Thursday, March 29, 2018

தங்கநிலா வானிலே ...!!!


தங்கநிலா வானிலே இன்பவுலா போகையில் 
தரணியெலாம் மகிழுதே !
மங்காமல் இரவெல்லாம் ஒளிதந்து காய்கையில்  
வண்ணநிலா கொஞ்சுதே !
வெங்கதிரோன் வரும்வரை நல்லாட்சி செய்கையில்  
விண்ணகமும் குளிர்ந்ததே !!
திங்களொரு நாளிலே விடுப்பெடுத்து மறைகையில்
சிந்தைவாடிக் கலங்குதே !

கண்சிமிட்டும் தாரகைக் கூட்டத்தின் நடுவிலே 
கால்களின்றித் தவழுதே !
விண்முகில்கள் திரையிட அதைமெல்ல விலக்கியே 
விளையாட அழைக்குதே !
வெண்ணிறத்தில் பளிச்சென இருள்துடைத்து விட்டதும் 
மெல்லினமாய்ச் சிரிக்குதே !
மண்ணிலுள்ள குளத்திலே தன்வடிவம் கண்டதும் 
மயக்கத்தில் மூழ்குதே !!

அழகுநிலா கண்பட வாவியிலே அல்லியும்
அரும்பவிழ்த்துச் சிரிக்குதே !
கழனியிலே கதிரெலாம் கவின்நிலவின் ஒளியிலே 
கதைக்கதையாய்ப் பேசுதே !
முழங்கிவரும் அலைகளும் துள்ளலுடன் நனைத்திட 
முழுநிலவு சிலிர்க்குதே !
நிழல்கூட அருகினில் ஓவியமாய்த் தோன்றிட 
நிலவுமுகம் மலர்ந்ததே !!

சியாமளா ராஜசேகர் 

Tuesday, March 27, 2018

சூட்டுவேனே !!

ஆற்றில் நீந்தும் கெண்டை மீனை 
***அன்பே உன்றன் கண்ணில் கண்டேன் !
காற்றில் வந்த உன்றன் பாட்டு 
***காதில் தேனாய்ப் பாயக் கண்டேன் !
ஊற்றெ டுத்த காத லாலென்
***உள்ளம் பூத்தே ஆடக் கண்டேன்  !
ஏற்றுக் கொண்டால் வான வில்லை  
***எட்டிக் கொய்து சூட்டு வேனே ....!!!

நடந்தாய் வாழி காவேரி ...!!!


குடகில் பிறந்து தவழ்ந்துவந்து 
***கொள்ளை யழகாய்க் கரைபுரண்டு 
மடங்கிச் செல்லும் வழியெங்கும் 
***மயங்க வைக்கும் கவின்நதியாய் 
அடவி செழிப்பில்  மலர்ந்தபடி 
***அலைகள் கொஞ்சி விளையாட 
நடந்தாய் வாழி  காவேரி 
***நலமே விளைவித் தாய்நீயே !

தென்றல் குளிர்ந்து தாலாட்ட 
***திங்கள் ஒளியில் பொன்னாயுன்
மின்னும் எழிலைப் பருகுதற்கு 
***விழிக ளிரண்டு போதாதே !
உன்னைக் கண்ட மாத்திரத்தில் 
***உவகை யுடனே கவிபிறக்கும் !
நின்னை வணங்கும் கன்னியரின்
***நெஞ்சம் மகிழ வைத்தாயே !

போகும் பாதை எங்குமன்று 
***புனித மாக்கிச் சென்றிருந்தாய் !
தாகம் தீர்க்க ஏன்மறந்தாய் 
***தமிழர் குரலைக் கேளாயோ ?
பாகு பாடே இல்லாமல் 
***பாய்ந்து வரவே விழைகின்றோம் !
வேக மாகத் தடைதாண்டி 
***விரைந்து நீயும் வருவாயே ..!!!

( மா மா காய் )

சியாமளா ராஜசேகர் 

நீர் - முதல் சொல்

இயற்கையழகு...!!!
*************************
நீரோடும் காவிரியில் நீந்துகின்ற சிற்றலைகள் 
ஏரோடும் நெல்வயலை இன்பமுடன் கண்டோடச் 
சீரோடு வானுலவும் வெண்ணிலவைத் தொட்டணைக்கக்
காரோடும் கோலத்தைக் காண்.

இஃதின்றேல் ....!!!
************************
நீரின்றேல் வாழ்வு நிலத்தில் கிடையாது 
தேரின்றேல் வீதியில் தெய்வமுலா வந்திடாது 
மாரியின்றேல் தாவரங்கள் மண்ணில் செழிக்காது  
காரின்றேல் வானழகா காது.

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

சியாமளா ராஜசேகர் 

மடமையைக் கொளுத்துவோம் !!!

பெண்மையைப் போற்றிப் பேணிடும் நாட்டில்
***பெருமைகள் குறைவறக் கூடும் ! 
கண்ணிமை போலே காத்திடும் பெண்ணால்
***கவலைகள் தலைதெறித் தோடும் !
திண்மையாய் நாளும் நன்னெறி பேணச்
***செம்மையாய்த் திகழ்ந்திடும் வீடும் !
புண்பட அவளை வார்த்தையால் தைத்தால்
***பொங்கிடு முள்ளமும் வாடும் !!!
வித்தென விளங்கி விருட்சமாய் வளர்த்து
***வெற்றியை வசப்பட வைப்பாள் !
மத்தளம் போலும் அடியிரு பக்கம்
***வாங்கினும் தன்னிலைத் தளராள் !
எத்தனை யிடர்கள் எதிர்ப்படும் போதும்
***இரும்பெனத் தாங்கிடும் மங்கை
சத்தியம் காத்துக் கடமையைச் செய்து
***சாதனை படைத்திடத் துடிப்பாள் !!!
வேதனை வரினும் ஒடிந்துவி டாமல்
***வேரெனத் தாங்குவாள் அவளே !
மாதவ மென்றே மங்கையர் வாழ்வை
***மண்ணிலே மாண்புறச் செய்வோம் !
பேதமே யின்றிச் சமத்துவத் தோடு
***பெண்மையை உலவிட வைப்போம் !
மாதரை இழிவாய் நடத்திடத் துடிக்கும்
***மடமையைக் கொளுத்திடு வோமே ...!!!

என்னுயிர்த் தோழி ...!!!

எனக்கோர் தோழி இருக்கின்றாள் 
***என்னுள் கலந்தே உயிர்க்கின்றாள் ! 
மனத்தில் உழலும் துயரறுக்க 
***மௌன மொழியாய்த் துணையிருப்பாள் ! 
வனப்பாய் வளைய வந்தவளும் 
***மன்றந் தனிலே சிறக்கவைப்பாள் ! 
கனவில் கூடத் தோன்றிடுவாள் 
***கருத்தாய் வடிவம் காட்டிடுவாள் !! 

இயல்பாய் வருவாள் சிலநேரம் 
***இழுத்தும் வருவேன் சிலநேரம் 
தயவாய் வருவாள் சிலநேரம் 
***தவிக்க விடுவாள் சிலநேரம் 
மயங்கச் செய்வாள் மரபினிலே 
***மையல் கொண்டே அரவணைப்பேன் ! 
முயன்றும் தோற்பேன் அவளிடத்தில் 
***முடிவி லிணைவேன் வெற்றியுடன் !! 

அள்ளு மழகைப் படம்பிடித்தே 
***அவளுள் செதுக்கிக் களித்திடுவேன் ! 
முள்ளாய்த் தைக்கும் கொடுமைகளை 
***முனைந்து முடிந்து வைத்திடுவேன் ! 
கள்ள மில்லாக் காதலையும் 
***கனிவா யினிதே கலந்திடுவேன் ! 
கிள்ளை மொழியாய்ப் பிதற்றிடினும் 
***கிறுக்காய்த் தொடர்வேன் அவளுடனே !! 

மின்னல் கீற்றாய் வெளிப்பட்டே 
***மிடுக்காய் நடையில் கவர்ந்திடுவாள் ! 
தென்றல் காற்றாய் வருடிவிட்டுச் 
***சிலிர்த்த இதயம் நனைத்திடுவாள் ! 
என்றன் இனிய தோழிக்கே 
***இனிதாய் வாழ்த்து பாடிடுவேன் ! 
கன்னல் பெண்ணாம் கவிதையவள் 
***கண்ணின் மணியாய் வாழியவே !! 

சியாமளா ராஜசேகர்

காதற்சுவையில் கவினுறும் இலக்கியங்கள் ...!!!


சங்ககால இலக்கியத்தில் பேசப் பட்டத்
***தகைமையுடன் திகழ்ந்ததிந்த உண்மைக் காதல் !
சிங்கமெனக் கம்பீர நடையைக் கொண்ட 
***சேரமன்னன் ஆட்டனத்தி அழகில் சொக்கி
மங்காத புகழுடைய கரிகால் சோழன்
***மகளான ஆதிமந்தி மையல் கொண்டாள் !
பொங்கிவரும் ஊற்றாகக் கவிதை பாடும்
***புலமையொடு நாட்டியமும் கற்றி ருந்தாள் !!
ஆட்டனத்தி கழார்த்துறையில் நடன மாட
***அவனுடனே காவிரியு மிணைந்தே ஆட
நாட்டமிகக் கொண்டவளும் கூந்தல் தன்னில்
***நாசுக்காய் மறைத்துள்ளே இட்டுச் செல்லக்
கூட்டத்தார் கண்முன்னே ஆற்றுள் போனாள்
***கோமானும் ஒதுங்கினனே கரையி னோரம் !
மீட்டவனைக் காப்பாற்றி மருதி யென்பாள்
***வேந்தனுடன் வாழ்ந்துவந்தாள் அன்பு கொண்டே !!
காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்
***கண்ணீரோ டூரூராய் அலைந்தாள் ஆதி !
வேதனையால் பேதுற்றுப் புலம்பிப் பொங்கி
***மெல்லியலாள் வழிநெடுகத் தேடி னாளே !
பேதையவள் உருக்குலைந்து மயக்க முற்றுப்
***பிதற்றியதை மருதியுந்தான் கண்டு கேட்டாள் !
மாதரசி தன்னிணையை ஒப்ப டைத்தாள்
***வலிமிகவே தனைக்கடலுள் மாய்த்துக் கொண்டாள் !!
உண்மையானக் காதலுக்குத் தோல்வி யில்லை
***எடுத்தியம்பும் இக்கதையில் வஞ்ச மில்லை
கண்மணியாய்க் காத்திருத்து விட்டுத் தந்த
***கற்பரசி மருதிக்கு மீடே யில்லை
வண்டமிழில் இலக்கியங்கள் காட்டு மிந்த
***மகத்தான காதலிலே அழகும் அள்ளும் !
எண்ணற்ற கவின்காதல் கதைகள் கொண்ட
***இலக்கியங்கள் நிலைத்திருக்கும் நெஞ்சில் நன்றே !!
சியாமளா ராஜசேகர்