோடகம் ...!!


அடியார் மனமே கதியா யுறையும்
அழகா! அலைவாய்க் கரையின் அரசே !
முடியா முதலா மரனின் மகனே!
முருகா குமரா சரணம் சரணம் !! ..1.
உமையாள் தனயா! உயிரே ! உறவே!
உளறி யழுதேன்! உருகித் தொழுதேன்!
தமிழா மமுதைத் தயவா யருளே
தணிகா சலனே சரணம்! சரணம் !! 2.
தொடரும் வினையால் துவளும் பொழுதில்
துணையா யுனையே உளமும் கருதும்
இடமும் வலமும் எளியே னருகில்
எழுவாய் முருகா சரணம்! சரணம் !! 3.
திருமால் மருகா! திருவே! சுடரே!
தெளிவை யருளத் தருண மிதுவே !
குருகுக் கொடியோய்! குறைகள் களையக்
குருவாய் வருவாய் சரணம் சரணம் !! 4.
பிறவிப் பிணிதீர்த் திடவே மயிலில்
பிரிய முடனே இனிதே வருவாய் !
மறவே னுனைநான் வடிவே லவனே
வயலூர் முருகா சரணம் சரணம் !! 5.
துணைவி யருடன் குலவி எழிலாய்
சுகம தருள இனிதே வருவாய் !
பணியு மடியார் பரிவில் மகிழும்
பழனி முருகா சரணம் சரணம் !! 6.
பகலு மிரவும் நொடியும் மறவா
படரும் நினைவைத் தருவாய் பரிசாய்
முகமா றுடையோய்! இளமை யுடையோய் !
முருகா! இறைவா ! சரணம் சரணம் !! 7.
மலருள் மணமாய்க் கனியுட் சுவையாய்
வளியாய் வெளியாய்ப் புனலா யனலாய்
நிலமாய் மலையாய் முகிலுள் துளியாய்
நிறையும் முருகா சரணம் சரணம் !! 8.
சியாமளா ராஜசேகர்
( கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களின் வழிகாட்டலில் எழுதியது )

ராகத்தில் வந்த ரசம் ...!!!

ஈற்றடிக்கு வெண்பா....!!!
*************************
மங்கள மார்கழியில் மாலைப் பொழுதினில்
சங்கீத முள்ளத்தைத் தாலாட்டும்! - பொங்கிடும்
சோகத்தி லும்சுவைக்கும் தூய பிலஹரி
ராகத்தில் வந்த ரசம்.
காற்றில் தவழ்ந்துவந்து காதோரம் தேன்பாய்ச்சும்
ஊற்றாய்ப் பெருகி உளமுருக்கும்! - வீற்றபடி
பாகவதர் மெய்யுருகிப் பாடிய பைரவி
ராகத்தில் வந்த ரசம்.
அள்ளிப் பருகிட ஆவலுடன் காத்திருந்து
தெள்ளுதமிழ்ப் பாட்டைச் செவிகேட்க - உள்ளத்தின்
தாகந் தணிக்குமோ சாயா தரங்கிணி
ராகத்தில் வந்த ரசம்.
சாயாதரங்கிணி - இராகத்தின் பெயர்

சந்த வேற்றொலி வெண்டுறை



நதியோடும் வழியெங்கும் நாணல்புல் அசைந்தாட
நளினம் கொஞ்சும் !
கதிராடும் கழனியிலே காற்றுடனே கதைபேசிக் 
கண்கள் துஞ்சும் !
மதியின் வரவில் மனமுந் துள்ளக் 
கொதித்த நினைவும் குளிர்ந்தி டாதோ ?
சியாமளா ராஜசேகர்

அதியழகு கோலம் ...!!!




கதிர்மெல்லக் கரம்நீட்டி இருள்துடைத்து விரியும்
***கவினழகாய்ப் மலர்ந்தவல்லி மதிமறைய மயங்கும் !
முதிராத பூங்காற்று சுகமாகத் தழுவும்
***முகிலினங்கள் அலையலையாய்ப் புலர்பொழுதில் உலவும் !
அதியழகாய்க் கீழ்வானம் சிவந்திருக்கும் கோலம் 
***அதுகண்டு துயில்கலைந்து விழித்திடுமே ஞாலம் !
உதிக்கின்ற காட்சிதனை அனுதினமும் கண்டும் 
***ஒருநாளும் சலித்ததில்லை இருவிழிகள் என்றும் !!
சியாமளா ராஜசேகர்